Published : 16 Oct 2018 11:31 AM
Last Updated : 16 Oct 2018 11:31 AM

மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 05: மாற்றங்கள் வினா, மாற்றங்களே விடை!

செய்வதெல்லாம் அர்த்தமற்றுப் போகும்போது மிகவும் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கூடத் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்படலாம். இத்தகைய சூழலில் கத்துக்குட்டித்தனமான மனநல ஆலோசகரிடம் சிக்கிவிட்டால் ஏதோ நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணித்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. மாற்றங்கள் நேரும்போதெல்லாம் அதனால் உருவாகும் நிச்சயமற்ற தன்மை ஒருவிதமான சலிப்பையும் விலகலையும் நம்மிடம் தற்காலிகமாக ஏற்படுத்துவது உண்டு.

நாமே தேர்ந்தெடுத்த புதிய பாதையாகவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் நம் மீது திணித்த புதிய வாழ்க்கை முறையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மாற்றம் நிகழும் காலகட்டத்தில் ஊக்கம் இழப்பது இயல்பே. ஏனென்றால் இதுவரை நம்முடைய பலமாக இருந்தவற்றைக்கூடக் கைவிட வேண்டி அப்போது வரலாம். அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளை, திறன்களை, விருப்பங்களை நோக்கி நகரத் தொடங்குகிறோம்.

பயணமே இலக்குதான்!

வாழ்க்கையின் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் நம்மையே நாம் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இத்தகைய தருணங்களில் நீங்கள் சிக்கிக்கொண்டதாக உணரும்போது, அதனால் விரக்தி அடைவதாகத் தோன்றும்போது மீள்வது எப்படி?

1. முதலாவதாக உடல்ரீதியான மாற்றங்களைக் கவனியுங்கள். போதுமான தூக்கம், ஓய்வு, உடற்பயிற்சி, சரிவிகித உணவு இல்லாமல் போகும்போதும் நம் சிந்தனைப் போக்கில் குழப்பம் ஏற்படலாம். இதைச் சீர்படுத்துவதே முதல் படி.

2. இலக்கை நோக்கியப் பயணத்தில் போகும் பாதைக்கு பெரும்பாலான நேரத்தில் முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிடுகிறோம். ஆனால், இலக்கை நோக்கிய பயணமே முக்கியம் என்று உணரத் தொடங்கும்போது ஒவ்வொரு நொடியும் உற்சாகமாக மாறிவிடும். முடிவைவிடவும் போகும் பாதையில் கவனம் செலுத்தும்போது தனிப்பட்ட முறையில் நம்மையும் வளர்த்துக்கொள்ளலாம். நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்துவிடலாம். வளர்ச்சியை மையப்படுத்திய வாழ்க்கையில் மனத்திருப்தி முதன்மைபெறும்.

3. இருக்கும் நிலையில் இருந்து மாற்றம் தேவை என்கிற  உணர்வோ சிந்தனையோ ஏற்படும்போது, உங்களை மாற்றிக்கொள்ள அத்தகைய சிந்தனையை நண்பரைப்போல பாவிக்கலாம். உங்களை மாற்றிக்கொள்ளும்படி உங்கள் நண்பர் கேட்டால் என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள். இந்த எண்ணத்துக்குக் கவனம் செலுத்த மாட்டேன் என்றில்லாமல் உங்களிடமே சில கேள்விகளை அப்போது எழுப்புங்கள்:

# என்னுடைய வாழ்க்கையில் இப்போது என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர நான் விரும்புகிறேன்?

# என்னுடைய வாழ்க்கையில் இப்போது என்னென்ன அனுபவங்கள் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்?

# பூரணமான வடிவில் என்னுடைய வாழ்க்கை என்னவாக மாறும், அப்படியொரு வாழ்க்கை இப்போது எனக்கு அமைந்தால் எப்படி இருக்கும்?

# என்னுடையச் சூழலில் உள்ள ஏதோ ஒன்று எனக்குக் கேடு விளைவிக்கிறதா, ஏதாவது செய்தி என்னைப் பாதிக்கிறதா, என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னைப் பாதிக்கிறார்களா, நான் செய்யும் செயல் என்னை அசவுகரியமாக உணரச் செய்கிறதா...என்பன போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொளுங்கள்.

அப்படி உங்களுக்குக் கேடுவிளைவிக்கக்கூடியவை இருக்குமானால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய நபர்களையும் பழக்கங்களையும் நாடிச் செல்லுங்கள்.

நாம் தற்போது இருப்பதைவிடவும் மேம்பட்டவராக உருமாற கைகொடுப்பவை மாற்றம் நிகழும் காலகட்டங்களே. இந்தக் காலகட்டத்தைச் சிறந்த வாய்ப்பாக நினைத்து அதைத் தழுவிக்கொள்ளுங்கள். ஏதோ உங்களுக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துக் கவலைக்கொள்ளத் தேவை இல்லை.

ஒரே நாளில் இலக்கை அடைந்துவிட முடியாதுதான். ஆனால், நம்மை நாமே உற்றுக் கவனித்து உறுதியாக நிமிர்ந்தெழும்போது நம்முடைய திசை உடனடியாக மாறும்.

தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x