Last Updated : 28 Dec, 2018 10:52 AM

 

Published : 28 Dec 2018 10:52 AM
Last Updated : 28 Dec 2018 10:52 AM

டிஜிட்டல் மேடை 2018: பொழுதுபோக்கில் புதிய பூதம்

சினிமா உலகத்துக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மத்தியில் ‘ஸ்மார்ட் திரைக்கான’ இணையத் தொடர்கள் கிளைத்து வளர்ந்து வருகின்றன. 2018-ம் ஆண்டின் புறக்கணிக்க முடியாத பொழுதுபோக்கு ஊடக பூதமாகப் பிரம்மாண்டம் காட்டியதுடன் அடுத்துவரும் 2 ஆண்டுகளில் வெப் சீரிஸின் வீச்சு மேலும் சுழன்றடிக்கும் எனத் தெரிகிறது.

பாலிவுட்டின் அனுராக் கஷ்யப் தொடங்கி கோலிவுட்டின் கௌதம் வாசுதேவ் மேனன் வரை பலரும் வெப் சீரிஸ் உருவாக்குவதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். திரைத்துறையின் நுழைவாயிலாக இருந்த குறும்படங்களின் இடத்தை இப்போது இணையத் தொடர்கள் பிடித்துள்ளதால் புதிய படைப்பாளர்களும் வெப் சீரிஸ் பக்கம் திரும்புகின்றனர்.

பார்வையாளர் மத்தியிலும் தொலைக்காட்சித் தொடர்களைப் பகடி செய்த இளம் தலைமுறையினரே, தணிக்கை இல்லாத இணையப் படைப்புகளால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வருடங்களாகத் தரையைத் தொட்ட ’டேட்டா’ கட்டணமும் விரியும் ஸ்மார்ட்ஃபோன் திரைகளும் இவர்களை இணையக் கடலில் மூழ்கடித்தன.

செயலிகளும் திரட்டிகளும்

2015-ல் தொடங்கிய யூடியூப் தொடர்களே 2018 ஆண்டின் தொடக்கத்திலும் கவனம் ஈர்த்தன. கணவன் மனைவி இடையிலான ஊடலும் உரசலுமான அனுபவங்களைப் பேசிய ‘கால் கட்டு’ தொடர் இந்த வருடம் மூன்றாவது சீஸனாக வெற்றிநடை போட்டது.

மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நிஜ தம்பதியரின் ‘கல்யாணம் - கண்டிஷன்ஸ் அப்ளை’ தொடரும் தாம்பத்திய தடுமாற்றங்களை நகைச்சுவையாக அணுகிய ‘ஐபிஎல்’ தொடரும் வரவேற்புப் பெற்றன. யூடியூபில் வருவாய் போதவில்லை என அதன் வெப் சீரிஸ் தொடர்கள் தனிச் செயலிக்குக் குடி பெயர்ந்ததும் இந்த வருடத்தில் நடந்தது.

செயலிகளில் தங்கள் தொடர்களை முதலில் வெளியிட்டாலும் ரசிகர் தரப்பைத் தக்கவைத்துக்கொள்ளச் சில தினங்கள் கழித்து அவற்றை யூடியூபிலும் வெளியிட்டன. அந்த வகையில் உருவான ‘யுவ்’ போன்ற செயலிகள் வெளிநாட்டு ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்தபோதும் உள்ளூரில் கவனம் ஈர்க்கத் திணறின. வலைப்பூக்கள் திரட்டிகளைப் போல வெப் சீரிஸுக்கான திரட்டிகளும் செயலிகள் வடிவத்தில் கிடைத்தன.

ரிமோட் பட்டன்களில்

இந்திய ஸ்மார்ட் டிவிகளுக்கான ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தின் பொத்தான்களில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இடம்பெறும் அளவுக்கு 2018-ம் ஆண்டு இந்த 2 நிறுவனங்களும் நாட்டில் காலூன்றின. இரண்டுக்குமான போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு சுவாரசியமான இணையப் படைப்புகள் விருந்தாயின. ஜனவரியில் அமேசான் பிரைமில் மாதவன் உள்ளிட்டோர் நடிக்க வெளியான ‘பிரீத்’ பரவலான கவனம் பெற்றது.

உடலுறுப்பு தானத்தின் பின்னிருக்கும் நிழலுகத்தை திரில்லராக இத்தொடர் அணுகியது. சயீஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே போன்ற பாலிவுட் பிரபலங்கள் நடிக்க நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட ‘சேக்ரட் கேம்ஸ்’ பலத்த விமர்சனங்களுக்கு இடையே பிரபலமானது. இதுவே அமேசானின் இந்தி ‘மிர்ஸாபூர்’, தெலுங்கு ’கேங்ஸ்டார்’, தமிழ் ‘வெள்ள ராஜா’ உட்படப் பலவற்றுக்கும் வித்திட்டது.

நெட்ஃபிளிக்ஸில் ராதிகா ஆப்தே நடித்த கவுல் தொடரும் புதிய முயற்சியாகக் கவனம் பெற்றது. அமேசானில் வெளியான ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ வெப் சீரிஸ் பார்வையாளர் எல்லைகளை உடைத்தது.

அமேசான் பிராந்திய மொழிகளில் களமிறங்கி இந்திய ரசிகர்களை வசீகரிக்க, நெட்ஃபிளிக்ஸ் தனது சர்வதேச ஆக்கங்கள் வாயிலாக இணையவாசிகளைக் கட்டிப்போட்டது. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸின் நார்கோஸ்: மெக்சிகோ, சென்ஸ்8 சீஸன்2, ‘ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் -சீஸன்6’, ‘தி ஹான்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்’ உள்ளிட்ட பலதும் கவனம் பெற்றன. இந்தியில் வெளியான ‘லிட்டில் திங்ஸ்-2’, ‘லவ் ஃபர் ஸ்கொயர் ஃபுட்’ போன்றவை இளம் ரசிகர்களை ஈர்த்தன.

ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா, நேகா துபியா உள்ளிட்டோர் நடிக்க அனுராக் கஷ்யப், கரண்ஜோகர் உள்ளிட்ட இயக்குநர்களின் படைப்பாக, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ வெளியானது. 4 குறும்படங்களின் தொகுப்பாக வெளியான இதன் உள்ளடக்கத்திற்கு அப்பால் மேலோட்டமாகப் பரப்பப்பட்ட பாலியல் அலை இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் பெயரைப் பரவலாக்கியது.

எல்லை மீறிய தொடர்கள்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் ஜாம்பவான்களுக்கு மத்தியில் பல போட்டியாளர்களும் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடினார்கள். இந்தி, வங்காளம், தெலுங்கு ஆகியவற்றுடன் தமிழின் பங்களிப்பும் இவற்றில் அதிகம். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜீ5 வெளியிட்ட ‘கள்ளச்சிரிப்பு’ இதற்கு உதாரணம்.

ஆண்டின் மத்தியில் வெளியான இந்த வெப் சீரிஸ், பாலினச் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தைக் கதையோட்டத்தில் கொண்டிருந்தாலும், அதன் நான்–லீனியர் போக்கிலான திரில்லர் திரைக்கதை பாராட்டு பெற்றது. மேலும் தமிழில் ‘அமெரிக்க மாப்பிள்ளை, அலாரம்’ போன்ற தொடர்களையும் கரன்ஜித் கவுர் உட்பட பல இந்திப் படைப்புகளையும் ஜீ5 தமிழில் தந்தது.

 ‘மெட்ராஸ் மேன்ஷன்’, ‘நிலா நிலா ஓடி வா’, ‘டோர் நம்பர் 403’ போன்ற புதிய தொடர்களைத் தந்த தென்கொரிய நிறுவனமான வியூ, அடுத்த 3 ஆண்டுகளில் தமிழில் மட்டுமே 100 தயாரிப்புகளை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறது.

இவை மட்டுமன்றி சோனி லிவ், அல்ட் பாலாஜி, வூட், ஹாட் ஸ்டார், ஈரோஸ் நவ் என ஏராளமானவை தங்களது செயலிகள், இணையதளம் வாயிலாக கோதாவில் குதித்துள்ளன. போட்டியைச் சமாளிக்கப் பெயருக்குக் கட்டணத்துடனும் குறிப்பிட்ட செல்போன் சந்தாதரர்களுக்கு இலவச சேவையாகவும் இவை வழங்கப்படுகின்றன.

பிரத்யேக இணையத் தொடர்களும் சினிமாக்களும் தனி அடையாளத்தைத் தந்தாலும், உள்நாட்டு வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கடை விரித்தும் இவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. அமேசானில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கமும், மேற்கு தொடர்ச்சி மலையும் சுடச்சுட இதற்கான உதாரணங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x