Published : 22 Dec 2018 05:46 PM
Last Updated : 22 Dec 2018 05:46 PM

இயற்கை மருத்துவ அனுபவங்கள்..!

சென்னை அரும்பாக்கம், அண்ணா வளைவுக்கு அருகில் இருக்கிறது அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கு ஒரு வார காலமாக சிகிச்சை மேற்கொண்டேன். வீட்டில் மனைவி உட்பட எல்லோரும்  ‘உங்களுக்கு என்ன பிரச்சினை? ட்ரீட்மெண்ட்டுக்குப் போறேன்னு சொல்ற?’ என்று கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.

எனக்கிருந்தது எல்லோரையும் போலச் சின்னச் சின்ன உபாதைகள் தான். என்றாலும் இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்திப் பார்க்கவே என் உடலும் உள்ளமும் விரும்பியது .

அன்றாட பரபரப்பில் யோகாவைப் பெரும்பாலும் மறந்துபோக வேண்டிய நிலை. எப்போதாவது, தனிமையில் இருக்கும்போது பிராணாயாமம், ஆசனங்கள் போன்றவற்றைச் செய்வதுண்டு. தவிர நகர வாழ்க்கையில் தண்ணீர் முதல் அனைத்து உணவுப் பொருட்களிலும் உள்ள ரசாயனச் சேர்க்கையில்தான் உடல் சுழல்கிறது.

இந்தக் காரணங்களால் ஏதோ குற்றவுணர்வில் உந்தப்பட்டவனாக இயற்கை சிகிச்சையை மேற்கொள்ளப் புறப்பட்டேன்.  வியாதி இருந்தால்தான் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. வியாதி வராமல் இருக்கவும் இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றலாம்.

‘ஆதார்’ கேட்காத மருத்துவமனை

மக்களிடம் இந்த மருத்துவமனை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.  விழிப்புணர்வு உடையோர் சிலரும்கூட, ‘அரசு பொது மருத்துவமனைதானே அது’ என்ற அலட்சியத்துடன்தான் கடந்து செல்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. இந்த மருத்துவமனை வளாகத்தில் எங்கும், அலோபதி மருத்துவத்தின் நெடியை நீங்கள் நுகரமுடியாது.

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அக்குபஞ்சர் என்று தனித்தனியே பிரிவுகள் உள்ளன. காலையும் மாலையும் மருத்துவர்கள் நோயாளிகளைச் சந்திக்கிறார்கள். நிதானமாக ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

மருத்துவமனைக்குள்ளே நுழைந்தால், கடைசிக் கட்டிடம் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு உள்ளது. அதன் முன்னே மூலிகைத் தோட்டம் அழகாக வீற்றிருக்கிறது.

அந்த மாலை வேளையில் நான் முன் விசாரிப்பு இல்லாமலேயே எனது சிறிய பொதியுடன் உள்ளே சென்றேன். உடனே அனுமதிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. தலைமை செவிலி என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘படுக்கை எண் 42 மூன்றாவது மாடிக்குச் செல்லுங்கள்’ என்றார். ஆதார் அட்டை கேட்கவில்லை. சுவர்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

காய்களும் பழங்களுமே உணவு

முதல் நாள் வெளியே ஹோட்டல் உணவு மற்றும் ஓய்வு. மறுநாள் அதிகாலை 5.30 மணியிலிருந்து சிகிச்சை தொடங்கியது. நோயாளிகளை அழைப்பதற்கு மணி உண்டு. முதலில் ரத்த அழுத்தப் பரிசோதனை. பிறகு, யோகா மற்றும் தியான பயிற்சிகள் என்று நாள் தொடங்குகிறது.

‘உடம்பே கோயில்’ என்பது சரிதான். உணவை உண்ணும் முன் வணங்குகிறோம். அதுவும் சரிதான். ஆனால் முறையாக எடுத்துக் கொள்கிறோமா என்றால் இல்லை.

அடிக்கடி ஸ்ட்ராங்கான டஸ்ட் டீ. சிக்கரி காபி, செறிவூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், அஸ்கா எனப்படும் வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், பாக்கெட் கொறிப்புப் பண்டங்கள், வெள்ளைச் சோறு, ஜெர்சி அல்லது எருமை மாடுகளிடமிருந்து கறந்த வெள்ளைப் பால், இரவில் தூங்கப் போகும் முன்பு பரோட்டா, ஃபிரைடு ரைஸ் வகைகள் இப்படி எங்கு திரும்பினாலும் நம்மைச் சீக்கிரமே நோயின் கிடங்காக மாற்றும் வகையறாக்கள்தான். இவற்றில் எதையுமே நான் சிகிச்சை மேற்கொண்ட ஒருவார காலத்தில் உண்ணவில்லை.

மூன்று வேளையும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், இடையிடையே மூன்று முறை சுவையான இயற்கைச் சாறுகள். மாலை 5.30 மணிக்கு மீண்டும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள். நீராவிக் குளியல், இடுப்புக் குளியல், மசாஜ், மண் குளியல், வாழை இலைக் குளியல் போன்ற சிகிச்சைகளுக்கு வந்திருந்த பலரும் உற்சாகமாக இசைந்தார்கள்.

இயற்கை தரும் விடுதலை..!

என்னை கவனித்துக் கொண்ட மருத்துவர், நோய்க்கூற்றின் வேரிலிருந்து விசாரிக்கிறார். நம் சிறுவயதிலிருந்து உடல் கண்ட மாற்றங்களைக் கூர்ந்து கேட்டு, தக்கபடியான சிகிச்சை முறைகளுக்கு உட்படுத்துகிறார்.  ‘எனக்கு அலைந்து திரியும் வேலை. தவிர வெப்ப உடல்வாகு’ என்றேன்.

உடனே அவர், “நீங்கள் குளிக்கும் முறையை மாற்றுங்கள். காலிலிருந்து தண்ணீர் ஊற்றி உடலுக்கு வந்து, பின்னர் தலைக்குக் குளியுங்கள். நம் கிராமத்துப் பெரியவர்கள் எல்லாம் குளத்தில் இறங்கும்போது காலிலிருந்து நனைந்து தலையில் தண்ணீர் தெளித்துக்கொள்வது வெறும் குளியல் அல்ல” என்றார்.

நான் சிகிச்சை மேற்கொண்ட ஒருவார காலத்தில் கவனித்தது இதுதான்… அவர்கள் என்னை நீராலான உடலாக மாற்றிவிட்டார்கள். வெள்ளரிக்காய், வெண்பூசணி, பீட்ரூட், வாழைப்பழம், கொய்யா, கேரட், பப்பாளி, கிர்ணி, முளைகட்டிய பச்சைப் பயறு, நிலக்கடலை ஆகியவை அவர்களது உணவுப் பட்டியலில் இருந்தன.

சர்க்கரை, உடல் எடை அதிகம் உள்ளவர்கள், நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, வாதம், முதுகுத் தண்டுவடப் பிரச்சினை உள்ளவர்கள், இதய, சிறுநீரகக் கோளாறு, ஆண், பெண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி உள்ளவர்கள் ஆகியோரைத்தான் நான் இந்த  மருத்துவமனையில் அதிகம் கண்டேன்.

நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டாக்டர்கள். ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்துப் பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள். எனக்கு யாரையும் நோயாளிகள் என்றே பார்க்க முடியவில்லை. இயற்கைக்குத் திரும்ப இசைந்தவுடனேயே நாட்பட்ட நோயாளியும் உடனடியாகக் குணமடைந்துவிடுவதாக எனக்குத் தோன்றியது. இயற்கையை நோக்கும் பயணம் என்பது எவ்வளவு பெரிய விடுதலை உணர்வு..!

- ஆகாசமுத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x