Last Updated : 30 Nov, 2018 10:28 AM

 

Published : 30 Nov 2018 10:28 AM
Last Updated : 30 Nov 2018 10:28 AM

ஹாலிவுட் ஜன்னல்: புதிய சிலந்தி நாயகன்

சூப்பர் ஹீரோக்களை முன்வைத்து ஆக்‌ஷன் படங்கள் எடுத்து மிரட்டுவது ஹாலிவுட் ஸ்டைல். அதுவே அலுத்துப்போனால் ஆக்‌ஷன் ஹீரோக்களைக் கலாய்த்துப் படம் எடுப்பதிலும் அவர்கள்தான் முன்னோடி. ஸ்பைடர் மேன் வரிசையில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் ’ஸ்பைடர் மேன்: இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்’ திரைப்படம் இதில் இரண்டாவது வகை.

இணையான இன்னொரு உலகத்தில் நடக்கும் கதையில் ஸ்பைடர் மேன் பீட்டர் பார்கருக்கு 40 வயதாகி இருக்கிறது. சாகசம் எதிலும் இறங்காது சதா உண்பதும் மத்திம வயதுக்கான தவிப்புகளில் அல்லாடுவதுமாக இருக்கிறார். இப்படியே போனால் உலகத்தைக் காப்பது எப்படி என விசனம் கொண்டு, தனது இடத்தை புதிய ஸ்பைடர் மேனால் நிரப்பவும் முனைகிறார். அதற்கான முயற்சிகளில் மார்வல் காமிக்ஸின் ஸ்பைடர் பட்டாளங்கள் இடம்பெறுவதும், இவர்களுக்கென முளைக்கும் வில்லனை எதிர்த்துப் போரிடுவதும் உலகத்தைக் காப்பதுமான வழக்கமான கதை நடைபெறுகிறது.

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில், அதன் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆக்‌ஷன் காட்சிகளில் விளையாடி இருக்கிறார்கள். சொதப்பலான சீனியர் ஸ்பைடர் மேன் பாத்திரமும் துடிப்பான இளம் ஸ்பைடர்களும் அவர்களின் ஆர்வக் கோளாறு நடவடிக்கைகளுமாகப் படத்தின் முதல் பாதி கலகலக்கிறது. அடுத்த பாதியை ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக அர்ப்பணித்திருக்கின்றனர்.

மைல்ஸ் மோரல்ஸ், ஸ்பைடர் வுமன், ஸ்பைடர் நார், ஸ்பைடர் ஹாம் என மார்வல் காமிக்ஸின் பிரதான சிலந்தி நாயகர்கள் படத்தில் வருகிறார்கள். இவர்களில் மைல்ஸ் மோரல்ஸைச் சுற்றியே கதை நகர்கிறது. முழுவதும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்காமல், 142 அனிமேட்டர்களைக் கொண்டு காமிக்ஸ் புத்தக அனுபவத்தின் அடிப்படையிலான வரைகலை உத்தியைப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.

சீனியர் ஸ்பைடர் மேனுக்கு ஜெக் ஜான்சன், ஸ்பைடர்மேன்-நார் கதாபாத்திரத்துக்கு நிகோலஸ் கேஜ் எனப் பிரபல நடிகர்கள் பின்னணிக் குரல் தந்துள்ளனர். பாப் பெர்ஸிகேட்டி (Bob Persichetti), பீட்டர் ராம்சே (Peter Ramsey), ராட்னி ராத்மன் (Rodney Rothman) ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி படத்தை இயக்கி உள்ளது. டிசம்பர் 14 அன்று புதிய ஸ்பைடர் மேன் திரைப்படத்தைக் காணலாம்.ஹாலிவுட் ஜன்னல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x