

அந்தக் கால மதுரைய நிறையாவே சுத்திப் பார்த்துட்டோம், செழியன். இப்போ நாம அப்படியே கிழக்குக் கடற்கரையோரமா சென்னைக்குப் பக்கத்துல போவோம்.
இன்னைய சென்னை அன்னைக்கு என்ன முக்கியத்துவத்தைப் பெற்றிருந்திச்சுன்னு தெரியலை. அதேநேரம் சென்னையோட மேற்குப் பகுதில இருந்த காஞ்சி என்ற காஞ்சிபுரமும் தெற்கில் இருந்த மல்லை என்ற மாமல்லபுரமும் முக்கிய நகரங்கள். இரண்டுமே அன்றைய தொண்டை மண்டலத்தோட முக்கியமான ஊர்கள்.
அதுலயும் பல்லவர்கள் ஆண்ட, தொண்டை நாடுன்னு சொல்லப்பட்ட பகுதியோட முக்கியத் துறைமுகமா மாமல்லபுரம் இருந்துச்சு. அந்தப் பழைய துறைமுகத்துக்குத்தான் இப்ப நாம போகப் போறோம்.
ஏற்றுமதி வியாபாரம்
நரசிம்மவர்ம பல்லவன்தான் இந்தத் துறைமுகத்தைக் கட்டினாரு. அவரோட அப்பா மகேந்திரவர்ம பல்லவன் தொடங்கி வெச்ச உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள், கோயில் பணிகளை இவர் காலத்துலதான் நிறைவு செஞ்சாங்க.
நரசிம்மவர்மனோட பட்டப் பெயர்கள்ல ஒண்ணு மாமல்லன். அந்தப் பேர்லதான் அந்த ஊரு அமைஞ்சது. 1300 வருஷங்களுக்கு முன்னாடி மாமல்லபுரம் ஒரு பிரபல துறைமுகமா இருந்துச்சு. அங்கே நிறைய வணிகக் கப்பல்கள் வந்து போயிருக்கு. துறைமுக நகராவும் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பும் இருந்ததால, வெளிநாட்டுக்காரங்க நிறைய பேர் வந்து போற இடமா மாமல்லபுரம் திகழ்ந்திருக்கு. அந்த ஊர்ல வசிச்சவங்களும் கடல் பயணங்கள்ல தேர்ந்தவங்களா இருந்தாங்க.
அன்றைய கலிங்கத்துல இருந்த தாம்ரலிபிதி துறைமுகத்துக்கு (இன்றைய மேற்கு வங்கத்தின் தாம்லுக்) கப்பல்கள் போய் வந்தன. அதோட கம்போடியா (காம்போஜா), மியான்மர் (பர்மா), இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் கப்பல் வழியே வியாபாரம் நடந்துச்சு.
அழகுப் பொருள் இறக்குமதி
இதோ பேசிக்கிட்டே கப்பல் போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதியெல்லாம் நிர்வாகிக்கிற துறைமுக அலுவலகத்துக்கிட்ட வந்திட்டோம், செழியன்.
அதோ அரிசி, நெய், வாசனை திரவியங்கள், சந்தனம், தேவதாரு மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்யுறதுக்காக ஆட்கள் அடுக்கி வெச்சுக்கிட்டு இருக்காங்க பாரு. கொஞ்சம் தள்ளி நிக்கிற கப்பல்ல இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டு, மட்பாண்டம், மதுபானம், நறுமணப் பொருட்கள். குதிரைகள் போன்றவற்ற இறக்கிக் கொண்டுவர்றதும் தெரியுது பாரேன்.
பல்லவ நாட்டு மக்கள் கூந்தலுக்கு வண்ணம் அடிச்சுக்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தாங்க. கூந்தல் தைலம், நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்காங்க. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் இதுல அடக்கம்.
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in