Last Updated : 17 Nov, 2018 11:33 AM

 

Published : 17 Nov 2018 11:33 AM
Last Updated : 17 Nov 2018 11:33 AM

வீட்டில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

வீட்டை மழைக்காலங்களில் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க ஜன்னல்களுக்கு வலை அடித்து கொசுவோ சிறிய வகைப் பூச்சிகளோ உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொள்கிறோம். ஆனால், இதையெல்லாம் மீறி நமது வீட்டுக்குள் பூச்சிகள் நுழைந்து விடுவதுண்டு. அவற்றுள் முக்கியமானவை கரையான்கள்.

ஆனால், நாம் அதனுடைய இருப்பிடத்தில் வீடுகட்டி குடியிருப்பதால் கரையான்கள் பூமிக்குள்ளிருந்து வந்து நமது வீட்டின் நிலைக்கதவுகள், ஈரப்பதமுடைய இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். (பதிலுக்குப் பதில்தான்) இதனை அப்புறப்படுத்தினாலும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அது மீண்டும் நமது வீட்டின் வேறு இடங்களில் வந்துவிடும். இவற்றிலிருந்து தப்பிக்க அவற்றை நமது வீட்டைவிட்டு அகற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் செய்வதுதான் சிறந்த வழி.

சரி அதனை எப்படிச் செய்யலாம் என்றால் தற்போது இதற்காகவே பல நிறுவனங்கள் தோன்றியுள்ளன. பெரிய நிறுவனங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத குடோன்களில் முக்கியமான பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அதைத் திறந்து பார்க்கும்போது அவற்றில் கரையான்கள் வந்து பாதி அரித்திருக்கும். பல நிறுவனங்களுக்கு இதனால் நிதியிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கத்தான் பெஸ்ட் கன்ட்ரோல் எனப்படும் நிறுவனங்கள் எனப்படும் பூச்சி கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் தோன்றின.

இந்நிறுவனங்கள் சதுரஅடிக்கு இவ்வளவு என்ற கணக்கீட்டில் கட்டிடம் உள்ள மொத்தப் பரப்பளவுக்கு என்று தொகை கணக்கிட்டுத் தங்களது பணியைச் செய்கிறார்கள். மேலும் 5 வருடங்களுக்குக் கரையான்கள் வராது என்று உத்தரவாதமும் தருகிறார்கள். நிச்சயமாக வராதா? என்றால் அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிறுவனம் அவர்களின் பணியினை (என்ன பணி எப்படிச் செய்கிறார்கள் என்பதை விரிவாகக் கீழே பார்க்கலாம்) செய்துவிட்டு போன பிறகு புதிதாக அந்தக் குறிப்பிட்ட கட்டிடத்துக்கு உள்ளே கொண்டு செல்லும் பொருட்களில் குறிப்பாக மரத்தால் ஆன பொருட்களில் கரையான்கள் இல்லையென்று உறுதிசெய்துவிட்டு உள்ளே வைக்கவேண்டும், ஈரமான பகுதிகளை அடிக்கடி கண்காணியுங்கள், ஸ்டோர் ரூம் போன்றவற்றை அடிக்கடிச் சுத்தம்செய்து பராமரித்தால் அவர்கள் அளித்துள்ள உத்தரவாதத்தின்படி கரையான்கள் வராது என்று உறுதி அளிக்கின்றனர்.

எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள்?

முதலில் அவர்கள் குறிப்பிட்ட கட்டிடத்தின் தரை எந்த வகையில் அமைத்துள்ளனர் என்று பார்க்கிறார்கள். டைல் என்றால் ஒரு அடிக்கு ஒரு அடியா, இரண்டடிக்கு இரண்டடியா என்று பார்க்கிறார்கள். வெறும் சிமெண்ட் தரையென்றால் ஒரு அடி என்ற கணக்கில் சுவற்றை ஓட்டி ஒரு சாக்பீஸ் நுழையும் அளவுக்கு டிரில் செய்து ஓட்டை போடுகிறார்கள்.

டைல்ஸ் ஒரு அடி என்றால் இரண்டு டைல் இணையும் இடத்தில் ஓட்டை போடுகிறார்கள். அதிலிருந்து வரும் மண்ணை அகற்றிவிட்டு அவர்கள் ஒருவித கெமிக்கலை அரை மணிநேரத்திற்கு ஒரு முறை என்று அதில் சிறிய மருந்து தெளிப்பான் மூலமாக உள்ளே செலுத்துகிறார்கள்.

தரையில் மார்பிள் போன்றவையாக இருந்தால் தரையையொட்டி சுவரில் துளையிட்டு தலைகீழான எல் வடிவில் ஒட்டையிடப்பட்டு அதில் மருந்து செலுத்தப்படும். மருந்து செலுத்தி குறிப்பிட்ட நேரம் கழித்த பின்பு சாதாரண சாக்பீஸை கெமிக்கலில் ஊரவைத்து பிறகு அவற்றை அந்த ஓட்டைகளில் வைத்துத் தரையிலுள்ள வண்ணத்துக்கு ஏற்றவாறு சிமெண்ட் கலரைப் பூசிவிடுவார்கள்.

இதனால் ஓட்டை போட்டது தெரியாத அளவுக்குத் தரை மாறிவிடும். 5 வருட உத்திரவாதத்தை அவர்கள் நிறுவனப் பெயருள்ள கடிதத்தில் கையொப்பமிட்டு தந்துவிடுதால் ஐந்து வருடங்களுக்கு நமது கட்டிடத்தைப் பூச்சிகள் அண்டாது எனத் தைரியமாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x