Published : 30 Aug 2014 02:11 PM
Last Updated : 30 Aug 2014 02:11 PM

கேட்ஜட் உலகம்

நாம் இணையமயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். இதன் மையமாக ஸ்மார்ட் போன்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன.

ஸ்மார்ட் போன் கவலை

இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. அதென்ன ஸ்மார்ட் போன் கவலை என்று கேட்கிறீர்களா? எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை.

இழப்பு என்றால் விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல; அதைவிட போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். இதைத் தான் ஸ்மார்ட் போன் தொலைவதால் ஏற்படும் கவலை (smartphone-loss anxiety disorder) என்கின்றனர்.

கனடாவின் ஆண்டாரியோவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தி, ஸ்மார்ட் போன் தொலைய வாய்ப்பில்லை என்னும் மிதப்பில் இருப்பவர்கள் இந்தக் கவலையால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தப் பாதிப்புகளை மீறி ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் போன் தொலைந்தால் அதில் உள்ள தகவல்களைப் பாதுக்காக்கத் தேவையான வழிகள் பற்றி அறியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். போனில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்து வைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தகவல்கள் மறைந்து போகச்செய்யும் டைம்பாம் வழி, தொலைவில் இருந்து லாக் செய்வது என இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

உங்கள் ஸ்மார்ட் போன் தொலையாமலே இருக்கட்டும். ஆனால், அதில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளை அறிந்து வைத்திருங்கள் தவறில்லை!

சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு

ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டில் பெரியவர்களைவிடப் பிள்ளைகள் கில்லாடிகளாக இருக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட் போன்கள் சிறுவர்களிடம் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்போதும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் டிவி என டிஜிட்டல் சாதனங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் முக உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை மெல்ல இழந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. நேருக்கு நேர் பழகும் மற்றும் உரையாடும் வாய்ப்பு குறைவதால் இந்தப் பாதிப்பு என்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நடத்திய இந்த ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அவர்களிடமிருந்து வாங்கிவிட்டால் பிள்ளைகளிடம் மற்றவர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

என்ன செய்ய, இவை நம் காலத்து பாதிப்புகள்!

பயர்பாக்ஸ் போன்

எதிர்பார்க்கப்பட்டது போலவே பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. இண்டெக்ஸ் நிறுவனம் கிலவுட் எப்.எக்ஸ் (Intex Cloud FX ) எனும் பெயரில் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. விலை. ரூ.1,990. மின் வணிக தளமான ஸ்னேப்டீல் மூலம் இது விற்கப்பட உள்ளது. இதே போல மற்றொரு பயர்பாக்ஸ் போனை (Spice Fire One Mi-FX 1 ) ஸ்பைஸ் நிறுவனம் ரூ.2299 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நிலையில் சாதாரண செல்போன் விலையில் பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன் அறிமுமாகி இருக்கிறது. 2 மெகாபிக்சல் காமிரா, 3.5 இன்ச் திரை, 128 எம்பி ராம் என இதன் அம்சங்கள் சாதாரணமாக இருந்தாலும் முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இதன் விலை ஏற்றதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்று சொல்லப்படும் பயர்பாக்ஸ் போனில் கவனிக்க வேண்டிய அம்சம் அதன் பிரத்யேக இயங்குதளமான பயர்பாக்ஸ் ஓ.எஸ் ஆகும்.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தும் மொபைல் ஓஎஸ் உலகில் பயர்பாக்ஸ் ஓஎஸ் புதிய வரவு மட்டும் அல்ல, முழுக்க முழுக்க இணையம் மற்றும் எச்.டி.எம்.எல் 5 சார்ந்ததாகும். இதில் வாட்ஸ் அப் கிடையாது. அதற்குப் பதில் கனெக்ட்ஏ2 எனும் ஆப்ஸ் உள்ளது. பயர்பாக்ஸ் போன் எந்த வகையான வரவேற்பைப் பெற்று எந்த வகையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது எனப் பார்க்கலாம்.

ஐஸ் பக்கெட் சவால்

இணைய உலகின் இப்போதைய ட்ரென்ட் ஐஸ் பக்கெட் சவால். ஏ.எல்.எஸ். அமைப்பிற்காக நிதி திரட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் புதுமையான சவால் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பிரபலங்கள் முதல் ஃபேஸ்புக் பயனாளிகள் வரை லட்சக்கணக்கானோரைக் கவர்ந்துள்ளது. இதன்படி தலையில் சில்லென்று தண்ணீரை ஊற்றிக்கொண்டு அதே போல தண்ணீர் ஊற்றிக்கொள்ள மூன்று பேரைச் சவாலுக்கு அழைக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்க வேண்டும், அல்லது நிதி அளிக்க வேண்டும். பெரும்பாலும் எல்லோரும் சவாலையும் ஏற்று நிதியும் அளித்துவருகின்றனர்.

இதனிடையே சாம்சங் காலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனும் ஐஸ் பக்கெட் சவாலில் குதித்துள்ளது. இது தொடர்பான வீடியோவில் சாம்சங் காலெக்ஸி போன் ஐஸ் தண்ணியில் குளித்து, ஐபோன், நோக்கியா மற்றும் எச்டிஎஸ் ஆகிய வற்றைச் சவாலுக்கு அழைத்துள்ளது. நோக்கியா மற்றும் எச்டிஎஸ் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளன.

நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை இப்படி விளம்பர நோக்கில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கும் விமர்சனத்திற்கும் சாம்சங் இலக்காகியுள்ளது.

செல்ஃபீ போன்கள்

ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பலருக்கு செல்ஃபி மிகப் பிடித்த விஷயம்தான். செல்ஃபியை எடுத்துத் தள்ள என்றே தனியே ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகத் தொடங்கியிருக்கின்றன. சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பிரியா சி3 (Xperia C3 Dual ) ஸ்மார்ட் போன் செல்ஃபிகளுக்கு ஏற்ற போனாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்சல் முன் பக்க காமிரா மற்றும் 25 மிமி வைடு ஆங்கிள் லென்ஸ் 80 டிகிரி தோற்றத்தைத் தரக்கூடியது. ஏற்கனவே அறிமுகமான சிங்கிள் சிம் மாதிரியுடன் இப்போது டபுள் சிம் மாதிரி வந்துள்ளது. விரைவில் இது சந்தையில் கிடைக்கும் .

இதே போல லாவா நிறுவனமும் தனது எக்ஸ் வரிசை போன்கள் செல்ஃபீ போன்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. முன் பக்க காமிரா, பிளாஷ் மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸ் என செல்ஃபீ அம்சங்கள் இதிலும் இருக்கின்றன.

ஆப்ஸ் உலகம்

ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆப்ஸ் பற்றி சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் போன் ஆப்ஸில் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் முன்னணியில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் யூடியூபுக்கான அப்ளிகேஷன் உள்ளது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் பயனாளிகளில் பலரும் புதிய அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்வதில்லை என்று இன்னொரு தகவல் சொல்கிறது.

இதனிடையே பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ் அப், 600 மில்லியன் தீவிரப் பயனாளிகளின் எண்ணிக்கையைத் தொட்டிருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 மில்லியனைத் தொட்டுள்ளது. மொபைல் இயங்கு தளங்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 18,000 க்கும் மேற்பட்ட வகையான சாதனங்களில் செயல்படுவதாக ஓபன் சிக்னல் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆப்ஸ் பற்றி சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் போன் ஆப்ஸில் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் முன்னணியில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் யூடியூபுக்கான அப்ளிகேஷன் உள்ளது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் பயனாளிகளில் பலரும் புதிய அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்வதில்லை என்று இன்னொரு தகவல் சொல்கிறது.

இதனிடையே பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ் அப், 600 மில்லியன் தீவிரப் பயனாளிகளின் எண்ணிக்கையைத் தொட்டிருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 மில்லியனைத் தொட்டுள்ளது. மொபைல் இயங்கு தளங்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 18,000 க்கும் மேற்பட்ட வகையான சாதனங்களில் செயல்படுவதாக ஓபன் சிக்னல் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x