Published : 30 Dec 2018 10:14 AM
Last Updated : 30 Dec 2018 10:14 AM

விவாதக் களம்: குழந்தைப்பேறு மட்டுமே வாழ்க்கையல்ல

சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தை பிறக்காத காரணத்தால் வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு கருவுற்றிருப்பதாகச் சொன்னது குறித்து டிசம்பர் 23 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். திருமணம், குழந்தைப்பேறு எனப் பெண்கள்மீது திணிக்கப்படும் சமூக அழுத்தம் குறித்து வாசகிகளிடம் கருத்துக் கேட்டிருந்தோம். தேர்வான கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு…

 

தங்களைக் கேள்வி கேட்போரிடம் பெண்கள் மன உறுதியோடு உரத்த குரலில் எதிர்வினையாற்ற வேண்டும். தன்னை யாரும் எதுவும் கேட்கவில்லையே என்ற சுய பச்சாதாபம் கொள்ளும் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும். நாலு பேர் என்ன சொல்வார்கள் என்பதில் உள்ள நால்வரில் ஒருவராக வாழாமல் அவரவர் வேலைகளை மட்டும் அவரவர் கவனித்தால் பலரின் மனப்போராட்டத்துக்கு அமைதி கிடைக்கும்.

- முனைவர்.ம.தனப்பிரியா, பேரூர்.

தன் உடல்நிலை குறித்துக் கணவனிடமே (அவர் தாய்மாமனாக இருந்தபோதும்) கூறத் தயங்கும் மனநிலையிலும் சூழ்நிலையிலும்தான் இன்றளவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது வேதனை மட்டுமல்ல; வெட்கப்படவும் வைக்கிறது. கல்யாணம், குழந்தை போன்றவை தேவைதான். ஆனால், இவை பற்றி முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கு நூறு சதவீதம் உள்ளது. சமூகத்தின் கேள்விகளுக்குப் பயந்தே பல பெண்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்கின்றனர். மக்களின் சிந்தனை மாற வேண்டும். முற்போக்குச் சிந்தனையாளர்களின் புத்தகங்களைப் படிப்பது சிறந்தது. வளரும் குழந்தைகளிடம் நல்லவற்றைப் பதியவைப்பது நம் கடமை.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

நமது இந்தியச் சமூகத்தில் ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருப்பதற்குப் பெரிய விலைகொடுக்க வேண்டியுள்ளது. பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தின் வெளிப்பாடே சில சித்தரிப்புகளுக்குக் காரணமாகிறது. பெண்களின் ஆக்கப்பூர்வ தேடலும் சாதிக்கும் திறமையும் வளர்ச்சிக்குப் பயன்படும் மனிதவள மேம்பாடும் திருமணம் என்ற சிறைக்குள் அடியோடு முடக்கிவைக்கப்படுகின்றன

பெண் என்பவள் வார்க்கப்படுகிறாள்; வளர்க்கப்படுவதில்லை. மதங்களும் குடும்பமும் அரசியல் கலாச்சார நிறுவனங்களும் வரலாற்று ரீதியாகப் பெண்ணை இப்படி இருக்க வேண்டும் என்று தயாரிக்கின்றன. கணவனிடம்கூட தன் உடல்நிலை பற்றிக் கூற இயலாமல் மனத் தவிப்புடனே பலர் வாழ்கின்றனர். பெண்கள் மீதான ஆண்களின் பார்வைக்கு அவர்களது இளமைக்கால வளர்ப்பு முறையே அடிப்படைக் காரணம்.

பெண்கள் சட்டென உணர்ச்சிவசப்படாமல், தனக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். கல்வியும் தன்னம்பிக்கையும் மகளிருக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் பெண்களுக்கு அவசியம்.

- மலர் மகள். மதுரை.

பத்தாம்பசலி மரபுகள் உடைக்கப்பட்டுப் பெண்கள் பொதுவெளியில் உண்மைகளை உரக்கக்கூறும் நிலை உருவாகியிருக்கும் சூழலில் ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்துப் பொய்களைச் சொல்லி அவதிப்பட்டிருக்கும் சென்னைப் பெண்ணின் செயல் வருத்தம் கொள்ளவைக்கிறது. தன்னுடைய பிரச்சினைகளை மூடி மறைக்காமல் கணவனிடமாவது சொல்லியிருந்தால் அவரது வேதனை குறைந்திருக்கும்.

- பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

திருமணம் எதற்கு என்பதற்கு, ‘அங்கீகாரம் பெற்ற உடலுறவுக்குத்தான்’ என்பதுதான் பதில். இன்னும் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை, திருமணமான தம்பதியர்களில் 15 சதவீதத்தினருக்குக் குழந்தை பிறக்காது. குழந்தையின்மைக்கு மனைவியைவிடக் கணவர்தாம் அதிக காரணங்களைப் பெற்றிருக்கிறார். இதை உணராத சமூகம் பெண்ணைப் பழித்து இது மாதிரியான தப்பித்தலுக்குப் பெண்ணை ஆளாக்கியிருக்கிறது.

பெண்ணைக் குற்றம்சொல்லும் சுட்டுவிரல்களில் மாமியார், நாத்தனார் போன்றவர்களின் விரல்களே அதிகம். அறிவியல் உண்மைகள் வாழ்க்கையின், நமது செயல்பாடுகளின் அடித்தளமாக அமையாதவரை இது மாதிரியான அவலங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். படித்தவர்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்தால்தான் மாற்றம் கொண்டுவர முடியும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

ஒரு பெண்ணுக்குக் குழந்தையில்லை என்றால் 99 சதவீதம் அவளிடம்தான் குறைபாடு இருக்கிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. கணவனைப் பற்றி அவனது உடல் தகுதியைப் பற்றி மிகச் சிலரே சந்தேகப்படுவர். மேலும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு எந்த மருத்துவரிடம் செல்வது எனத் தெரியாதா? பொது இடங்களில் மற்றவர்கள் முன்னிலையில் இதுகுறித்து விசாரணைகளையும் இலவச ஆலோசனைகளையும் தவிர்ப்பதுதான் அந்தத் தம்பதியருக்கு நாம் செய்யும் பேருதவி.

- பொன். கருணாநிதி, கோட்டூர்.

ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் தன் கணவனுக்கு மறுமணம் செய்ய முயல்வதை அறிந்த பெண், கருவுற்றதுபோல் நடித்திருக்கிறார். இதில் பெண்ணையே குற்றவாளியாக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்ன நியாயம்? அவள் இப்படி நடந்துகொள்ளக் காரணமானவர்கள் மீது குற்றம் சாட்டாமல் பெண்ணைக் குறைகூறுவது சரியல்ல. குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆணுக்கு மறுமணம் என்பதைவிடக் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாமே.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

இந்தச் சமூகம் எப்போதுமே அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையிடுகிறது. குடும்பச்சூழல், உடல்நலக் காரணங்கள், பொருளாதாரப் பற்றாக்குறைகள் போன்றவற்றால் திருமணத்தைத் தள்ளிப்போடும் சூழலில் அனுமதியின்றி மூக்கை நுழைத்துக் கேள்விகேட்பவர்களைக் கண்டிக்க நாகரிகம் தடுத்துவிடுகிறது.எனக்கு ஒரே ஒரு மகள். ஏன் ஆண் குழந்தை இல்லை என்று இந்தச் சமூகம் பல முறை கவலைப்பட்டிருக்கிறது.

ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் அவர்களுடைய பேச்சின் போக்கை மாற்ற நான் நிறையச் சிரமப்பட்டிருக்கிறேன். இப்போதெல்லாம், “எந்தக் குழந்தையாக இருந்தாலும் இந்த உலகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்துவதே எங்களது வெற்றி” என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். அநாவசியமான கேள்விகளை எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன். ஆனால், மற்ற பெண்கள்?

- தேஜஸ், காளப்பட்டி.

இன்றும் பெண்ணைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் பார்க்கிறார்கள். கல்வி அறிவும் சுயசார்பும் கொண்ட பெண்கள்கூட இந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஊருக்காகவே வாழ்கின்றனர் பலர். தங்களுக்காக வாழும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது என ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொண்டாலே தங்கள் பெண்களின் அல்லது மருமகளின் மேல் விழும் விமர்சனக் கணைகளைத் தடுத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமாகலாம்.

- சுபா, சேலம்.

60 ஆண்டுகளுக்கு முன் எங்கள் எதிர் வீட்டில் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை. யார் என்ன பேசினாலும் பேச்சை மாற்றி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். கணவர் இறந்துவிட, யார் கொள்ளிபோடுவது என்ற கேள்விக்கே இடமில்லாமல் அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுத்துவிட்டனர். ஆனால், இப்போது குழந்தை இல்லை என்றால் வீட்டில் இருப்பவர்களைவிட அக்கம் பக்கத்தினரே ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றனர். நம் குடும்பத்தில் மூன்றாவது மனிதர்கள் தலையிடுவதைத் தவிர்த்துவிட்டாலே இதுபோன்ற பிரச்சினைகள் பூகம்பமாக வெடிக்காது.

- பிரகதா நவநீதன், மதுரை.

ஆண் குழந்தைக்காக மனைவி இருக்கும் போதே சிலர் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண் குழந்தைகளாகப் பிறக்கும் வீடுகளில் நான்காவது அல்லது ஐந்தாவதாகப் பிறக்கும் பெண்ணுக்கு, ‘போதும் பொண்ணு’ என்று பெயரும் வைக்கிறார்கள். அந்தப் பெயரைச் சுமந்துகொண்டு வலம்வரும் அந்தப் பெண்ணின் மன நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பெண்களும் விழிப்புணர்வு பெறுவதுடன் ஆண்களும் யதார்த்தத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.

- பி. லலிதா, திருச்சி.

சமீபத்தில் எங்களுக்கு இரண்டாம் பெண் குழந்தை பிறந்தபோது, “ரெண்டும் பொட்டக் கழுதையாப் போச்சே...” என்று பச்சாதாபப்பட்டவர்களிடம் நான் சொன்ன பதில் இது: “என் குழந்தையை நீங்கள் வளர்த்து ஆளாக்கப்போவது கிடையாது; சம்பந்தப்பட்ட நாங்களே மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களுக்கு ஏன் இந்த வருத்தம்?” அதற்கு மேல் அவர்களால் வாயைத் திறக்க இயலவில்லை.

ஆறு ஆண்டுகளாக மனைவியுடன் வாழ்ந்த கணவன் ஒருவனுக்கு அவளது தைராய்டு பிரச்சினை தெரியவில்லை; தன் பிள்ளையைச் சுமக்காததே பெரும் குறையாகத் தோன்றியிருக்கிறது. தனது பிள்ளையைச் சுமக்கிறாள் என்பதற்காக மனைவியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது, இதர காலங்களில் காலடியில் போட்டு நசுக்குவது போன்ற செயல்களில் சுயநலம் ஒளிந்திருப்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

சமூகச் சாடல்கள் ஒவ்வொன்றின் பிறப்பிடமும் குடும்பத்திலுள்ள ஆண்களிடமே உள்ளது. இந்த நிலை மாற ஆண்களே தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

- ச.அரசமதி, தேனி.

குடும்பத்தாரும் சுற்றத்தினரும் என்ன பேசுவார்களோ என்ற பயமும் அத்தகைய பயத்தைத் தோற்றுவிக்கும் வகையிலான கற்பிதங்களுமே அந்தப் பெண்ணின் செயலுக்குக் காரணம். குழந்தை இல்லாத பெண்களைப் பெண்களே ஒதுக்குவதுதான் கொடுமை. பெண்ணுக்குக் கல்வியே விடுதலை என்பது பொருளாதாரத் தன்னிறைவுக்காக மட்டுமல்ல; சுயசார்பை இழக்காத வாழ்வை வாழ்வதற்கும்தான்.

- தி.சங்கீதா, மதுரை.

ஒரு பெண் குழந்தை பெற்றபின்தான் முழுமையடைகிறாள் என்பது காலம் காலமாகப் போற்றிப் பாதுகாக்கப் பட்டுவரும் முட்டாள்தனங்களில் ஒன்று. இந்த முட்டாள்தனத்தை நம்பும்படியாகப் பெண்களையும் மூளைச்சலவை செய்துவைத் திருக்கிறார்கள். தாய்மை உணர்வு என்பது எல்லாப் பெண்களுக்கும் இயல்பான ஒன்று. குழந்தைபெற்றால்தான் அந்த உணர்வு அவர்களுக்கு இருக்கும் என்பது அறிவியலுக்கே எதிரானது. தாய்மை அடையாவிட்டால் பெண் கூனிக் குறுகி நிற்கவேண்டிதில்லை.

- ஜே.லூர்து, மதுரை.

சாதி, மத, பொருளாதார விதிவிலக்கின்றிப் பெண் என்பவள் இனப்பெருக்கத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். பன்னெடுங்காலமாக நிலவிவரும் மூடநம்பிக்கையால், குழந்தைப்பேறில்லா தம்பதியர் குறிப்பாகப் பெண்கள் எதிர்கொள்ளும் உடல், உளவியல் பிரச்சினைகள் எவராலும் புரிந்துகொள்ள இயலாதவை. திருமணத்துக்குப் பிறகான ஒவ்வொரு மாதவிலக்கும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

புற்றீசல்போல் பெருகிக்கிடக்கும், முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட குழந்தையின்மை சிகிச்சை மையங்களில் ஆண்டுக் கணக்கில் தவங்கிடக்கும் பெண்களின் உலகம், இச்சமூகத்தின் நிர்ப்பந்தத்தால் உருவாக்கப்பட்டது. குழந்தைப்பேறு வேண்டி எதற்கும் தயாராகும் பெண்களின் மனக்குமுறலை அங்கு கேட்க இயலும். ‘என் உடல் என் உரிமை’ என்பது பெண்களைப் பொறுத்தவரை வெற்று முழக்கமே.

குறிப்பாக, பொருளாதாரத் தற்சார்பின்றி இருக்கும் பெண்கள், மணமுறிவுக்கு அஞ்சி எஞ்சிய வாழ்வைக்கழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்தவரின் அந்தரங்கத்தில் சமூகம் தலையிடுவதை நிறுத்துவதும் குழந்தைப்பேறு மட்டுமே வாழ்க்கையல்ல என்பதைத் தம்பதியர் உணர்ந்துகொள்வதும் அவசியம்.

- கவிதா இராமலிங்கம், உதவி ஆணையர், அம்பத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x