Last Updated : 23 Dec, 2018 11:35 AM

 

Published : 23 Dec 2018 11:35 AM
Last Updated : 23 Dec 2018 11:35 AM

போகிற போக்கில்: மாயாஜால மிர்ஜானா

பொதுவாகப் பலர் தங்களை அழகுபடுத்திக்கொள்ள மேக்கப் போட்டுக்கொள்வார்கள். ஆனால், செர்பியாவில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான மிர்ஜானா கிகா மிலோசெவிக் (36) போடும் மேக்கப் நம்மைப் பிரமிக்கவைக்கிறது. கறுப்புத் திரைக்கு முன்னால் சாதாரணப் பெண்ணாக நிற்கும் மிர்ஜானா, தன்னிடமுள்ள அழகுசாதனப் பொருட்களை வைத்தே திடீரெனத் தலையில்லாமல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் பெண்ணாக மாறி நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யூடியூபில் பிரபலமாக உள்ளார் மிர்ஜானா. இவரின்   உடலோவியங்கள் தத்ரூபமாகத் தெரிவதற்கு ஆப்டிகல் இல்யூஷன் முறையைப் பின்பற்றுகிறார்.

வறுமையிலிருந்து மீட்டெடுத்த கலை

அழகுசாதனப் பொருட்களைக்கொண்டு உடலையே ஓவியமாக மாற்றும் இவரது திறமை மெய்சிலிர்க்கவைக்கிறது. சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மிர்ஜானா படித்து முடித்த பிறகு வேலை தேடி பல நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், எங்கும் வேலை கிடைக்கவில்லை. குடும்ப வறுமை நெருக்கடி கொடுத்தபோது அவருக்கு உதவியாக இருந்தது அவரின் ஓவியத் திறமைதான்.

“நான் வசிக்கும் நகரத்தில் வேலை கிடைக்காத நிலையில்தான் சுவரோவியங்கள், குழந்தைகளின் முகத்தில் பொம்மைக் கதாபாத்திரங்கள் போன்றவற்றை வரைவதைத் தொழிலாகத் தொடங்கினேன். அப்போதுதான் என்னுள் இருந்த திறமை வெளிப்படத் தொடங்கியது. பிறகு அந்த வரைகலையை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்ல நினைத்தேன். பெயிண்ட்டுக்குப் பதிலாக அழகுசாதனப் பொருட்களைக்கொண்டு என்னுடைய உடலில் ஓவியம் வரைத் தொடங்கினேன்” எனக் கூறுகிறார் மிர்ஜானா.

தற்போது செர்பியாவின் தலைசிறந்த ஓவியராக வலம் வந்துகொண்டிருக்கும் மிர்ஜானா, ‘கிகா’ என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை வைத்துள்ளார். ஆப்டிகல் இல்யூஷன் தோற்றத்தைப் பயன்படுத்தி  இவர் வரைந்த பொம்மலாட்ட உடலோவியத்தை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.

மிர்ஜானாவின் இந்தப் பொம்மலாட்ட உடலோவியம் உலக அளவில் கவனம்பெற்றது மட்டுமல்லாமல், 2016-ல் NYX நிறுவனம் நடத்திய போட்டியில் ஆப்டிகல் இல்யூஷன் பிரிவில் முதல் பரிசையும் பெற்றுத்தந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x