Published : 24 Nov 2018 11:29 AM
Last Updated : 24 Nov 2018 11:29 AM

செயலி என்ன செய்யும்? 09 - பேரிடர் காலச் செயலிகள்

நாம் இந்தத் தொடரில் ஒவ்வொரு செயலியின் நன்மை தீமை குறித்துப் பார்த்து வருகிறோம். இதுவரை, பார்த்த செயலிகளில், பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்களைத்தான் பேசி இருக்கிறோம்.  காரணம், நன்மையைவிடத் தீமையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான். உண்மையில், தொழில்நுட்பம் என்பது மனித குல விரோதி அல்ல. அந்தச் செயலிகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்து, நன்மை – தீமையின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்படுகிறது.

தற்சமயம், மத்திய தமிழக மக்களைப் பெரிதும் பாதித்திருக்கும் பேரிடருக்குப் பின்பு, தொழில்நுட்பம் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சமூக வலைத்தளங்கள், செயலிகள் ஆகியவற்றின் உதவியுடன் ஒவ்வொருவரின் பாதுகாப்பை உறுதிசெய்வது,  உயிர் சேதத்தைத் தடுப்பது, பேரிடரின்போது நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்ப்பது என இன்றைய தகவல் தொழில்நுட்பம், பேரிடரை எதிர்கொள்ள ஏதுவாக நம்மைத் தயார்படுத்தி உள்ளது. இந்த வாரம் பேரிடர் காலத்தில் நமக்கு உதவும் செயலிகள் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கூகுள் வெதர் (Google Weather)

மழை, புயல் காலத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், தட்பவெப்ப நிலைதான். அதைத் தெரிந்துகொள்ள இன்று பல செயலிகள் இருக்கின்றன. அவற்றில் பல, இலவசமாகக் கிடைக்கின்றன.  இதில் ‘கூகுள் வெதர்’  எனும் செயலி, பல அரிய தொழில்நுட்ப வசதிகளுடன் நமக்குச் சரியான தட்பவெப்பத்தைக் கொடுக்கிறது.

ஜெலோ (Zello)

பேரிடர் காலத்தில் ஒருவேளை இணைய வசதி இல்லை என்றால், ‘ரேடியோ ஃப்ரீக்வென்ஸி’ உதவியுடன் வாக்கி-டாக்கி போன்று, உடனடியாக உங்கள் அருகில் இருப்பவருடன் தொடர்புகொள்ள முடியும். அதற்கான செயலிதான் இது. இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையம் இல்லாத சூழலில், ஒரு குறிப்பிட்ட எல்லைவரை உங்களால் இன்னொருவருடன் எளிதாகப் பேசவும் எழுத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

ஃபேமிலி லொக்கேட்டர் (Family Locator)

பேரிடர் காலத்தில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவும் செயலி இது.  இந்தச் செயலியில் நீங்கள், உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து, அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடமாகச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பேரிடரின்போது, தங்கள் இருப்பிடத்தை இந்தச் செயலி உதவியுடன் மற்றவருக்குத் தெரிவிக்க முடியும்.

டிசாஸ்டர் அலர்ட் (Disaster Alert)

கூகுள் மேப் உதவியுடன், உலகம் முழுவதும் இந்த நொடி ஏற்பட்டிருக்கும் எந்தவிதமான இயற்கைப் பேரிடர் பற்றிய தகவல்களையும் நீங்கள் உடனே தெரிந்துகொள்ள உதவும் செயலி இது. இதன் மூலம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் திட்டமிடுவது மிகவும் எளிதாகிவிடும்.

எர்த்குவேக் அலர்ட் (Earthquake Alert)

உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளில் எங்கெல்லாம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பற்றி உடனுக்குடன் தெரிவிக்கும் செயலி இது. எந்த நாட்டில், குறிப்பாக எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அதன் ரிக்டர் அளவு என்ன, அது ஏற்படுத்தியிருக்கும் சேதம் தொடர்பான செய்திகள்  போன்றவற்றைப் பெறலாம்.

வதந்தியைச் சமாளிக்கும் செயலி இல்லை!

இப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர்களைவிட, பேரிடர்களின்போது பரவும் வதந்திப் பேரிடர்களைச் சமாளிப்பதற்குத்தான் இன்று நமக்குச் செயலிகள் தேவையாக இருக்கின்றன. வதந்திகளைப் பரப்புவதால்தான் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைத் திட்டமிடுவதும் ஒழுங்கமைப்பதும் அரசுக்குச் சவாலாகிவிடுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது, இந்தியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழகப் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை இதற்காகச் சிறப்புச் செயலிகள் எதையேணும் உருவாக்கியுள்ளனவா எனத் தேடிப் பார்த்தேன். எனக்கு எதுவும் புலப்படவில்லை. அரசுகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டால் நல்லது.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x