Published : 16 Dec 2018 11:49 AM
Last Updated : 16 Dec 2018 11:49 AM

கற்பிதமல்ல பெருமிதம் 36: உடல் வளர்த்து உயிர் வளர்ப்போம்

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர் எந்த நேரமும் படிப்பு, படிப்பு என்றிருந்தனர். அவர்கள் தினமும் சிறிது நேரம் விளையாடினால் புத்துணர்வாக இருக்கும் என்று பள்ளி நிர்வாகம் தினமும் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம்வரை ஒதுக்கியது. பையன் களுக்கு ஏகக் கொண்டாட்டம். ஓடினார்கள். கால்பந்து விளையாடினார்கள். ஜிம்னாஸ்டிக் வகுப்பில் பங்கேற்றார்கள்.

பெண்கள் பகுதிக்கு வந்த விளையாட்டு ஆசிரியர் புனிதா, 100 பெண்களில் கிட்டத்தட்ட 20 பெண்கள் ஓரமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். ஏன் விளையாடவில்லை என்று கேட்டார். பீரியட்ஸ் என்று சொன்னார்கள். ஆசிரியருக்கு அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று சந்தேகம் வந்தது. அந்த 20 பெண்களில் எல்லோருக்குமே மாதவிடாய் நாட்களாக இருக்கும் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால், அதில் அவருக்குத் தெரிந்த 4, 5 பெண்கள் போன மாதம் பல நாட்களுக்கு இதே காரணத்தைச் சொன்னவர்களாக இருந்தார்கள். எப்படி அவர்களைக் கையாள்வது? கடுமையாகவும் பேச முடியாது; உண்மையா என்று ஆராயவும் முடியாது.

விளையாட்டு நல்லதா?

சமீபத்தில் சென்னைக் கல்லூரி ஒன்றில் ‘அனைவருக்கும் விளையாட்டு’ திட்டத்தின் கீழ் ‘வற்புறுத்தப்பட்டு’ விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண் விளையாடும்போது உடல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டாள். இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கூடவே பல கேள்விகளையும் எழுப்புகிறது. ‘கட்டாய விளையாட்டு’ கூடாது என்று மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். கல்லூரி நிர்வாகம் அனைவருக்கும் விளையாட்டு என்று வைத்தது சரியா தவறா என்று பெற்றோரும் பொதுமக்களும் கேள்விகேட்கின்றனர்.

விளையாட்டு அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கு முன்னதாக மாணவர்களின் உடல்நிலை அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய  வேண்டும். இன்றைக்கும் பல உடற்பயிற்சி நிறுவனங்களில், பயிற்சியில் சேர்வதற்கு முன் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துவரச் சொல்கிறார்கள். அதற்கேற்றாற்

போல் உடற்பயிற்சிகளை வடிவமைக் கிறார்கள். இதேபோல் கல்லூரி நிர்வாகமும் செய்திருக்கலாம். ஒருவேளை செய்திருக்கக்கூடும். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உண்மையாகவே பிரச்சினை இருப்பவர்கள் மட்டும் அல்லாமல், விளையாட விரும்பாத சிலரும் மருத்துவச் சான்றிதழ் வாங்கிவிடக்கூடிய அளவில் நம் சூழல், ஊழல் நிறைந்ததாக உள்ளது.

பெண்களுக்குக் கிட்டாத வாய்ப்பு

இன்றைக்கு விளையாட்டு என்பது அரிதாகிவிட்டது. படிப்புச் சுமை அதிகமாகிவிட்ட நிலையில், பள்ளிகளில் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் வகுப்பைக்கூடப் பாடம் கற்பிக்க எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். பையன்களுக்கு விளையாடப் பிடித்திருப்பதால், விளையாட வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுகிறார்கள்.

ஆனால், சின்னஞ் சிறுமிகளாக இருக்கும்போது விளையாடும் பெண்களில் பெரும்பாலான பெண்கள் வளரிளம் பருவத்தை எட்டும்போது பதுமைகளாகிவிடுகிறார்கள். சிறுவயது முதலே பெண் குழந்தைகளை ஓடாதே, மெதுவாக நட, ஆம்பிளை மாதிரி இல்லாம, மென்மையா அடக்கமா இரு என்று குட்டி, குட்டி வளர்த்துவிடுகிறோம். அவர்களும் தொட்டாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையாக வளர்ந்துவிடுகிறார்கள்.

இன்னும் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால் மென்மைத் தனம் போய்விடும், கறுத்துவிடுவோம் என்றெல்லாம்   நம்புகிறார்கள். நன்றாகச் சாப்பிட்டு  ஓடி, ஆடி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைவிட, ஒல்லியாக இருப்பதுதான் அழகு என நினைக்கிறார்கள்.

பேச்சில் வழிகிற உற்சாகம், நடப்பது, ஓடுவது போன்ற உடல்ரீதியான செயல்பாடுகளில்  பிரதிபலிப்பதில்லை. இன்றைக்கு வளரிளம் பருவத்தினர், அதிலும் குறிப்பாகப் பெண்கள் உடலைச் சரியாகப் பேணாததால் ரத்தசோகை, மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

திறன் வளர்க்கும் மந்திரம்

ஆண்கள் இன்னமும் வீட்டுவேலைகளில் முழுமையாகப் பங்கேற்காத நிலையில் வீடு, அலுவலகம், அவை சார்ந்த வேலைகள் எனப் பெண்கள் சுழல வேண்டியிருக்கிறது. இந்த அழுத்தத்துக்குப் பல இளம் பெண்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை. இளம் தம்பதியினர் மட்டும் இருக்கும் வீடுகளில் துரித உணவு, உடனடி உணவு அல்லது பல வேளைகளில் ஹோட்டல் உணவு போன்றவையே உணவுப் பிரச்சினைக்குத் தீர்வாகின்றன.

வசதி இருந்தாலும், நல்ல காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட நேரமில்லாதவர்களாக இருக்கிறார்கள். மிகவும் ஒல்லியாகவோ பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் பலனாகப் பருமனாகவோ இருக்கிறார்கள். இன்றைக்கு 20, 30 வயதில் இருப்பவர்கள்கூட உடல் பிரச்சினைக்காக அடிக்கடி மருத்துவரிடம் செல்கிறார்கள். மருந்துகளைவிட டாக்டர்கள் அதிகம் பரிந்துரைப்பது  நடைப்பயிற்சியைத்தான்.

உடலைப் பேணுதல் என்பது வெறுமனே வளர்வது அல்ல. ஒரு இயந்திரத்தை எண்ணெய் போட்டு, சர்வீஸ் செய்து வைப்பதுபோல் உடலைச் சீராக வைக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணம் சிறு வயதில் இருந்தே தொடங்க வேண்டும். மூச்சுவிடுவதுபோல் உடற்பயிற்சியும் வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும். குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உணர்வு எழுச்சி போன்றவை இணைந்ததுதான். இதில் எந்தவொரு வளர்ச்சியில் குறை இருந்தாலும் அது மற்ற வளர்ச்சியின் திறன்களையும் பாதிக்கும்.

இங்குதான் பெற்றோரின் பொறுப்பு வருகிறது. குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் மறுபடியும் டியூஷனுக்கு அனுப்புவதில் காட்டும் ஆர்வத்தை அவர்களை விளையாடச் செய்வதிலும் காட்டுங்கள். கண்டிப்பாக ஏதாவதொரு விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்துங்கள். ஆண் - பெண் இருபாலருக்கும் இது பொருந்தும்.

வருடத்துக்கு ஒருமுறையாவது ஹீமோகுளோபின் எண்ணிக்கை, பல் – கண் பரிசோதனை போன்ற அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளில் கவனம்செலுத்துங்கள். மாதவிடாய்த் தொடர்பாகப் பெண்கள் புகார்செய்தால் அலட்சியப்படுத்தாதீர்கள். சிலர் நாடகமும் ஆடலாம். சிலருக்கு உண்மை யாகவே பிரச்சினைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

சிறு வயதிலிருந்தே உணவு, தூக்கம், விளையாட்டு போன்றவை சரியான விகிதத்தில் இருந்தால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல. இப்படித் தன் வாழ்க்கையைப் பேணக் கற்றவர்கள், மனத்திலும் உற்சாகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பெற்றோர்களே, குழந்தைகள் என்பவர்கள் மதிப்பெண் எடுக்க மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். அனைவருக்கும் விளையாட்டு என்பது தேவையானது. விளையாடக் கூடாத  பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். ஆனால், அவர்களும்கூட செஸ், கேரம் போன்ற உள் அரங்க விளையாட்டுகளில் அவசியம் பங்கேற்க வேண்டும் .

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x