Published : 25 Aug 2014 02:09 PM
Last Updated : 25 Aug 2014 02:09 PM

மூளையின் ஆய்வுக்காக விருது பெற்ற இந்தியர்

நாம் தினந்தோறும் எழுதுவது, படிப்பது, யோசிப்பது போன்ற எத்தனையோ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். நமது இந்தச் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைபவை நமது எண்ணங்கள். இவற்றைக் கடத்துவது நமது உடம்பிலுள்ள நரம்பு மண்டலம்.

நரம்புகளைப் பற்றிய ஆய்வில் இந்தியர் ஒருவர் சிறந்துவிளங்கிவருகிறார். அது மட்டுமல்ல அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கும் ஆய்வுக்கான ஊக்கத்தொகையையும் பெற்றுள்ளார். அவர்தான் பார்த்தா மித்ரா. மனித மூளை தொடர்பான ஆராய்ச்சிக்காக பார்த்தா மித்ராவுக்கு, 3 லட்சம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 1.81 கோடி ரூபாய் உதவித் தொகையாகக் கிடைத்துள்ளது.

மனித மூளை தொடர்பான ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்க அரசு பிரெயின் (Brain Research through Advancing Innovative Neurotechnologies) என்னும் அமைப்பை நடத்திவருகிறது. புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு மனித மூளையின் வடிவமைப்பை ஆராய்வது இதன் நோக்கம்.

நியூயார்க்கில் உள்ள ஆய்வு நிலையம் ஒன்றில் விஞ்ஞானியாக இருக்கும் பார்த்தா மித்ராவுடன் ஃப்ளோரின் அல்பினு என்பவருக்கும் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

அவர் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையில் ஆராய்ச்சியாளராகச் செயல்படுகிறார். இப்போது கிடைத்துள்ள இந்த உதவித் தொகை மூலம் அவர்கள் இருவரும் இணைந்து நரம்பு அறிவியலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

மூளையின் சிறிய படங்களிலிருந்து நரம்புகளின் அமைப்பையும், செல் வகைகளையும் கண்டறியும் கருவியை அவர்கள் உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது. விஞ்ஞானி பார்த்தா மித்ரா, அப்சர்வ்டு பிரெயின் டைனமிக்ஸ் என்னும் நூலை எழுதியுள்ளார். இதை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x