Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM

அந்த நாள் 10: மருதையைத் தெரியுமா?

பிரபல அறிவியல் எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் பத்தி கேள்விப்பட்டிருப்ப, செழியன். இளம் விஞ்ஞானியான உனக்கு அவரைப் பத்தித் தெரியாம இருக்காது.  நம்ம தாத்தா பாட்டிகள் காலங்காலமா கதைகள்ல சொல்லிவந்த விஷயம்தான்னாலும், கால இயந்திரத்தை (டைம் மெஷின்) அடிப்படையா வெச்சு அவர் எழுதின கதை, உலகப் புகழ்பெற்றது.

andha-2jpgமருத மரத்தின் பூ

சமீபகாலத்தில் வெளியான ‘24’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற தமிழ் சினிமாவரைக்கும் கால இயந்திரம் என்ற அந்தக் கருத்து, உலகை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்கு. அடுத்து வர்ற ஒவ்வொரு வாரமும் கால இயந்திரம் மூலமா பண்டைத் தமிழ் நகரங்களுக்கு உன்னை கூட்டிட்டு போகப் போறேன்.

நாம முதல்ல போகப் போற ஊர், தென் தமிழகத்தின் அறிவிக்கப்படாத தலைநகரா காலங்காலமா கருதப்பட்டு வரும் எங்க ஊரு மதுர. இது பாண்டியர்களோட தலைநகர்ங்கிறதை தனியாச் சொல்லணுமா? கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற பயணி மெகஸ்தனிஸ் இங்கே வந்து சென்றுள்ளார். கிரேக்க மன்னர் செல்யூகஸின் தூதராக வந்த அவர், இந்தியாவைப் பத்தி எழுதின ‘இண்டிகா’ங்கிற புத்தகம் புகழ்பெற்றது. அதில் மதுரையைப் பத்தின குறிப்பு இருக்கு.

இதோ பேசிக்கிட்டே அந்தக் கால மதுரைக்கே வந்துட்டோம். அதோ திருப்பரங் குன்றத்துக்குக் கிழக்காகவும் வைகையின் தென்கரையிலும் தெரியுதே, அதுதான் பழைய மதுரை. ஆனா, இன்றைய மதுரை வடக்குப் பகுதில இருக்கு.

இன்றைக்கு தண்ணியே இல்லாம காய்ஞ்சு கிடக்கும் வைகை ஆற்றை, வையைன்னு சொன்னாங்க. அந்த ஆறு இங்க எப்படிப் பாயுதுன்னு பாரு. மதுரையோட மூன்று திசைகளைச் சூழ்ந்து, அது பாய்ஞ்சுக்கிட்டிருக்கு. மதுரையைச் சுத்திப் போடப்பட்ட ஒரு மாலைபோல, இயற்கை அரண்போல அது இருந்திருக்கு. நமக்குப் பின்னால இருக்கே உயர்ந்த மதில் சுவர்கள், இவைதான் வைகைக்கு அடுத்தபடியா மதுரையை பாதுகாக்கின்றன.

andha-3jpgமெகஸ்தனிஸ்

அதோ அந்த மதில் சுவரின் மேல பார்த்தியா, படைக்கருவிகளை வெச்சுக்கிட்டு பாதுகாப்புக்காக வீரர்கள் நிக்கிறாங்க.

மதுரைல மதில்சுவர்கள் மட்டுமில்ல, மாடங்கள் எனப்படும் திறந்த மாடிப் பகுதிகள் நிறைய இருக்கிறதையும் பாரேன். இதைத்தான் ‘மாடமதுரை’ன்னு புறநானூற்றில் கோவூர்க்கிழாரும், ‘நீள் மாடக் கூடலார்’ன்னு கலித்தொகையில் பெருங்கடுங்கோவும் பாடியிருக்காங்க.

‘வணிக நகர்’னு மதுரை புகழ்பெற்றிருந்தது ஏன்னு அடுத்த வாரம் சொல்றேன்.

பெயர் வந்தது எப்படி?

கூடல், நான்மாடக்கூடல், ஆலவாய், திருமருதமுன்துறை எனப் பல பெயர்களால் மதுரை அழைக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த தமிழ்ச் சங்கத்தில் பல அறிஞர்கள் கூடியதாலும்; மன்னர், புலவர், மக்கள் ஆகியோர் கூடும் இடமாக சங்கம் இருந்ததாலும்

கூடல் என்றும் மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகளான மெகஸ்தனிஸ் ‘மதுரா’ என்றும், தாலமி ‘மோதுரா’ என்றும் மதுரையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்


தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x