Published : 31 Dec 2018 11:40 AM
Last Updated : 31 Dec 2018 11:40 AM

அலசல்: மனித உயிருடன் விளையாடாதீர்கள்!

ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தால் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றாகிவிட்டது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், பதிவும் செய்யாமல், கண்காணிப்புக்கும் உட்படாமல் ஒரு தொழிலை புரியலாம் என்ற அளவுக்கு இந்தியா உள்ளது. ஆம், இணையதளம் மூலமான மருந்துகள் வர்த்தகத்துக்கு இது நாள் வரை எந்த ஒரு நிறுவனமும் முறையான பதிவை செய்யவில்லை.

ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு (இ-பார்மசி) தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மருந்து விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மிகப் பெரிய கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். இதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காத அரசு, இணையதள மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரிகிறது.

அதுவரையில் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும் இந்த உத்தரவு வெறுமனே காகித உத்தரவாகத்தான் உள்ளது. இணையதளம் மூலமான மருந்து விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ போதிய அதிகாரம் ஏதுமின்றி மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் அதிகபட்சம் 60 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றன. அதாவது ஒரு மாத்திரையின் விலை 10 ரூபாய் என்றால் அதேமாத்திரையை ஆன்லைன் மூலம் 4 ரூபாய்க்கு வாங்க முடியுமென்றால் பார்மஸி பக்கம் யார் போவார்கள்.

ஆனால், இணையதளம் மூலமான மருந்து விற்பனையை எதிர்க்கும் மருந்து விற்பனையாளர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு, போலியான மருந்துகளை விற்பனை செய்கின்றனர் என்பதுதான்.  ஆனால், இதுவரையில் எந்தப் புகாரும் எழுந்தது கிடையாது. பார்மஸி்களின் கொள்ளை லாபத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இ-பார்மசி நிறுவனங்கள் வளர்ந்து வருவதுதான் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால் நெட்மெட்ஸ், 1 எம்ஜி, மெட்லைஃப் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கம்போல மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றன.  ஆன்லைன் மூலமான மருந்து விற்பனை தற்போது ஆண்டுக்கு ரூ. 3,500 கோடியாக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஆண்டு மருந்து விற்பனை ரூ. 1.6 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஆன்லைன் நிறுவனங்களின் பங்கு ஒன்றரை சதவீதம் முதல் 2 சதவீதம் வரைதான். இருப்பினும் அவர்களின் அபரிமித வளர்ச்சி பார்மஸிகளை ஆட்டம் காண வைத்துவிட்டது என்பதுதான் உண்மை.

ஆன்லைன் மூலமான வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி மோசடிக்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கனடாவில் உள்ள ஒருவர் 50 டாலருக்கு ஒரு மாத்திரையை ஆர்டர் செய்தால் அவர் முதலில் 5 டாலரை மட்டுமே செலுத்துவார். மீதி 45 டாலர் கரீபியன் தீவு வழியாக ஹவாலா பணமாக ஆன்லைன் நிறுவனத்துக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.

அனைத்துக்கும் மேலாக இது மனிதர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆன்லைனில் விற்கப்பட்டாலும், பார்மஸிகளில் விற்கப்பட்டாலும் அது நோய் தீர்க்கும் மருந்தாக இருக்க வேண்டும். அது போலியாக இருக்கக்கூடாது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x