Last Updated : 15 Dec, 2018 01:15 PM

 

Published : 15 Dec 2018 01:15 PM
Last Updated : 15 Dec 2018 01:15 PM

அலையாத்திக் காடுகளின் ஊடாக...

கஜா புயல் அடித்து ஓய்ந்த பிறகு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பாத அந்த நாட்களில் முத்துப்பேட்டையில் கோரையாற்றின் வழியாகப் பயணித்தோம். அங்குள்ள தொட்டத்தில்  விரவியிருக்கும் அலையாத்திக் காடுகளின் நிலை என்ன என்பதைப் பார்த்துவருவதற்கான பயணம் அது.

முத்துப்பேட்டை ஆஸாத் நகர் பாலத்தில் படகொன்றில் நண்பர்களுடன் புறப்பட்டோம். போகும் வழியின் இரண்டு பக்கங்களும் இருவேறு உலகங்களை நமக்குக் காட்டின. வடக்குக் கரையில், போக்குவரத்தே அரிதாக இருக்கும் இடங்களிலும் மக்கள் குடிசைகளில் வசித்துவந்தனர். அந்த இடத்தை ‘பேட்டை’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அந்தக் குடிசைகளுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அலையாத்திக் காடுகள் அந்த இடங்களில் காற்றை மட்டுப்படுத்தியிருக்கலாம் என்று நண்பர் கூறினார். வெளியுலகத்துடன் அந்த மக்களுக்கு உறவை ஏற்படுத்தித் தருவது படகு மட்டுமே. மீன்பிடி வாழ்க்கை!

அந்த இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்குக் கொண்டுசென்றாலும் விடாப்பிடியாக மறுபடியும் அங்கே வந்துவிடுகிறார்கள் என்றார் நண்பர். தங்கள் வாழிடத்துடன் அப்படியான பிணைப்பு.

ஆலப்புழையின் ‘ஏழை வடிவம்!’

தெற்குக் கரையை  ‘முத்துப்பேட்டையின் புழக்கடை’ என்று சொல்லிவிடலாம். தர்காக்கள், மசூதிகள், வீடுகளின் பின்புறங்களை இன்னும் சாயாத தென்னை மரங்கள் நம் பார்வைக்கு அழகாக வடிகட்டித் தந்தன. அங்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் பின்னே தென்னை மரங்களில் படகுகள் கட்டப்பட்டிருந்தன. எனக்கு ஆலப்புழை நினைவுக்கு வந்தது. இது ஆலப்புழையின் ‘ஏழை வடிவம்’!

வீடுகளின் பின்புறங்களில் வலைகள் காய்ந்துகொண்டிருந்தன. இன்னும் மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தளவாடங்களையும் நெடுகக் காண முடிந்தது.

செல்லும் வழியெங்கும் மீன்பிடிப் படகுகள் கடமையை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தன. கஜா புயலால் நூற்றுக்கணக்கான படகுகள் சேதம் என்று கூறினார் படகோட்டி. கஜா புயலால், இந்தப் பகுதியிலிருந்த இறால் பண்ணைகள் எல்லாம் சேதமடைந்துவிட்டதாக அவர் சொன்னார்.

அலையாத்திக் காடுகளின் ஊடாகப் படகு செல்லத் தொடங்கியது. தெற்கு மருங்கில் பெரும்பாலும் பசுமையான அலையாத்தி மரங்கள், சுரபுன்னை மரங்கள், தில்லை மரங்களைக் காண முடிந்தது. காற்றை எதிர்கொண்ட தெற்கு மருங்கில் இலைகளையும் பல இடங்களில் வேரோடு மரங்களையும் கஜா பிடுங்கிப்போட்டிருந்தது. அங்கேயே மீன்களையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி வாழும் நரிகள் சில கஜா புயலில் இறந்துபோய்விட்டதாகப் படகோட்டி கூறினார்.

மறந்துபோன தமிழ்ப் பெயர்!

“முத்துப்பேட்டையில் எல்லோரும் ‘லகூன் லகூன்’ என்கிறார்களே, இந்த இடத்துக்கு உங்கள் ஊரில் காலங்காலமாக என்ன பெயர் இருந்தது?” என்று படகோட்டியிடம் கேட்டேன்.

“வயசானவங்க ‘தொட்டம்’னு சொல்லுவாங்க சார். நாங்க ‘அளம்’னு சொல்லுவோம். ஆனா, வனத்துறையிலருந்து மக்கள்வரை எல்லாரும் ‘லகூன் லகூன்’னு சொல்லிச் சொல்லி பழைய தமிழ்ப் பேரெல்லாம் மறந்துபோயிடுச்சி” என்றார்.

சமீப காலமாகத்தான் சுற்றுலாத்தலமாக முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் உருவெடுக்க ஆரம்பித்திருந்தன. அதற்குள் கஜா வந்து சுற்றுலாத்துறையை முடக்கிப் போட்டுவிட்டது. சுற்றுலாவால் வருமானம் வரும் என்றாலும் அங்குள்ள இயற்கைச் சூழலுக்கு அது கேடாகவும் ஆகக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சுனாமியைத் தடுத்தது… கஜாவில் கவிழ்ந்தது!

அலையாத்திக் காடுகள் ஊடாக இருந்த ‘பார்வையாளர் கோபுரங்கள்’, நடைவழி என்று எல்லாவற்றையும் ஆட்டி அசைத்துப் பிடுங்கிப்போட்டிருந்தது கஜா. ஒரு சிறு கட்டிடமே பைசா கோபுரம் போன்று சாய்ந்திருந்தது. அதில் கவனமாக மேலே ஏறிப் பார்த்தபோது கஜாவின் தீவிரம் புரிந்தது. எங்கெங்கிலும் அலையாத்தியின் பசுமையை கஜா சூறையாடியிருந்தது.

திரும்பிச் செல்லும்போது ஒரு நீர்க்காகம் விடாமல் படகைத் துரத்திக்கொண்டு படகுக்கு முன்னால் சென்று தண்ணீரில் மூழ்கி சிறிது தூரம் கழித்து மேலெழுவதும், சில நேரம் படகின் பின்புறச் சுழிப்புக்குள் மூழ்கி மேலெழுவதுமாக இருந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் தூரம் வரை இப்படிப் பின்தொடர்ந்து வந்தது.

அங்குள்ளவர்களிடம் பேசியபோது வேரோடு பிடுங்கியெறியப்படாத மரங்கள் பிழைத்துக்கொள்ளும். என்ன, பழைய பசுமைக்குக் கொஞ்ச நாள் பிடிக்கலாம் என்றார்கள். சுனாமியில் தாக்குப்பிடித்த அலையாத்திக் காடுகள் கஜா புயலில் சரிந்தது ஆச்சரியமே என்றும் கூறினார்கள். சுனாமி, கஜாவின் வடுக்களைத் தாண்டியும் கூடிய சீக்கிரம் அலையாத்திக் காடுகள் நிமிர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை எங்களைக் கரைசேர்க்க, பயணம் முடிவுக்கு வந்தது!இறந்தும் வவ்வால்களுக்கு வாழ்வு தரும் அலையாத்தி மரங்கள்மீதமிருக்கும் நம்பிக்கை அலையாத்தி மரங்கள்சாய்ந்து கிடக்கும் பார்வையாளர் கோபுரம்

- கட்டுரை, படங்கள் ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x