Last Updated : 25 Apr, 2014 11:52 AM

 

Published : 25 Apr 2014 11:52 AM
Last Updated : 25 Apr 2014 11:52 AM

யாமிருக்கப் பயமே

‘விண்ணைத் தாண்டி வருவாயா', ‘கோ', ‘நீ தானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் ‘யாமிருக்க பயமே'. படத்தின் இயக்குநர் டி.கே. இசையமைப்பாளராகச் சாஃப்ட்வேர் இன்ஜினியர் எஸ்.என். பிரசாத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியின் மாணவர்.

படத்தில் 4 குறும்பாடல்களே இடம்பெற்றுள்ளன. எல்லாமே நான்கு நிமிடங்களுக்கும் குறைவாக ஓடக்கூடியவை.

ஹரிசரணின் குரல் ஒலிப்பதிவில் சற்றே மாற்றப்பட்டு ஒலிப்பது உறுத்தலாகத் தெரியாத வகையில் வசீகரிக்கிறது ‘வெள்ளைப் பந்து’. பின்னணி இசையும் தனித்துவத்துடன் உள்ள இந்தப் பாடல், இந்த ஆடியோவின் அடையாளப் பாடலாக இருக்கும்.

ஹை பிட்ச் குரலுக்கு அறியப்பட்ட பென்னி தயாளும், சுனிதா சாரதியும் பாடியுள்ள ‘என்னமோ ஏதோ’வில் பழைய சினிமா பாடல்களின் தன்மையைப் பார்க்கலாம். அதேநேரம் மாடர்னான செட்டிங், குரல்கள் மூலம் புதிய அனுபவத்தைத் தருகிறது.

கோ படத்தின் மிகப் பெரிய ஹிட் பாடலான ‘என்னமோ ஏதோ’ என்ற வார்த்தைகள் மீது படக்குழுவுக்கு சென்டிமென்ட் பிடிப்பு அதிகம் போலிருக்கிறது.

இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத்தும் ஹரிணி பத்மநாபனும் பாடியுள்ள ‘ஏமாத்துக்காரன்’, அதிரடியான பாடலாக இருந்தாலும் அசத்தவில்லை.

கானா பாலா இடையிடையே குரல் கொடுக்கும் ‘அடைக்கலம்’ பாடல், தேவாலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவப் பாடல்களின் மாடர்ன் வெர்ஷன் போலிருக்கிறது. இதைப் பாடியிருப்பது எல் ஃபே காயர்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆடியோ ரசிகனை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், ஒரு சில அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x