தேர்வுக்குத் தயாரா? - விலங்கியலின் கடினம் விலகும் (பிளஸ் 2 : உயிரி - விலங்கியல்)

தேர்வுக்குத் தயாரா? - விலங்கியலின் கடினம் விலகும் (பிளஸ் 2 : உயிரி - விலங்கியல்)
Updated on
2 min read

பொதுத் தேர்வுக்கு மட்டுமன்றிப் பல்வேறு போட்டி, நுழைவுத் தேர்வுகளின் பொருட்டும் உயிரி விலங்கியல் பாடம் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றை மனத்தில் வைத்து இப்போதிலிருந்தே படிப்பதும் திருப்புதல் மேற்கொள்வதும் பொதுத் தேர்விலும் இதர தேர்வுகளிலும் எதிர்பார்க்கும் மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.

உயிரி விலங்கியல் தேர்வு 35 மதிப்பெண்களுக்கானது. ஒரு மதிப்பெண் பகுதியில் 8 வினாக்கள், 2 மதிப்பெண் பகுதியில் 6-ல் 4 வினாக்கள், 3 மதிப்பெண் பகுதியில் 5-ல் 3 வினாக்கள், 5 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ பாணியிலான 2 வினாக்கள் எனப் புதிய வினாத்தாள் மாதிரி அமைந்துள்ளது. 3 மதிப்பெண் பகுதியில் ஒரு கட்டாய வினா இடம்பெறுகிறது.

1 மதிப்பெண்: முழுமையாகப் படிக்க வேண்டும்

மொத்தமுள்ள 7 பாடங்களில் இருந்து 8 ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும். இதில் முதல் பாடத்திலிருந்து 2 வினாக்களுக்கும் ஏனைய பாடங்களில் இருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். இந்தப் பகுதிக்குப் பாடம்தோறும் முக்கியக் கருத்துகளை அடிக்கோடிட்டும் குறிப்பெடுத்தும், மனவரைபடம் தயார் செய்து படிப்பதும் உரிய பலனைத் தரும். சிந்தித்துத் தொடர்புபடுத்தி விடையெழுதும் வகையிலும் சில வினாக்கள் கேட்கப்படும் என்பதால், பாடக் கருத்துகளை அப்படியே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்துவிட்டு இம்முறைகளில் படிப்பது நல்லது. கூற்று, காரணம், பொருத்துக, சரியா/தவறா, கிரியேட்டிவ் வகை வினாக்கள் நேரடியாகவோ சற்றே மாற்றியோ இப்பகுதியில் கேட்கப்படலாம்.

2,3 மதிப்பெண்: கட்டாய வினாவில் கவனம்

3 மதிப்பெண்களுக்குக் கூடுதலாக இரண்டொரு கருத்துகள் சேர்த்து எழுதுவதைத் தவிர்த்து, 2, 3 மதிப்பெண் வினாக்களுக்கு இடையே பெரிதாக வித்தியாசம் இருக்காது. பொதுவாக இந்த வினாக்களைப் பொறுத்தவரை 1, 3, 5, 6 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிலும் 1, 6-ம் பாடங்களின் இரண்டாம் பகுதியிலிருந்து இவ்வினாக்கள் கேட்கப்படலாம். 3 மதிப்பெண் பகுதியில் இடம்பெறும் கட்டாய வினா, 3 அல்லது 4-ம் பாடத்திலிருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. அரசு வழங்கியுள்ள புதிய மாதிரி வினாத்தாள்களில், ஆங்கில வழி மாணவர்களுக்கான ஒரு வினாத்தாளில் 2 மதிப்பெண் பகுதியிலும் ஒரு ‘கட்டாய வினா’ இடம்பெற்றுள்ளது. எனவே 2, 3 மதிப்பெண் வினாக்களில் எதிலிருந்தும் கட்டாய வினா இடம்பெறலாம் என்பதை மனத்தில் வைத்து மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது அவசியம்.

5 மதிப்பெண்: கடினமல்ல

முந்தைய வருடங்களின் 10 மதிப்பெண் வினா, புதிய வினாத்தாள் மாதிரியில் இல்லை என்பது மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கிறது. 5 மதிப்பெண் பகுதியின் 2 வினாக்களில் ஒன்று முதல் பாடத்திலிருந்தும் மற்றொன்று ஏனைய பாடங்களிலிருந்தும் கேட்கப்படும். இந்த ஏனைய பாடங்கள் அனைத்தையும் படிப்பது சிரமம் எனக் கருதுபவர்கள், அவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தவிர்க்கலாம். மாதிரி வினாத்தாள்கள் அடிப்படையில் 2, 3, 4, 5 ஆகிய பாடங்களில் இருந்தே 5 மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றுள்ளன.

இப்போதிருந்தே தயாராகலாம்

உயிரி விலங்கியல் தேர்வில் உயர் மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு இப்போதிருந்தே திட்டமிட்டுத் தயாராகலாம். ‘வினாவுக்கான விடை’ எனப் படிப்பதற்கு அப்பால், வரிக்கு வரி முக்கியப் பாடக் கருத்துகளைப் புரிந்து உள்வாங்கிக்கொண்டும் அடிக்கோடிட்டும் தேவையான பாடப் பகுதிகளுக்கு மனவரைபடம் தயார் செய்தும் படிக்கலாம். விலங்கியல் தேர்வில் அதிகம் எழுதிப் பக்கங்களை நிரப்புவதைவிட முக்கியக் கருத்துகளை வரிசையாக எழுதுவதே முழு மதிப்பெண் பெற்றுத் தரும்.வெவ்வேறு பாடங்களுக்கு இடையிலான பாடக் கருத்துகளைத் தொடர்புபடுத்திப் படிப்பதும் உதவும். உதாரணத்துக்கு 6-ம் பாடத்தின் மருத்துவச் சோதனைச் சாலை குறித்துப் படிக்கையில், முதல் பாடத்தின் மருத்துவ உபகரணங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். நோய்கள் தொடர்பாகப் படிக்கையில் வாழ்க்கையில் நாம் உணர்ந்தவற்றுடன் அவற்றைப் பொருத்தியும் படிக்கலாம். இவை வெறுமனே மனப்பாடம் செய்வதைவிடப் பாடக் கருத்துகளை ஆழ்ந்து மனத்தில் இருத்த உதவும். புத்தகத்தின் பின்பகுதி வினாக்களை மட்டுமே நம்பியிராது, பக்கம்தோறும் வாசித்து அதில் கேட்கப்பட வாய்ப்புள்ள பிற வினாக்களை அதே பக்கத்திலோ துண்டுத் தாளை இணைத்தோ குறித்துக்கொள்ளலாம். திருப்புதலுக்கு இந்த முறை கைகொடுக்கும்.

தேர்ச்சி நிச்சயம்

35 மதிப்பெண்ணில் குறைந்தது 8 மதிப்பெண் எடுப்பதே தேர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும். எனவே, தேர்ச்சி குறித்தான அச்சம் தேவை இல்லை. 2, 3 மதிப்பெண்களில் கவனம் செலுத்தினாலே, அந்தப் பகுதிகளில் கணிசமாக மதிப்பெண் பெறுவதுடன் அவற்றை உள்ளடக்கிய 1, 5 மதிப்பெண் பகுதிகளுக்கும் விடையளிப்பது எளிது. படிப்பில் பின்தங்கியவர்கள் 5, 6 பாடங்களை முதலில் படிக்கலாம். 2, 3 / 4, 5 / 5, 6 இப்படி, தான் எளிதாக உணரும் ஏதேனும் ஒரு ஜோடிப் பாடங்களைக் குறிவைத்தும் படிக்கலாம். இதில் கிடைக்கும் மதிப்பெண், ஏனைய பாடங்களையும் படிக்கத் தூண்டும்.

முக்கியக் குறிப்புகள்

படம் வரைவதுடன் பாகங்களைக் கவனமாகக் குறிப்பதும் அவசியம். போதிய பயிற்சி இருந்தால் மட்டுமே படங்களை விரைவாக வரைந்து, பிற வினாக்களுக்கான நேரத்தை ஒதுக்க முடியும். படம் வரைதல், நீண்ட விடைகளைவிட, வேறுபடுத்துதல்/ ஒப்பிடுதல் போன்ற அட்டவணை வினாக்களுக்கு முன்னுரிமை தரலாம். இந்த அணுகுமுறை நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், மதிப்பெண்களைச் சிதறாது பெற்றுத் தரும். வினாக்களை நன்றாக வாசித்துப் புரிந்துகொண்ட பின்னர் விடையளிக்க வேண்டும். 3 மதிப்பெண் பகுதியில் ‘பி.எம்.ஐ-பி.எம்.ஆர்., த்ரோம்பஸ்-எம்போலஸ், பாராட்டோ-எபிடோப், சி.எல்.ஆர்.- ஐ.ஓ.எல்.’ உள்ளிட்டவை தொடர்பான வினாக்களில் மாணவர்கள் குழப்பமடைகிறார்கள். படிக்கும்போதே இந்த வினாக்களில் கவனத்தைக் குவிப்பதும் தேர்வுத் தாளில் இவற்றை எதிர்பார்த்துத் தயாராக இருப்பதும் மேற்படி குழப்பங்களைத் தவிர்க்கும்.

பாடக்குறிப்புகளை வழங்கியவர் போ.பிரீவா, முதுகலை ஆசிரியர் (விலங்கியல்), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in