Last Updated : 15 Aug, 2014 12:00 AM

 

Published : 15 Aug 2014 12:00 AM
Last Updated : 15 Aug 2014 12:00 AM

நாகஸ்வரம், தவிலுடன் ஒரு தமிழ் ராப்

சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்று வந்தாலும், 10-ம் வகுப்பு மாணவன் பிரகாஷுக்குக் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரெஹானாவைச் சந்திக்கப் போகிறாரே. பார்த்தவுடன், தன்னம்பிக்கையுடன் ஒரு ‘மெலடி’ பாடலைப் பாடிக் காட்டினார் பிரகாஷ்.

ஆனால் “மெலடி உனக்கு நல்லா வரலை, பிரகாஷ். உன்னோட குரலுக்கு ராப் செட்டாகும்னு நினைக்கிறேன், நீயே பாட்டெழுதி டிரை பண்ணிப் பாரேன்” என்றார் ரெஹானா.

அதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்ட பிரகாஷ், அதே ரெஹானாவின் கையாலேயே தானே எழுதிப் பாடிய ராப் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆல்பத்துக்கு இசையமைத்திருப்பவர் ஏ.எம். மியூசிக் கன்சர்வேட்டரியில் படித்த பிரசன்னா சிவராமன்.

இசை உதவி

ஆல்பம் விற்றதன் மூலம் கிடைத்த பணம், புற்றுநோய் பாதிக்கப்பட்ட நரேஷ், ஆண்டாள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சம். முதல் வகுப்புப் படிக்கும்போதே கர்னாடக இசை பயில ஆரம்பித்த பிரகாஷ், பிறகு ‘லைட்’ மியூசிக் கற்றுத் தேர்ந்திருந்தார். இப்போது, சென்னை எம்.சி.சி. காலேஜில் பி.ஏ. ஜர்னலிசம் படிக்கும் பிரகாஷின் சிறு வயது இசை ஆர்வம், பலரது பாராட்டுதல்களுக்கு மத்தியில் ஆல்பமாக மலர்ந்துள்ளது.

புது முயற்சி

வழக்கமாக ராப் பாடல்களுக்கு வாசிக்கப்படும் டிரம்ஸ், கீபோர்ட், கித்தார் போன்ற இசைக் கருவிகளுக்கு மாறாக நாகஸ்வரம், தவில், கஞ்சிரா, மிருதங்கம் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளே இந்தப் பாடல்களுக்கு இசையமைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அத்தனையும் தமிழ் ராப் இசைப் பாடல்கள். ஐந்து பாடல்களும் நட்பு, காதல், மொழி, இந்தியா, தன்னம்பிக்கை பாடல் வகையைச் சேர்ந்தவை. அடுத்ததாக முழுவதும் ‘தமிழை’ப் பற்றிய இங்கிலிஷ் ராப் ஆல்பத்தை உருவாக்கத் தயாராகிவருகிறார்.

பிரகாஷுக்கு இசையைத் தாண்டி கிரிக்கெட்டிலும் சமூக சேவையிலும் ஆர்வமுண்டு. காஞ்சிபுரத்திலுள்ள ‘அறிஞர் அண்ணா கேன்சர் மருத்துவமனை’ வாலன்டியராகப் புற்று நோயாளிகளுக்குச் சேவை செய்துவருகிறார். அவர்களுடைய கஷ்டத்தை நேரடியாகக் கண்டதால்தான், தனது ஆல்பத்தை விற்றுக் கிடைத்த பணத்தைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நரேஷ், ஆண்டாளுக்கு வழங்கியிருக்கிறார்.

அவரது ராப் ஆல்பத்துக்கு மட்டுமில்லாமல், இதற்கும் சொல்லலாம் ஒரு ‘ஹாட்ஸ் ஆஃப்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x