Published : 17 Dec 2018 11:57 AM
Last Updated : 17 Dec 2018 11:57 AM

கார் புரட்சிக்கு வித்திட்ட மாருதி சுஸுகி

இந்தியாவில் ஃபியட்டும், அம்பாசிடர் கார்களும் கோலோச்சி வந்த காலத்தில் இந்தியாவில் ஆலை அமைத்து கார் தயாரிப்பில் புதிய புரட்சிக்கு வித்திட்டது மாருதி சுஸுகி. ஜப்பானின் சுஸுகி கூட்டுறவுடன் மத்திய அரசு இணைந்து உருவாக்கிய இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகளாகிறது. ஏறக்குறைய 35 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக கார்களின் உபயோகத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது சுஸுகி என்றால் அது மிகையல்ல.

இந்தியாவில் கார் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என்பது சஞ்சய் காந்தியின் நீண்ட கனவு. தனது தாய் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இதை வெற்றிகரமாக நிறைவேற்றினார். 1983-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆலையில் முதலில் கார் வாங்கியவருக்கு சாவியை வழங்கினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.

முதலில் மாருதி 800 மாடல் வெளியானது. ஏறக்குறைய 25 ஆண்டுகள் இந்த பிராண்ட் மாருதி சுஸுகியின் வெற்றிகரமான பிராண்டாகத் திகழ்ந்தது. இது 796 சிசி இன்ஜினுடன் மோனோகார்க் பாடி கொண்டதாக நான்கு பேர் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் வெளியானது.

இந்தியாவில் தயாரான முதலாவது கார் அதிலும் டிஸ்க் பிரேக்குடன் வெளிவந்த முதல் காரும் இதுவே. பக்கெட் சீட், பிளாஸ்டிக்கால் ஆன டேஷ் போர்டு ஆகியன இந்த காரின் வெற்றிக்கு பிரதான காரணமாயின.

அப்போது சந்தையில் இருந்த பிரீமியர் பத்மினி, அம்பாசிடர் கார்களுக்கு முன் பதிவு செய்துவிட்டு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால் மாருதி சுஸுகி மிகச் சிறியதாக, அதிக திறன் மிக்கதாக குடும்பத்தினருக்கு ஏற்றதாக இருந்தது. முன் பதிவு செய்தவுடன் கிடைக்கும் வகையில் அதிக உற்பத்தித் திறனோடு இந்த ஆலை செயல்பட்டது. மாருதி 800 கார் டிசம்பர் 14, 1983-ம் ஆண்டு வெளியானது.

இதையடுத்து மாருதி ஜிப்சி 1985-ம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் 10 கார்களில் 8 கார்கள் மாருதி பிராண்டாக இருக்கும் நிலையை உருவாக்கியது.

தொடக்கத்தில் உருவான மாருதி கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு மேம்படுத்தப்பட்ட ரகங்களாக தொடர்ந்து வந்தது. தொடக்கத்தில் உருவான 800 சிசி மாடல் 2013ம் ஆண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் 2.7 கோடி கார்கள் இந்த பிராண்டில் விற்பனையானது மாருதி 800 வெற்றிக்கு முக்கிய சான்றாகும். இன்றளவும் மாருதி சுஸுகி நிறுவனம் கார் உற்பத்தியில், விற்பனையில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், கால மாற்றத்துக்கேற்ப புதுப்புது மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.`

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x