

‘கஜா’ புயல் கரையைக் கடந்த அன்று இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் இரவு பகல் பாராமல் பரப்பரப்பாக இருந்தன. புயல் கரையைக் கடக்கும் நேரத்தையும் இடத்தையும் கணித்து இரண்டு மையங்களும் மக்களிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தன. இந்தியாவில் புயல் எச்சரிக்கைத் தகவல்கள் எப்போது முதல் பகிரத் தொடங்கினார்கள் என்று தெரியுமா?
வங்காள விரிகுடாவில் 1864-ம் ஆண்டில் மிகக் கடுமையான இரண்டு புயல்கள் இந்தியாவைத் தாக்கின. முதல் புயல் அக்டோபரில் கொல்கத்தாவுக்கு அருகேயும் இரண்டாம் புயல் மச்சிலிப்பட்டினத்தை நவம்பரிலும் தாக்கின. இந்தப் புயல் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உடைமைகள் கடும் சேதமடைந்தன.
இந்த இரு பெரும் இயற்கைப் பேரிடர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசை உஷார்படுத்தின. புயல் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கும் சூழ்நிலைக்கு பிரிட்டிஷ் அரசு தள்ளப்பட்டது. இதையடுத்து இதற்கான திட்டம் ஒன்றை அறிவித்து, அதை மேம்படுத்த குழு ஒன்றை அமைத்து செயல்படப் பரிந்துரைத்தது பிரிட்டிஷ் அரசு.
இந்தக் குழு 1865-ம் ஆண்டில் கொல்கத்தா துறைமுகத்தில் முதன்முதலாகப் புயல் எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறையே 1875-ம் ஆண்டில்தான் உதயமானது. ஆனால், வானிலை ஆய்வு மையம் தொடங்குவதற்கு முன்பே புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றச் சேவை இந்தியாவில் தொடங்கிவிட்டது.
முதலில் வங்காள விரிகுடாவில் தொடங்கிய இந்த சேவை, பின்னர் அரபிக் கடல் பகுதியில் மும்பை, கராச்சி, ரத்தினகிரி, வென்குர்லா, கர்வார், கும்டா ஆகிய துறைமுகங்களில் 1880-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்தியா முழுவதும் இந்த சேவை 1886-ம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியத் துறைமுகங்கள் அனைத்தும் புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றம் பெறத் தொடங்கின.
இந்தியாவில் வங்காள விரிகுடாவில் உள்ள துறைமுகங்கங்களுக்கும் அரபிக் கடலில் உள்ள துறைமுகங்களுக்கும் என இரண்டு விதமான புயல் எச்சரிக்கை சிக்னல்கள் பயன்பாட்டில் இருந்தன. ஒரு கட்டத்தில் இது பெரும் குழப்பத்தை விளைவித்தது. இதன் காரணமாக 1898-ம் ஆண்டில் ஒரே சீரான புயல் எச்சரிக்கை சிக்னல்கள் இந்தியத் துறைமுகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. கொல்கத்தா துறைமுகம் எல்லாத் துறைமுகங்களுக்கும் புயல் எச்சரிக்கைத் தகவல் அனுப்பும் பொறுப்பை எடுத்துக்கொண்டது.
அன்றைய பர்மா உள்பட வங்காள விரிகுடாவைச் சுற்றிய துறைமுகங்கள் புயல்கள் பற்றிய தகவல் பரிமாற்றத்தை கொல்கத்தா துறைமுக அலுவலகத்திலிருந்தே பெற்றன. அரபிக் கடலில் புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றப் பொறுப்பை அன்றைய பம்பாய் வானிலை அறிக்கை மையம் எடுத்துக்கொண்டது.
இந்தியாவில் வானிலை ஆய்வு மையம் தொடங்குவதற்கு முன்பே 1865-1875 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புயல் எச்சரிக்கைப் பரிமாற்றம் நடைபெற்றது இந்திய வானிலை ஆய்வில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 1875-ம் ஆண்டில் இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்ட பிறகு அதன் முதல் வானிலை அறிவிப்பாளராக ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்டு என்ற ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார்.
அப்போது கொல்கத்தாவில் செயல்பட்ட வானிலை ஆய்வுத் துறையின் தலைமையக முதல் இயக்குநராக ஜான் எலியட் 1889-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். நிர்வாக வசதிக்காக கொல்கத்தாவிலிருந்து புனே, சிம்லா என வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாறிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமையகம், 1944-ம் ஆண்டு முதல் டெல்லிக்கு மாறியது.
சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ம் ஆண்டில் உலக வானிலை ஆய்வு அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது இந்தியா. இந்தியாவில் சென்னை, குவஹாட்டி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி என ஆறு நகரங்களில் இந்திய மண்டல வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டன. உலக அளவில் வானிலைக் கணிப்புகளை வெளியிடுவதிலும் வானிலை ஆய்வு மேற்கொள்வதிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அங்கம் வகித்துவருகிறது.