Last Updated : 04 Dec, 2018 10:57 AM

 

Published : 04 Dec 2018 10:57 AM
Last Updated : 04 Dec 2018 10:57 AM

தேர்வுக்குத் தயாரா? - விளங்கிப் படித்தால் விலங்கியலை வெல்லலாம் (பிளஸ் 2- விலங்கியல்)

உயர்கல்வி இலக்குகளில் உச்சத்தில் இருக்கும் மருத்துவப் படிப்புக்கு அடிப்படையானது பிளஸ் 2 விலங்கியல் (தனி) பாடம். அதனாலே பொது நுழைவுத் தேர்வுக்கு இணையாக விலங்கியல் வினாத்தாளும் சற்றுக் கடினமாகவே இருக்கும். உரிய திட்டமிடலும் தெளிவான அணுகுமுறையும் பழகினால் இந்தக் கடினத் தன்மையைக் கடந்துவிடலாம். அதன் அடிப்படையில் விலங்கியலுக்கான பாடக் குறிப்புகள்...

புதிய வினாத்தாள் அமைப்பு

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான விலங்கியல் எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்களுக்கானது. ஒரு மதிப்பெண் பகுதி 15 வினாக்களுடனும், 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகள் கொடுக்கப்பட்ட தலா 9 வினாக்களில் இருந்து தலா 6 வினாக்களுக்குப் பதில் அளிக்குமாறும், 5 மதிப்பெண் பகுதி தலா 5 மதிப்பெண்களுக்கான ‘அல்லது’ பாணி வினாக்களுடனும் அமைந்திருக்கும்.

2 மதிப்பெண் பகுதியிலும் (வினா எண்.20), 3 மதிப்பெண் பகுதியிலும் (வினா எண்.30) தலா ஒரு கட்டாய வினா இடம்பெறுகிறது. புத்தகத்தின் பின்பகுதி வினாக்களுக்கு அப்பால், பாடங்களின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் பாடக் கருத்துகளைப் புரிந்துகொண்டு பதில் அளிக்குமாறும் வினாக்கள் அமைந்திருக்கும்.

ஒரு மதிப்பெண்: கருத்தான வினாக்கள்

விலங்கியலின் ஒரு மதிப்பெண் பகுதி கிட்டத்தட்ட மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வினாத்தாளைப் பிரதிபலிக்கும். இதை மனத்தில் வைத்துக்கொண்டு மாணவர்கள் இந்தப் பகுதியை அணுக வேண்டும். ஒரு பாடக் கருத்தின் அடிப்படையிலான வினாக்கள் பெரும்பாலும் கொள்குறிவகை (multiple choice) வினாக்களாக இருக்கும்.

அதுவும் நேர்மறை அல்லது எதிர்மறை வினாக்களாக இடம்பெறலாம். இவை தவிர்த்து ‘ஓரிரு வார்த்தையில் விடையளி’, ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ என்பதாகவும் வினாக்கள் அமையலாம்.

பல கருத்துகளின் அடிப்படையிலான வினாக்கள் என்பது, ஒரே பாடத்தின் பல்வேறு தலைப்புகளில் இருந்தோ, பல்வேறு பாடங்களில் இருந்தோ அமையலாம். அவை, தவறான / சரியான பொருத்தத்தை (இணையைத்) தேர்ந்தெடுத்தல், சரியான / தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல், உறுதிப்படுத்தல், காரணம் குறித்துச் சரியான விடையைக் கண்டறிதல், விளக்கம் / கூற்று சரியா, கூற்று / காரணம் கூறல், கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறிதல், படம் வரைந்து பாகம் குறித்தல் எனப் பலவகையாகவும் கேட்கப்படலாம்.

2, 3 மதிப்பெண்: கட்டாய வினாவில் கவனம்

3 மதிப்பெண் பகுதியில் ஓரிரு கருத்துகள் கூடுதலாக எழுதுவது மட்டுமே அதை 2 மதிப்பெண்ணிலிருந்து வேறுபடுத்தும். எனவே, இரண்டு பகுதிக்கும் சேர்ந்தாற்போல் படிக்கலாம். ஒரு மதிப்பெண் பகுதி போன்றே இங்கும் பல வகையிலான வினாக்கள் இடம்பெறும். வேறுபடுத்துக, ஒப்பிடுக, வரையறுக்க, எடுத்துக்காட்டு எழுதுக, குறிப்பு எழுதுக, காரணம் கூறுக, என்றால் என்ன, பணிகள் / முக்கியத்துவம் / பயன்கள்-பட்டியலிடுக, நன்மைகள் / தீமைகள் பட்டியலிடுக, அட்டவணைப்படுத்துக, படம் வரைந்து பாகங்கள் குறிக்க, கொடுக்கப்பட்ட படத்தில் பாகம் குறித்தல் என்பதாக அந்த வினாக்கள் அமைந்திருக்கும்.

thervujpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: சு.தியாகராஜன், முதுகலை ஆசிரியர் (விலங்கியல்), அரசு மேல்நிலைப்பள்ளி, கோமங்கலம்புதூர், கோவை மாவட்டம்.

‘புளுபிரிண்ட்’ கிடையாது என்பதால் அனைத்துப் பாடங்களையும் படித்தால் மட்டுமே கட்டாய வினாவுக்கு விடையளிக்க முடியும். அதேநேரம் அரசின் புதிய மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பார்த்தால், 2 மதிப்பெண் பகுதிக்கு 3, 4 ஆகிய பாடங்களில் இருந்தும், 3 மதிப்பெண் பகுதிக்கு 5-வது பாடத்திலிருந்தும் கட்டாய வினாக்களை எதிர்பார்க்கலாம்.

5 மதிப்பெண்: விளங்கிப் படித்தால் வெற்றி

வழக்கமான ‘எழுதுக, விவரிக்க’ வினாக்களுக்கு மாற்றாக, புது வினாத்தாளில் பலவகையாகப் பெருவினாக்கள் கேட்கப்படுகின்றன. படம் அல்லது வாக்கியம் கொடுத்து அதிலிருந்தோ / அது தொடர்பாகவோ வினாக்களுக்கு விடையளித்தல், தொடர் வரைபடம் மூலம் விளக்குதல், கருத்துரு வினாக்கள், மதிப்பு அடிப்படை வினாக்கள், உயர் சிந்தனைத் திறனுக்கான வினாக்கள் எனப் பலவகையிலும் அவை கேட்கப்படலாம். கருத்துகள் அடிப்படையில் விளங்கிப் படிப்பதும், அவற்றை உள்ளடக்கிப் பதில்களை எழுதிப் பார்ப்பதும் இந்தப் பகுதியில் முழு மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.

அதிகம் நேரும் தவறுகள்

முதல் பாடத்தில் 3-ல் ஒரு பங்கு வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்தே கேட்கப்படுகின்றன. 3, 5 மதிப்பெண் வினாக்களில் எடுத்துக்காட்டுகள், பயன்களைச் சிலர் எழுத மறக்கிறார்கள். 6-வது பாடத்தின் மீன்கள் குறித்த வினாக்களில் பெயர்களை எழுதும்போது அநேகர் தவறிழைக்கிறார்கள். குழப்பம் தரும் வார்த்தைகளைத் தனியாக அடையாளம் கண்டு புரிந்து படிப்பதுடன், எழுதிப் பார்ப்பதன் மூலம் தெளிவாகலாம்.

உதாரணத்துக்கு ரெனின் (Renin) மற்றும் ரென்னின் (Rennin), டெட்டனஸ் (Tetanus) மற்றும் டெட்டாணி (Tetany) ஆகியவை தொடர்பான வினாக்களுக்கு மாற்றி விடையளிப்பது நடக்கிறது. 3, 5 மதிப்பெண் பகுதியில் ஒற்றை வினாவை 2 தனி வினாக்களாகப் பிரித்துக் கேட்கும்போது, அவற்றில் இரண்டாவது வினாவை அவசரத்தில் மறந்துவிடுகிறார்கள். தேர்வைக் கவனமாக எழுதுவதுடன், திருப்புதலுக்கும் போதிய நேரம் ஒதுக்குவதன் மூலம் இதைச் சரிசெய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x