Last Updated : 05 Nov, 2018 06:32 PM

 

Published : 05 Nov 2018 06:32 PM
Last Updated : 05 Nov 2018 06:32 PM

ஆங்கிலம் அறிவோமே 236: அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!

கேட்டாரே ஒரு கேள்வி

“Plenty என்றால் ‘போதுமான அளவு’ என்று அர்த்தமா  அல்லது ‘அளவுக்கு அதிகமான’ என்று அர்த்தமா?

இரண்டும்தான் நண்பரே.  யோசித்துப் பார்த்தால் இது ​இன்னும் தெளிவாக விளங்கும்.    Plenty என்றால் ‘போதும் போதும் எனும் அளவுக்கு’.

************

“A friend in need is a friend indeed என்பதற்குப் பொருள்  தேவைப்படும் போதெல்லாம் உதவுபவன்தான் நண்பன் என்பதுதானே?”

ஆமாம் நண்பரே. குறளில் வருவது போல ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைபவன்தான் நண்பன்’.  ஆனால், உங்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறது.  ‘தேவைப்படும்போதெல்லாம்’ என்பதை  ‘தேவைப்படும்போது’ என்று வைத்துக் கொள்ளலாமே.

A friend in need is a friend indeed என்பதற்கு இன்னொரு பொருளும் தோன்றுகிறது.  உங்கள் உதவி ஒருவருக்குத் தேவையென்றால் (அதைப் பெறுவதற்காக) அவர் உங்களுக்கு நண்பர் ஆகிவிடுகிறார்!

************

“Antic jewelry என்கிறார்களே அது எவ்வளவு வருஷத்துக்கு முந்தைய நகை?”

பொது அறிவுப் பகுதிக்கு அனுப்பப்பட வேண்டிய கேள்வி என்று முதலில் தோன்றினாலும், ஆங்கிலம் அறிவோமே பகுதிக்கும் தொடர்புள்ளதாகக் கூடிய கேள்வி என்றும்படுகிறது.

முதலில் ‘ஆன்டிக்’ என்பதற்குக் குறிப்பிட்டுள்ள எழுத்துகள் தவறானவை. Antique jewelry என்று அது இருக்க வேண்டும். அதாவது தொன்மையான நகை. இதுபோன்ற நகைகளை vintage jewelry என்றும் கூறுவதுண்டு.

Estate jewelry என்பது இறந்த ஒருவரின் நகைகளைக் குறிப்பதாக உள்ளது. அதாவது secondhand நகை.  இந்த வகை நகைகள் antique நகைகளாக இருக்க வாய்ப்பு உண்டு.

பரதநாட்டியம் ஆடுபவர்கள் antique temple jewelry வகையைப் பயன்படுத்து வார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை jewellery என்று எழுதுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கீழே சில நகைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை ஆங்கிலத்தில் எப்படிக் கூறப்படுகின்றன என்று கூறுங்கள்.  

1. கொலுசு

2. கூந்தலில் செருகிக் கொள்ளும் தக்கை

3. தாயத்து

மேற்கூறியவற்றின் ஆங்கில வார்த்தைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. Anklet

2. Hairclip or Barrette

3. Amulet

************

“Cat on the wall என்பதற்குப் பொருள் நம் தீர்மானத்தைப் பிறருக்குத் தெரிவிக்காமல் இருப்பதா அல்லது முடிவெடுக்க முடியாத நிலையா?”

பேச்சு வழக்கில் மதில்மேல் பூனை என்கிறோம்.  அதை அப்படியே ஆங்கிலத்தில் Cat on the wall என்று மொழிபெயர்க்கிறோம்.

ஆங்கிலத்தில் இந்த நிலையில் இருப்பவர்களை Fence-sitter என்கிறார்கள்.  முடிவெடுக்காதவரை இப்படிக் குறிக்கிறார்கள். ஆனால், ‘நடுநிலையான’ (neutral) என்பதற்கு ஓர் உயரிய மதிப்பு இருப்பதைப் போல, இதற்கு இருப்பதில்லை.  முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதுபோன்ற எதிர்மறை அர்த்தத்தில் fence-sitter என்பதைப் பயன்படுத்துகிறோம்.

என்றாலும் indecision is the key to flexibility என்பதும் உண்டு.

************

“Looked at each other என்றாலும், looked at themselves என்றாலும் ஒன்றா?’’

இல்லை நண்பரே.  Aravind and Anu​pama looked at each other என்றால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று பொருள் (அது அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் பார்வையாகவும் இருக்கலாம்).

Aravind and Anupama looked at themselves என்றால், அதை இப்படிக் கற்பனை செய்து பாருங்கள்.  அரவிந்த் கண்ணாடியில் தன் முகத்தைப் ​பார்த்துக் கொண்டிருக்கிறான்.  அனுபமா வேறொரு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். (அதாவது ‘அண்ணல் தன்னையே நோக்கிக்கொண்டான்.  அவள் தன்னையே நோக்கிக்கொண்டாள்’).

eng-2jpg100 

போட்டியில் கேட்டுவிட்டால்

The box is too __________ for you to be lifted by yourself.

a) small

b) big

c) heavy

d) burdensome

உங்கள் ஒருவரால் மட்டுமே ஒரு பெட்டியைத் ​தூக்க முடியாது என்றால், அந்தப் பெட்டி எது மாதிரி இருக்க வேண்டும்?  இந்தக் கேள்விக்கான விடையைத்தான் கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

Small என்பது சரியான விடை அல்ல.  ஏனென்றால் சிறிய பெட்டியை எளிதில் தூக்க முடியும்.

பெரிய பெட்டியைத் ​தூக்குவது கஷ்டமானது என்று மேலோட்டமாகத் தெரியலாம்.  ஆனால், இந்தக் கேள்விக்கு விடை அளியுங்கள்.  ‘எதை ​தூக்குவது கடினமானது  -  பெரிய பெட்​டியையா  அல்லது கனமான பெட்டியையா?’.  கனமான பெட்டி என்பதுதானே சரியான விடையாக இருக்க முடியும்? (உள்ளே எது​வுமே வைக்கப்ப​ட்டிருக்காத பெரிய பெட்டியைத் தூக்குவது கடிமானது அல்ல).  எனவே, big என்ற விடையை விட்டுவிடலாம்.

Heavy, burdensome ஆகிய இரண்டுமே ‘கனமான’ என்ற வார்த்தைக்குப் பொருந்துகின்றன. ஆனால், burdensome என்பது பொதுவாக ‘மனதிலும் கனத்தை ஏற்றுகிற’ விஷயமாகவே இருக்க வாய்ப்பு உண்டு. 

எனவே, heavy என்பதுதான் சரியான விடை.  The box is too heavy for you to be lifted by yourself.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com |
ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x