Published : 14 Nov 2018 04:37 PM
Last Updated : 14 Nov 2018 04:37 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: பானைக்குள் புதையல்

நாள் கணக்காகத் தோண்டுவார்கள். சில நேரம் வாரக் கணக்காகும். மாதங்கள்கூட ஆகலாம். ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தைத் தோண்டுபவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் அத்துவானக் காட்டில்தான் அவர்கள் வேலை செய்வார்கள். அங்கேயே கூடாரம் போட்டுக்கொண்டு அங்கேயே தங்குவார்கள். அங்கேயே சாப்பாடு, அங்கேயே குளியல், அங்கேயே உறக்கம். இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் காட்டில் அப்படி என்ன தோண்டுகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் புதையல் தேடிக்கொண்டிருக்கிறோம் என்பார்கள்.

அதென்ன புதையல் எனக்கும் கொஞ்சம் காட்டுங்களேன் என்று கேட்டால், உள்ளே அழைத்துச் சென்று கூடாரத்தில் பாதுகாத்து வைத்திருக்கும் பெட்டியைத் திறந்து காட்டுவார்கள். பார்த்து, கவனம், பொறுமை. கீழே விழுந்துவிடப் போகிறது!

ரொம்ப எச்சரிக்கையாக அந்தப் பெட்டிக்குள் கையை விட்டால் உங்கள் உற்சாகம் மாயமாக மறைந்துவிடும். காரணம், இப்போது உங்கள் கையில் இருப்பது களிமண் பானை. அதுவும் உடைந்து, நொறுங்கிய பானையின் ஒரு துண்டு மட்டும். ஐயோ, இதையா இப்படி ஆண்டுக்கணக்காகத் தோண்டி எடுத்திருக்கிறீர்கள்? இதுவா நீங்கள் சொன்ன புதையல்? இதை எடுப்பதற்காக இத்தனை பேர் வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்துவிட்டு காட்டில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்? எங்கள் வீட்டுக்கு வந்தால் உடையாத நல்ல பானையே உங்களுக்குக் கொடுப்பேனே? நாங்கள் எல்லாம் மண்ணில் விளையாடினால் வீட்டில் இருப்பவர்கள் திட்டுவார்கள். உங்களை யாரும் திட்ட மாட்டார்களா?

”ஹாஹா, மாட்டார்கள். நாங்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள். பூமியைத் தோண்டுவதுதான் எங்கள் வேலையே. கீழிருந்து என்ன கிடைத்தாலும் அது எங்களுக்குப் புதையல்தான். நீ எனக்குத் தங்கமே வாங்கிக் கொடுத்தாலும் இந்தச் சின்ன மண்பானை ஓட்டுக்கு ஈடாகாது. ஏன் தெரியுமா? இப்போது நீ கையில் வைத்திருக்கும் பானை ஓடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உன்னைப் போன்ற ஒரு சிறுமியின் கையில் இருந்திருக்கலாம். அப்போது அது முழுமையான, அழகான பானை. அதில் அவர்கள் தானியம் போட்டு வைத்திருப்பார்கள்.

அல்லது தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். அல்லது அந்தச் சிறுமிக்காக அவள் அம்மா ஏதாவது தின்பண்டம் செய்து போட்டு வைத்திருக்கலாம். விளையாடி முடித்து, களைத்து வீட்டுக்கு வந்ததும் அந்தச் சிறுமி இந்தப் பானைக்குள் கையைவிட்டு இனிப்பை எடுத்துச் சுவைத்து மகிழ்ந்திருக்கலாம்.

ஒரு துண்டு பானையை வைத்து இப்படிதான் நாங்கள் நிறைய கற்பனை செய்வோம். மேலும் மேலும் தோண்டும்போது எங்கள் கற்பனையை உறுதி செய்யும்படிச் சில பொருட்கள் கிடைக்கலாம். உதாரணத்துக்கு அந்தச் சிறுமியின் ஆடையில் இருந்து ஒரு பகுதி. அல்லது தானியங்கள். ஏதாவது விளையாட்டுப் பொருள்கள்.

களி மண்ணைக் கொண்டு பானையை உருவாக்குவதற்கு முன்பே மனிதர்கள் பொம்மைகளை, உருவங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். பானை செய்ய ஆரம்பித்தது கிட்டத்தட்ட 20,000 ஆண்டுகளுக்கு முன்புதான். சீனாவில் இப்படிப்பட்ட பானை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.”

”அந்தச் சிறுமியின் பெயர் என்ன? அவள் நண்பர்களுடன் என்ன கதை பேசுவாள்? அப்போது பள்ளிக்கூடம் இருந்ததா? என்னைப் போலவே அவளும் கணக்கு என்றால் பயந்து ஓடினாளா? இதையெல்லாம்கூட நீங்கள் கண்டுபிடிப்பீர்களா?”

”ஓ, கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கண்டுபிடிப்போம். இப்போது நீ கேட்கிறாய் இல்லையா? அதேபோல் நாங்களும் ஒரு பானை கிடைத்தவுடன் ஐந்து கேள்விகள் கேட்போம். இந்தப் பானை எப்போது செய்யப்பட்டது? எப்படி? எங்கே செய்யப்பட்டது? எப்படி இங்கே வந்து சேர்ந்தது? எதற்காகச் செய்யப்பட்டது? உதாரணத்துக்கு, உன் கையில் இருப்பது எத்தனை ஆண்டுகள் பழையது என்பதை இனிதான் ஆராய வேண்டும்.

இங்கே வேறு பானைகள் கிடைக்கவில்லை என்றால் அநேகமாகப் பக்கத்து ஊரிலிருந்து இது வந்து சேர்ந்திருக்கலாம் என்று யூகிப்போம். அங்கிருந்து யாராவது இங்குள்ளவருக்கு இந்தப் பானையைப் பரிசாகக் கொடுத்திருக்கலாம். அல்லது பானையைக் கொடுத்துவிட்டு இங்கிருந்து வேறு ஏதாவது பொருளைப் பண்டமாற்றம் செய்துகொண்டிருக்கலாம்.”

”சரி, இதைக் கையால் மண்ணைப் பிசைந்து செய்தார்களா அல்லது வண்டிச்சக்கரம்போல் ஒன்றை வைத்துச் சுற்றிச் சுற்றிச் செய்தார்களா என்று பார்க்க வேண்டும். அதைக் கண்டுபிடித்தால் பானையின் வயதைக் கண்டுபிடித்து விடலாம். அந்தப் பானை நெருப்பில் சுடப்பட்டிருந்தால் அதன் வயது வேறு. அடுத்து, இந்த மண் எங்கே கிடைக்கும் என்று பார்ப்போம்.

தண்ணீரோ தின்பண்டமோ நிரப்பி வைக்க செய்யப்பட்ட பானையா அல்லது இதில் ஓவியங்கள் ஏதாவது வரைந்து வைத்திருக்கிறார்களா என்று அடுத்து ஆராய்வோம். அப்படி ஏதாவது ஓவியங்கள் தென்பட்டால் அதில் அந்தச் சிறுமியின் படமும் கிடைக்கலாம். பெயரும் தெரியவரலாம். பள்ளிக்கூடம், கணக்குப் பாடம் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடலாம்.”

”ஒருமுறை டென்மார்க்கில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஒன்று கிடைத்தது. அதன் அடிப்பகுதியில் கறுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். ஆராய்ந்தபோது, அது காய்ந்துபோன பாலாடை என்பது தெரிந்தது.

”அங்கே ஓர் அம்மா சமையலறையில் ஏதோ செய்ய முயன்றிருக்கிறார். அது சரியாக வரவில்லை. அடி பிடித்துவிட்டது. அடச்சே, இதை யார் சுத்தப்படுத்துவது என்று என்று அலுத்துக்கொண்டு அப்படியே பாலாடையோடு சேர்த்து பானையைத் தூக்கிக் கடாசிவிட்டார். அந்தத் தீய்ந்துபோன உணவு எங்களுக்குப் புதையல். அதை வைத்துக்கொண்டு 3000 ஆண்டுகளுக்கு முந்தைய உணவு, வாழ்க்கை முறை என்று பலவற்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது.”

”நேற்று இப்படிதான் நான் ஏதேதோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்ததால் அம்மா செய்துகொண்டிருந்த உருளைக்கிழங்கு தீய்ந்து போய்விட்டது. அந்தப் பாத்திரத்தையும் அம்மா தூக்கிதான் போட்டார் என்று நினைக்கிறேன்.”

”ஓ, அப்படியானால் அந்தப் பாலாடை தீய்ந்து போனதற்கும் உன்னைப் போன்ற ஒரு சிறுமிதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கவலைப்படாதே, உன்னைப் போன்ற சிறுமிகள்தான் புதையல்களை உருவாக்குகிறார்கள்!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x