

இயற்கை அழகானது மட்டுமல்ல; மிகவும் ஆபத்தானதும்கூட. மனித இன வரலாற்றில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் தலைமுறை, நமது தலைமுறை. இருப்பினும், இயற்கையின் செயல்பாட்டை அறிவதும் அதனை முழுமையாகப் புரிவதும் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.
450 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பூமியின் செயல்பாட்டைச் சராசரியாக 70 ஆண்டுகளே வாழும் மனிதன் கட்டுப்படுத்துவது என்பது
இயலாத காரியம்தானே? இயற்கையின் ஆபத்துகளை நம்மால் தடுக்க முடியாது. வேண்டுமானால், அதனால் நேரும் பாதிப்புகளைக் குறைக்கலாம். இணையத்தில் இன்று இருக்கும் பல இணைய வகுப்புகள் அதை நமக்கு எளிதாகவும் இலவசமாகவும் கற்றுக்கொடுக்கின்றன.
பேரிடர்களின் தன்மை
பேரழிவை ஏற்படுத்தும் எல்லா இடர்களையும் பேரிடர் என்ற வரையறைக்குள் எளிதில் அடக்கலாம். அனல் காற்று, பஞ்சம், வெள்ளம், கனமழை, புயல், சுழற்காற்று, சூறாவளி, நில நடுக்கம், சுனாமி, காட்டுத்தீ, அதீதப் பனிப் பொழிவு, எரிமலை கொப்பளிப்பு எனப் பேரிடர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பாதுகாப்பான இடம் என்பதே இந்தப் பூமியில் இல்லை. இருப்பினும், நாம் வாழும் இடத்தின் தன்மையை அறிவதன் மூலம் நம்மை என்னென்ன பேரிடர்கள் தாக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சற்று முன்னெச்செரிக்கையாகவும் இருக்கலாம்.
பேரிடர்களை எப்படிச் சமாளிப்பது?
ஆபத்தின் தன்மை தெரியாமல் நாம் ஆற்றும் எதிர்வினை, ஆபத்தை மேலும் ஆபத்தானதாக மாற்றக்கூடும். உதாரணத்துக்கு மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தைத் தண்ணீர் ஊற்றி அணைக்க முயல்வது. இன்றைய காலகட்டத்தில் தகவல்கள்தாம் அறிவு. இன்றைய நவீன விஞ்ஞானம், தகவல்களை நமக்குத் தேவைக்கு அதிகமாகவே அளிக்கிறது. பேரிடர்களை எதிர்கொள்ள இந்தத் தகவல்கள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. ஜப்பானின் புவி அமைப்பின் படி அங்கு நிலநடுக்கம் அடிக்கடி நேரும் என்று இன்று தெரிந்த காரணத்தால், இன்று அங்கே கட்டப்படும் வீடுகள் எல்லாம் மரத்தால் கட்டப்பட்டவையாகவே உள்ளன. விண்ணில் நிறுவப்பட்டிருக்கும் திறன் மிகுந்த விண்கலன்கள், நமக்கு நேரப் போகும் ஆபத்தை முன்கூட்டியே முடிந்தவரை துல்லியமாக உணர்த்துகின்றன.
எங்குப் படிக்கலாம்?
ரெட் கிராஸ், யுனெஸ்கோ போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங் களும் இந்திய அரசாங்கமும் பேரிடர் மேலாண்மையை இணையம் வழியாக இலவசமாகச் சொல்லிக்கொடுக்கின்றன. அதற்கான QRcode & சுட்டிகளின் பட்டியல் கீழே:
இந்தப் படிப்புகள் பேரிடர்களைச் சமாளிக்கும் திறனுக்கு மட்டுமின்றி, கைநிறையச் சம்பளத்துடன் கூடிய வேலைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன. பேரழிவுகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்; பூமிக்குப் புதிதல்ல. எத்தனையோ பேரழிவுகளை இந்தப் பூமி சந்தித்துள்ளது. டைனோசர் போன்ற எத்தனையோ இனங்கள் அந்தப் பேரழிவுகளால் முற்றிலும் அழிந்துள்ளன. இருப்பினும், ஆபத்தை மீறி இயற்கையோடு இயைந்து வாழ்வது மட்டுமே நமக்கு விதிக்கப்பட்ட ஒன்று.