Last Updated : 30 Oct, 2018 12:57 PM

 

Published : 30 Oct 2018 12:57 PM
Last Updated : 30 Oct 2018 12:57 PM

கரும்பலகைக்கு அப்பால்... 07 - விருந்தோம்பல் கற்பிக்கும் கலர் மீன்

ஆறாம் வகுப்பில் விருந்தோம்பல் என்ற அதிகாரத்திலிருந்து இரண்டு குறள்கள். “விருந்து அல்லது விருந்தினர் என்ற வார்த்தைகளைக் கேட்டால் என்ன தோன்றுகிறது?” என்று கேட்டேன். சொந்தக்காரர்கள், விழாக்கள், விசேஷங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்தனர்.

“விடுமுறை என்றால் யார் வீட்டுக்குச் செல்வீர்கள்? உங்கள் வீட்டுக்கு யார் வருவார்கள்?” என்று கேட்டேன். உறவினர் வீடு, அப்பாவின் நண்பர் வீடு என்று பலரும் விடுமுறைகளில் செல்வதாகக் கூறினர்.

“ஐயா, நான் எந்த ஊருக்கும் போறதில்லை” என்றான் ஒரு மாணவன். “அடடா, ஏன்?” என்று கேட்டேன்.

“எல்லாச் சொந்தக்காரங்களும் வீட்டைச் சுத்தியே இருக்காங்க! அப்புறம் எந்த ஊருக்குப் போறது?” என்றான் சிரித்தபடி. எல்லோரும் சிரித்தோம்.

“இப்போது ஒரு படம் பார்க்கலாமா?” என்று ‘கலர் மீன்’ குறும்படத்தைத் திரையிட்டேன்.

பாசமும் பூசலும்

அம்மாவுடன் சித்தி வீட்டுக்கு வரும் சிறுவன் ஒருவன், அவனுடைய சித்தி பையன் இருவருக்குமான உறவு குறித்த குறும்படம். பெரும்பாலும் குழந்தைகளின் மட்டத்திலேயே நகரும் ஒளிப்பதிவு. குழந்தைகளின் மன உணர்வுகளையும் பெரியவர்களின் மன உணர்வுகளையும் காட்டும் கதை.

படம் முடிந்ததும் அவரவருக்குப் பிடித்த காட்சிகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“நாம் விருந்தினராகப் போனபோது அல்லது நம் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நடந்த நிகழ்வு ஏதேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளலாம்” என்றேன்.

“அம்மா எனக்கு ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கிக் கொடுத்தாங்க.  சொந்தக்கார அண்ணன் அதைக் கேட்டுட்டே இருந்தான். தரவே மாட்டேன்னு சொல்லிட்டேன். அவங்க ஊரு திருச்செந்தூர். அவன் ஊருக்குப் போகும்போது இந்தாடான்னு அவனுக்கு காரைக் கொடுத்திட்டேன்.”

“நான் மாமா வீட்டுக்குப் போவேன். எங்க மாமா நண்டு வாங்கிட்டு வருவாங்க. பாட்டி நல்லா சமைச்சுத் தருவாங்க.”

“எங்கப்பா புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தாரு. பக்கத்து வீட்டுப் பையன் கேட்டுட்டே இருந்தான். சரி, பாவம்னு ஓட்டக் கொடுத்தேன். வண்டியைக் கீழே போட்டுட்டான். வண்டி ஒடைஞ்சிருச்சு. சரிபண்ணக் காசு குடுன்னு கேட்டேன். அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுப் பக்கம் வரவே இல்லை. பிறகு பார்த்தா அவனுக்குக் காய்ச்சல்னு சொன்னாங்க. அவன் கிட்டே போய் மன்னிப்பு கேட்டிட்டு காசு தர வேணாம்னு சொல்லிட்டேன்.”

“தம்பி ஒரு செடி வளர்த்தான். நான் அடிக்கடி தண்ணி ஊத்தி அது அழுகிப்போச்சு. எனக்கும் அவனுக்கும் சண்டையாயிருச்சு. அப்புறமா அவனுக்கு வேற செடி வச்சுக் குடுத்தேன்.”

உறவு, நட்புக்குள் ஏற்பட்ட சண்டைகள், தான் மன்னிப்பு கேட்ட, தன்னிடம் மன்னிப்பு கேட்ட தருணங்கள் என்று பலரும் பகிர்ந்துகொண்டனர். இதுவரை கலந்துரையாடலில் பங்குபெறாத சிலரின் தயக்கமும் நீங்கியது.

சமூகம் குறித்த உரையாடல்

மனப்பாடம் செய்யாமல் மனதுக்குள் இருப்பவற்றைக் கிளறி வெளிப்படுத்துவதுதானே இலக்கியம்? மனப்பாடப் பாடலாக வைத்துக் குழந்தைகள் வெறுக்கும் செய்யுள் பகுதியாகத் திருக்குறளை ஆக்கிவிட்டோம். ஏழே வார்த்தைகளில் எண்ணற்ற சிந்தனைகளை உருவாக்கும் கவிதையை ரசித்துச் சுவைக்கச் சொல்லித் தராமல் விட்டுவிட்டோம்.

இளம் தலைமுறையினரிடத்தில் நற்பண்புகள் குறைந்துவிட்டன என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கபடுகிறது. குழந்தைகள் வாழ்ந்து கொண்டிருக்கும், எதிர்காலத்தில் வாழப்போகும் சமூகம் குறித்த உரையாடல்களை வகுப்பறைகளில் முன்னெடுக்கும்போது தீர்வை நோக்கிய நகர்வு சாத்தியப்படும்.

‘கலர் மீன்’ காண

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x