Last Updated : 21 Dec, 2018 10:02 AM

 

Published : 21 Dec 2018 10:02 AM
Last Updated : 21 Dec 2018 10:02 AM

திரை நூலகம்: ஒளிப்பதிவுக்கு ஒரு காணிக்கை

சினிமா தொழில்நுட்பம் குறித்து எழுதினால் ஒளிப்பதிவே முன்னால் வந்து நிற்கும். இன்று படச்சுருள் பயன்பாட்டிலிருந்து கைவிடப்பட்டு டிஜிட்டல் அதன் இடத்தை ஆக்கிரமித்துவிட்டது. திரைப்பட ஒளிப்பதிவு என்றால் இன்று டிஜிட்டல் கேமரா குறித்தும் அதன் சென்சார், இமேஜ் ரெஸ்சொல்யூசன் குறித்தும் தெரிந்துகொள்ளாமல் ஒரு சிறிய டிஜிட்டல் டி.எஸ்.எல்.ஆர் கேமராவைக் கூடத் திறமையாக பயன்படுத்தமுடியாது.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில், சினிமாவின் பொற்காலமாகப் பார்க்கப்படும் படச்சுருள் காலத்தையும் இன்றைய டிஜிட்டல் ஒளிப்பதிவு காலத்தையும் இணைந்து ‘காலத்தில் கரைதல்’ என்ற ஒளிப்பதிவுச் சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது படப்பெட்டி திரைப்பட, ஒளிப்பட, ஓவியச் சிற்றிதழ். ஒளிப்பதிவுச் சிறப்பிதழின் முதல் தொகுதி என்ற அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் 164 பக்க வெளியீட்டின் ஆசிரியர் பதிப்பாளர், ‘பரிசல்’ சிவ.செந்தில்நாதன்.

தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை கால ஒளிப்பதிவு கர்த்தாக்கள் பலர் வெளிநாட்டிலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் வந்து வியக்க வைத்தவர்கள். அவர்கள் உருவாக்கிய சலனத்தில் தொடங்கி, மாற்று சினிமாவில் இயங்கிய படைப்பாளிகளின் காட்சிமொழிக்கு அடிப்படை அமைத்துத்தந்த ஒளிப்பதிவு, இன்றைய நவீன டிஜிட்டல் ஒளிப்பதிவு என முழுமைக்கு முயன்றிருக்கிறது இந்தச் சிறப்பிதழ்.

டிஜிட்டல் ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தில் ‘டூலெட்’ எனும் உலக சினிமாவைப் படைத்து உலகம் முழுவதும் 26 விருதுகளைப் பெற்றுத்திரும்பியிருக்கும்  ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘ஒளியில் எழுதுதல்’ என்ற கட்டுரை, இன்றைய திரைப்பட ஒளிப்பதிவு எப்படி அமையவேண்டும் என்பதை விரல்பிடித்துச் சொல்லித்தரும் எளிமையான  உதாரணங்களுடன் விரிவான கட்டுரையாகக் கவர்கிறது. வரும் காலங்களில் இக்கட்டுரை திரைப்பட ஒளிப்பதிவில் தாக்கம் செலுத்தும் என்று நம்ப வைக்கிறது.

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் ‘கூரையிலிருந்து ஒரு கீற்று’ கட்டுரை 50-களின் இந்தி சினிமாவில் தன்னை பாதித்த படைப்பாளிகளின் படங்களில் காணக்கிடைத்த ஒளிக்கலையைப் பற்றி ரசனையுடன் கற்றுத்தருகிறது. கருப்பு – வெள்ளை காலத்தின் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லே பற்றி மீ. மாரிமுத்து, கட்டுரை, அனிமேஷன் ஒளிப்பதிவு பற்றி டிராஸ்கி மருதுவும் டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு பற்றி சி.ஜே.ராஜ்குமார் எழுதியிருக்கும் கட்டுரைகள் இந்தச் சிறப்பிதழ் முயற்சியை முழுமையடையச் செய்திருக்கின்றன.

நிழல்களின் அரசன் ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மாஸ்டருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த இதழ் ஒன்றின் விலை 150 ரூபாய்.

காலத்தில் கரைதல் படப்பெட்டி – ஒளிப்பதிவுச் சிறப்பிதழ்

பரிசல் புத்தக நிலையம், திருவல்லிக்கேணி,
சென்னை -5 | தொடர்புக்கு 9382853646

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x