Last Updated : 02 Dec, 2018 12:50 PM

 

Published : 02 Dec 2018 12:50 PM
Last Updated : 02 Dec 2018 12:50 PM

ஆடும் களம் 29: கிரிக்கெட் புயல்!

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக ஏழு அரை சதங்களை விளாசிய வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் அதிக அரை சதங்களை விளாசிய வீராங்கனை;

ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களை ஓரங்கட்டி அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனப் பல பெருமைகளுக்கும் சொந்தக்காரர், யார்? ‘இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்’ என அழைக்கப்படும் மிதாலி ராஜ்தான் அவர். இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா கேப்டன் அவர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மிதாலி ராஜ் பிறந்து வளர்ந்தார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மிதாலி ராஜின் தந்தை துரைராஜ், விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். மிதாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர்.

அவரை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பெற்றோர் கிரிக்கெட் பக்கம் அவரைத் தள்ளிவிட்டனர்.  மிதாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது. ஆனால், 17 வயதிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்குத் தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

mithali-3jpgright

அறிமுகப் போட்டியில் சதம்

1999-ல் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிதான் அவரது முதல் சர்வதேச ஆட்டம். முதல் போட்டியிலேயே 114 ரன்கள் விளாசி மகளிர் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். முதல் போட்டியே அவருக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் மிதாலியும் மற்றொரு அறிமுக வீராங்கனையான ரேஷ்மா காந்தியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

இந்தப் போட்டியில் இருவருமே சதம் அடித்தார்கள். மிதாலி ராஜுக்கு முன்பாக ரேஷ்மா காந்தி சதம் அடித்ததால், அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்புதான் மிதாலிக்குக் கிடைத்தது. இந்தப் போட்டிதான்  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மிதாலிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

இணையில்லாத வீராங்கனை

இதேபோல 2002-ல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது போட்டியில்  214 ரன்களைக் குவித்து, கவனத்தை ஈர்த்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுவரை இதுதான் இரண்டாவது அதிகபட்ச ரன்.

சச்சின் டெண்டுல்கரைப் போல் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி விளையாடும் அற்புதமான வீராங்கனை மிதாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப் போல் தெரிந்தாலும், ரன் குவிப்பதில் வல்லவர். மிதாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே எதிரணிக்குக் கிலியை ஏற்படுத்தும் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

சாதனை மேல் சாதனை

சர்வதேச அரங்கில் பெண்களுக்கு டெஸ்ட் போட்டிகளே நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் முடி சூடா மன்னராகக் கோலோச்சிவருகிறார் மிதாலி ராஜ். இதுவரை 198 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6,550 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 7 சதங்கள், 51 அரை சதங்கள் பேட்டிங் சராசரி 51. உலக அளவில் எந்த வீராங்கனையுமே 6 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை இதுவரை தொட்டதில்லை.

2017-ல் அந்தச் சாதனையைப் படைத்த முதல் வீராங்கனையானார் மிதாலி. அதே ஆண்டில் அவர் கிரிக்கெட் ராணியாக உச்சம் தொட்டார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7 அரை சதங்கள் இந்தப் பெயரை அவருக்குப் பெற்று தந்தன. ஆண்கள் அணியில்கூட எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இந்திய அணியின் வெற்றிகரமான சேஸிங்குகளில் மிதாலியின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை. சேஸிங்குகளில் மட்டும் அவரது சராசரி  109.68 ரன்.

டி20 முத்திரை

ஒரு நாள் போட்டிகளைப் போலவே விரைவாக ரன் சேர்க்கக்கூடிய டி20 போட்டியிலும் மிதாலி ராஜ் தன் ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார். 2006 முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். 35 வயதை எட்டியபோதும் டி20 போட்டியில் இப்போதுவரை அணியின் முக்கிய வீராங்கனையாக மிதாலி ராஜ் தொடர்கிறார். 85 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மிதாலி, 2,283 ரன்களைக் குவித்தார்.

ஒட்டுமொத்தமாக டி20 ரன் குவிப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்கூட மிதாலிக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். டி20 போட்டியில் 18 அரை சதங்களும் அடங்கும். எவ்வளவோ சந்தர்ப்பங்களில் ஒரு நாள் போட்டியிலும் டி20 போட்டியிலும் தனி ஆளாக நின்று இந்திய அணியை மீட்டிருக்கிறார்.

mithali-2jpg

வெற்றிகரமான கேப்டன்

வீராங்கனையாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் மிதாலி ராஜ் வெற்றிகர மானவராகத் திகழ்ந்துவருபவர். மகளிர் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், இந்திய அணியையும் அந்த அணிகளுக்கு இணையாகப் பேசவைத்தவர் மிதாலி ராஜ். உச்சகட்டமாக இவரது தலைமையின் கீழ் 2016 முதல் 2017 வரை தொடர்ச்சியாக 16 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சுமார் 19 ஆண்டுகளாக

இந்திய அணியில் நீடித்துவரும் மிதாலி ராஜுக்கு மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கடந்த ஆண்டு வந்தும் நூலிழையில் மிதாலி ராஜ் கோட்டைவிட்டார். ஆனாலும், இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிதாலியின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்  2013-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 2015-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கிக் கவுரவித்தது.  இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் எனப் போற்றப்பட்டபோதும் கிரிக்கெட் வீராங்கனைகள் அதில் ஒரு பங்கு அளவுக்குக்கூடப் போற்றப்பட்டதில்லை. ஆனால், அந்த ஓரவஞ்சனையைக்கூடத் தனது பேட்டால்

விரட்டி, மகளிர் கிரிக்கெட் மீதும் மக்களின் பார்வையைத் திருப்பியதில் மிதாலி ராஜுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட்  என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x