Last Updated : 05 Nov, 2018 06:34 PM

 

Published : 05 Nov 2018 06:34 PM
Last Updated : 05 Nov 2018 06:34 PM

சேதி தெரியுமா? - நியூட்ரினோ திட்டம் இடைக்காலத் தடை

தேனியில் தொடங்கப்படுவதாக இருந்த மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்குத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நவம்பர் 2 அன்று தடைவிதித்துள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறாமல் நியூட்ரினோ திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்துக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழுக்குத் தடைவிதிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

ரஃபேல்: பிரதமருக்கு எதிராக ஆதாரம்?

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நவம்பர் 2 அன்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதற்காக, பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம், அனில் அம்பானி குழுமத்துக்கு லஞ்சம் வழங்கியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த ஊழலில் பிரதமருக்குத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இரண்டு மணிநேரக் கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நவம்பர் 2 அன்று அறிவித்தது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

s3jpgright

எளிமையான வர்த்தகத்தில் 77-வது இடம்

உலக வங்கியின் 2018-ம் ஆண்டுக்கான எளிமையான வர்த்தகம் செய்வதற்கான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் (Ease of Doing Business Index) இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தப் பட்டியலில் 100-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 190 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து பிடித்திருக்கிறது.

படேல் சிலை திறப்பு

உலகின் மிக உயரமான சிலையாக 182 மீட்டர் உயரத்துக்கு வடிவமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31 அன்று திறந்துவைத்தார். படேலின் 143-வது பிறந்தநாளில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Unity) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிலை ரூ. 2,989 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்ற 4 புதிய நீதிபதிகள்

உச்ச நீதிமன்றத்தின் நான்கு புதிய நீதிபதிகளாக ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் நவம்பர் 2 அன்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் நால்வரின் பதவியேற்புக்குப்பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24-லிருந்து 28-ஆக உயர்ந்திருக்கிறது.

‘டிரெயின் 18’ அறிமுகம்

சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாமல் ஓடும் அதிவேக ரயில் ‘டிரெயின் 18’ (Train 18) அக்டோபர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 16 நவீனப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. தற்போது இயக்கப்பட்டுவரும் ‘சதாப்தி’ ரயில்களுக்கு மாற்றாக இந்த ரயில் இயக்கப்படவிருக்கிறது.

நீட் தேர்வுக்கான பதிவு தொடக்கம்

2019-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்-க்கு (இளநிலை) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முறை நவம்பர் 1 முதல் தொடங்கியது. மாணவர்கள் நவம்பர் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2019, மே 5 அன்று மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

60 சதவீதக் காட்டுயிர்கள் அழிப்பு

1970-2014-ம் ஆண்டுவரை, உலகின் 60 சதவீதக் காட்டுயிர்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அக்டோபர் 29 அன்று வெளியான 2018-ம் ஆண்டுக்கான ‘லிவிங் பிளானட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகக் காட்டுயிர் நிதியம் (WWF) தயாரித்திருக்கும் இந்த அறிக்கையில் நாற்பது ஆண்டுகளில், உலகில் வசித்துவந்த பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு உயிரினங்கள் அழிந்துவிட்டதால் உலகில் மீதமிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்று இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விசாரிக்கப்படாத பத்திரிகையாளர் மரணங்கள்

உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் நடைபெறும் பத்திரிகையாளர்களின் மரணங்களை அரசுகள் முறையாக விசாரணை செய்வதில்லை என்று சர்வதேசப் பத்திரிகை நிறுவனம் (IPI) அக்டோபர் 31 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் மெக்ஸிகோவும் இந்தியாவும் பத்திரிகையாளர்களின் மரணங்களை விசாரிப்பதில் மெத்தனம்காட்டி வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x