Last Updated : 13 Nov, 2018 10:32 AM

 

Published : 13 Nov 2018 10:32 AM
Last Updated : 13 Nov 2018 10:32 AM

வரலாறு தந்த வார்த்தை 38: எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு!

‘விஜய் என்றால் வெற்றி’ என்பது போய், இப்போது ‘விஜய் என்றால் வினை’ என்பதாக மாறிவிட்டது. அரசியலைத் தொட்டாலும் தொட்டார், ‘தலைவா’ முதல் ‘சர்கார்’ வரை, சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார் ‘தளபதி!’.

‘ஐ.நா. சபை பாராட்டிய திட்டங்களைக் கேலி செய்வதா? இலவசங்களை இழிவுபடுத்துவதா? நீக்குங்கள் அந்தக் காட்சிகளை!’ என்று ஆணையிடப்பட்டதுதான் லேட்டஸ்ட் 'பரபர!’

சிறுமைப்படுத்திவிட வேண்டாம்!

‘இந்த உலகத்தில் இலவசங்கள் என்று எவையும் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு’ என்கிறார் நோபல் பரிசு வென்ற அமெரிக்கப் பொருளாதார மேதை மில்டன் ஃப்ரீட்மேன். இந்த முதுமொழியை ஆங்கிலத்தில் அவர் ‘There is no such thing as a

free lunch’ என்று சொன்னார். அதையே தலைப்பாகக் கொண்டு 1975-ம் ஆண்டு ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார் அவர்.

இதில் உள்ள ‘ஃப்ரீ லஞ்ச்’ என்ற பதத்தை ‘இலவச மதிய உணவு’ என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, காமராசர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் கொண்டுவந்த ‘மதிய உணவு / சத்துணவுத் திட்டம்’ ஆகியவற்றை ‘இலவசங்களுக்குள்’ அடக்கிச் சிறுமைப்படுத்திவிட வேண்டாம்!

உண்மையில், அந்தப் பதத்துக்கு ‘விலையில்லாமல் எதுவுமில்லை’ என்பதுதான் அர்த்தம். சுவாசிக்கும் காற்றுக்கும் குடிக்கும் நீருக்கும்கூட விலை வைக்கும் இந்த உலகத்தில் எதுதான் நமக்கு இலவசமாகக் கிடைத்துவிடும்? தேர்தல் நேரத்தில் தரும் இலவசங்களுக்கான விலை… நம் வாக்கு!

18-ம் நூற்றாண்டில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் மது வாங்குபவர்களுக்கு உணவை இலவசமாகக் கொடுக்கும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது. அதாவது, உணவு விடுதிக்குச் சாப்பிட வரும் ஒருவரை, மது வாங்க வைக்கத் தூண்டவே இப்படியொரு ‘இலவச’ நடவடிக்கை நடைமுறையில் இருந்தது. அதாவது, மது வாங்கினால் உணவு இலவசம் என்பது கிடையாது. அந்த உணவுக்கான விலையையும் அந்தச் சரக்கின் விலையோடு சேர்த்துத்தான் விற்பனை செய்யப்படும். அப்படித்தான் வந்தது ‘ஃப்ரீ லஞ்ச்’ என்ற பதம். இது புரியாமல், அன்று பலர் சாப்பாட்டுக்காக மதுவை வாங்கிச் சீரழிந்தனர்.

அந்த ‘மெயின் டிஷ்’ இன்று ‘சைட் டிஷ்’ ஆகச் சுருங்கிவிட்டது, மதுவால் சீரழிந்த குடும்பத்தின் பொருளாதாரத்தைப் போல!

சென்ற வருடம் ‘மெர்சல்’ படம் வெளியானபோது, வேறொரு கட்சி உசுப்பேற்ற, இப்போது ‘சர்கார்’ படத்துக்கு எதிராக இன்னொரு கட்சி கடுப்பேற்றுகிறது. ஆனால், படக்குழுவோ ‘கம்’மென்று இருந்து, கலெக்‌ஷன் பார்க்கிறது. அட போங்கப்பா… இதெல்லாம் ‘விலையில்லா விளம்பரம்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x