Published : 21 Dec 2018 09:59 AM
Last Updated : 21 Dec 2018 09:59 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ‘பேட்ட’ சிம்ஹா!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்துவருகிறார் பாபி சிம்ஹா. இதற்கிடையில் தமிழ்க் கதாநாயகர்களில் முதல் ஆளாக துணிந்து ‘வெப் சீரிஸில்’ சிம்ஹா நடித்திருக்கும் ‘வெள்ள ராஜா’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாபி சிம்ஹாவின் ‘பேட்ட’ பட போஸ்டர் வெளியாகி, அந்த படத்தின் டீசர் அளவுக்குக் கவனம் பெற்றிருக்கிறது. ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்க, பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் பற்றித் துருவிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

காதல் பகடை

 “காதலைப் பகடையாக்கி திடையில் பல கதைகள் வந்துவிட்டன. ‘காசுரன்’ இதில் விதிவிலக்கான கதை.” என்கிறார்  தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரேநேரத்தில் அந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஜித்தா மோகன் என்ற அறிமுக இயக்குநர். “காதலால் ஆறாத காயத்தைச் சுமப்பவர்களில் பலர் காவியமாக வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். நமது நாயகன் ஆறாத காயத்தை காசாகப் பார்க்கிறான். அதற்குக் காரணம் அவன் அநியாயமாக அனுபவித்தச் சிறைவாழ்வு. பணத்துக்காக முன்னாள் காதலியைப் பகடையாக்கும் ஒருவனின் குற்றப் பயணம் இது. அழுத்தமான கதைகளை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கான அசத்தலான காதல் த்ரில்லர்” என்கிறார்.

காதலனைத் தேடி…

வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும் கதைகள் என்றுமே நிராகரிக்கப்படுவதில்லை. அறிமுக இயக்குநர் நிகில் வி.கமல் எழுதி, இயக்கிவரும் ‘அமையா’ என்ற படம் இயற்கையின் மடியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் பாதிப்புடன் உருவாக்கப்பட்டதாம். முகவரி, பெயர்  என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கதை. தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பாதிலிருந்து தொடங்கும் படத்தின் தேடல், இலக்கை அடைந்ததா இல்லையா என்பதை இயற்கையின் துணையுடன் காட்சிபடுத்தியிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். அமையா கதாபாத்திரத்தில் அறிமுகமாக இருப்பவர் 2016-ம் ஆண்டின் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டம் வென்ற சுஜா சூர்யநிலா.

தொடரும் ‘சாட்டை’

கடந்த 2012-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற படம் ‘சாட்டை’. அந்தப் படத்தின் தொடர்ச்சியை ‘அடுத்த சாட்டை’ என்ற தலைப்பில் புதிய படமாக தொடங்கியிருக்கிறது அதே அணி. சமுத்திரக்கனி மற்றும் பிரபு திலக் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நாயகி மகிமாவுக்குப் பதிலாக அதுல்யா இடம்பெற்றிருக்கிறார். மற்ற நடிகர்கள் தொடர்கிறார்கள்.

மீண்டும் மது ஷாலினி

இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’, கமலின் ‘தூங்காவனம்’ எனத் தமிழில் பல படங்களில் நடித்தும் தடம் பதிக்க முடியாமல்போன திறமையான நடிகை மது ஷாலினி. காஸ்மடிக் சிகிச்சை மூலம் முகத் தோற்றத்தில் மாறுதல்களைச் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிசியாக வலம் வரும் இவர், தற்போது மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார். குறும்பட வட்டாரத்தில்  புகழ்பெற்றிருக்கும் பாலாஜி வைரமுத்து இயக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற படத்தின் ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒருவராக சமீரா என்ற பெண் எழுத்தாளராக நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தை ட்விட்டரில் மகிழ்வுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கதாநாயகிகளின் ‘டார்லிங்’ நடிகரான ஆர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x