Published : 15 Sep 2014 02:12 PM
Last Updated : 15 Sep 2014 02:12 PM

மனப்பாடம் வேண்டாம், புரிந்துபடியுங்கள்!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி தேர்வுக்கும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் சார்பு வங்கிகளுக்காக நடத்தப்படும் அதிகாரி பணிக்கான தேர்வுக்கும் பாடத்திட்டம் அடிப்படையில் ஒன்றுதான்.

ஐபிபிஎஸ் தேர்வு பாட விவரம் வருமாறு:

1.Test of Reasoning

(50 கேள்விகள்)

2.General English

(40 கேள்விகள்)

3.Quantitative Aptitude

(50 கேள்விகள்)

4.General Awareness with special emphasis on Banking Industry (40 கேள்விகள்)

5.Computer Knowledge

(20 வினாக்கள்)

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு பாடம் விவரம் இதோ.

1.Test of English Language

(50 வினாக்கள்)

2.General Awareness, Marketing, Computers

(50 வினாக்கள்)

3.Data Analysis and Interpretation (50 வினாக்கள்)

4.Test of Reasoning

(50 வினாக்கள்)

ஐபிபிஎஸ் தேர்வுக்கும் சரி, ஸ்டேட் வங்கி தேர்வுக்கும் சரி தேர்வு நேரம் ஒன்றுதான். 2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். ஸ்டேட் வங்கித் தேர்வில் கூடுதலாக விவரித்து எழுதும் தேர்வு (Descriptive Paper) என்ற ஒரு தாள் உண்டு. ஆங்கில மொழித்திறனை அறியும் வகையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு 50 மதிப்பெண். ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். இதில் எடுக்கும் மதிப்பெண் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படாது. எனினும் இதில் தேர்ச்சி பெற வேண்டியது முக்கியம். எழுத்துத்தேர்வுக்கு பிறகு குழு விவாதம் (20 மார்க்) மற்றும் நேர்முகத்தேர்வு (30 மார்க்) உண்டு.

ஐபிபிஎஸ் நேர்முகத்தேர்வுக்கு 20 மார்க் ஒதுக்கப்படுகிறது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு (ஸ்டேட் வங்கி தேர்வு எனில் கூடுதலாக குழு விவாதம்) மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ஆன்லைன் வழியில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தவறான விடைகளுக்கு மைனஸ் மார்க் போடுவார்கள்.

4 கேள்விகளுக்கு தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் அம்போ. எனவே, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட இதர போட்டித்தேர்வுகளைப் போல, தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டுமே என்பதற்காகவும், அதிர்ஷ்ட வசமாக சரியான விடையாக இருந்துவிடாதா என்ற ஆசையிலும் விடையளித்தால் உள்ள மதிப்பெண்ணையும் இழக்க வேண்டியதிருக்கும். எனவே, தெரியாத வினாக் களுக்குப் பதில் அளிக்காமல் விட்டுவிடுவதே மேல்.

வங்கியில் பணியாற்றுவதற்கு ரீசனிங், நாட்டு நடப்புகள் போன்ற விஷயங்கள் தேவையா என்று கேட்கலாம். வங்கியில் பணிபுரியும் ஊழியரும் சரி, அதிகாரியும் நன்கு சிந்திக்கக்கூடிய ஆற்றல் மிக்கவராக, யோசித்து முடிவு எடுக்கும் திறன்பெற்றவராக, அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்தவராக, ஆங்கில அறிவு உடையவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இத்தகைய பண்புகளை எல்லாம் அறிந்துகொள்வதற்காகவே மேற்கண்ட பாடங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு விஷயத்தை வெறுமனே தெரிந்துவைத்திருக்கிறாரே என்பதை விட அதை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பதை சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் அமைந்திருக்கும்.

எனவே, குருட்டு மனப்பாடம் வங்கித்தேர்வுக்கு கைகொடுக் காது என்பதை தேர்வர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வங்கித்தேர்வில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த மாதிரியான வினாக்களை கேட்கிறார்கள், அவற்றுக்கு எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு பயிற்சி நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x