Last Updated : 03 Nov, 2018 12:02 PM

 

Published : 03 Nov 2018 12:02 PM
Last Updated : 03 Nov 2018 12:02 PM

தீபாவளி வீட்டு அலங்காரம்

தீபாவளிக்கு வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? மலர்கள், மெழுகுவர்த்திகள், தோரணங்கள், கோலங்கள், காகித விளக்குகள், மின்சார விளக்குகள்  எனப் பெரிய செலவில்லாமல் எளிமையான வழிகளில் தீபாவளிக்கு வீட்டை ஒளிமயமாக அலங்கரிக்க முடியும். தீபாவளிக்கு வீட்டில் ஒளியைக் கொண்டுவருவதற்கான சில வழிகள்.

மலர் அலங்காரம்

புத்துணர்ச்சியான மலர்கள் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முழுமையடையாது. வீட்டுக்குள் திருவிழா மனநிலையை உடனடியாக ஏற்படுத்தக்கூடியவை மலர்கள். வண்ண வண்ண மலர்களின் இதழ்களை அலங்கார விளக்கில் தண்ணீர் ஊற்றி வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கலாம். மலர்களால் கோலமிட்டும் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கலாம்.

மெழுவர்த்திகள்

வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை விதவிதமான அளவுகளில் வாங்கியும் வீட்டை அலங்கரிக்கலாம். அலங்கார மெழுகுவர்த்திகளைக் கொண்டும் வீட்டின் மேசைகளை அலங்கரிக்கலாம். அப்படியில்லாவிட்டால், கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர்நிரப்பி, அதன்மேல் மிதக்கும் மெழுவர்த்திகளை ஏற்றியும் அலங்கரிக்கலாம். மெழுகுவர்த்திகள் பிடிக்காவிட்டால், மின்சார மெழுகுவர்த்திகளை வாங்கி அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். இந்த மின்சார மெழுகுவர்த்திகளைத் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திகொள்ளலாம்.

தோரண விளக்குகள்

எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்திகளைப் பராமரிக்க பிடிக்காதவர்கள் தோரண விளக்குகளைச் சுவர்களில் மாட்டி அலங்கரிக்கலாம். சுவர்களில் மட்டுமல்லாமல் அறைக்கலன்களிலும் இந்த விளக்குகளை மாட்டி அலங்கரிக்கலாம்.

தோரணங்கள்

தோரணங்கள் இல்லாமல் எந்த விழாவும் முழுமை அடைவதில்லை. அதனால், தீபாவளிக்கும் வீட்டில் விதவிதமான தோரணங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். கண்ணாடியிலான அலங்காரத் தோரணங்கள், பாரம்பரியமான மலர், மாவிலைத் தோரணங்கள், கலைநயமிக்க தோரணங்கள் ஆகியவற்றாலும் வீட்டை அலங்கரிக்கலாம்.

கோலங்கள்

வண்ண கோலத்தால் தீபாவளியை வரவேற்பதுதான் பொறுத்தமாக இருக்கும். வாசல், வரவேற்பறை, கதவுகள் எனப் பல இடங்களில் கோலமிட்டு வீட்டை அலங்கரிக்கலாம். கதவுகள், ஜன்னல்களில் பெயிண்ட்டைக் கொண்டும் வண்ணக் கோலமிடலாம். டைல்ஸில் ஸ்டிக்கர் கோலங்களை ஒட்டி அலங்கரிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

காகித விளக்குகள்

காகித விளக்குகள் (Paper Lanterns) தற்போதைய அலங்காரப் போக்குகளில் முக்கியமானவை. இந்த விளக்குகளை வீட்டின் கூரையின்மேல் கட்டித் தொங்கவிடலாம். இந்த காகித விளக்குகள் வீட்டுக்கு ஒளியோடு வண்ணமயமான தோற்றத்தைக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x