Published : 05 Nov 2018 06:33 PM
Last Updated : 05 Nov 2018 06:33 PM

அந்த நாள் 08: மெசபடோமியாவில் ஓர் ‘ஊர்’

அன்புள்ள குழலி,

தீபாவளி விடுமுறைக்கு மதுரைக்குப் பத்திரமாப் போய்ச் சேர்ந்திருப்பேன்னு நினைக்கிறேன். லண்டன்ல தீபாவளிக்கு விடுமுறை எல்லாம் கிடையாது. மண் சட்டி பானைகள் 4,000 ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் நம்மிடையே தொடர்வதை யோசிச்சுப் பார்த்தா, நமக்கும் சிந்துவெளிக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள்ல இதுவும் முக்கியமானதுதான்னு தோணுது. ராகுல்ஜியின் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாய். அதைத் தேடி வாசிக்கிறேன். இந்த வாரம் எதைப் பத்தி எழுதப் போறேன்னு படிக்க ஆவலா இருக்கேன்.

அன்புடன்,

செழியன்

 

அன்புள்ள செழியா,

சிந்துவெளி நாகரிகம் பற்றி நாம நிறையப் பேசிவிட்டோம். அதன் சம காலத்தில் தழைத்திருந்த மற்றொரு நாகரிகம் மெசபடோமிய அல்லது சுமேரிய நாகரிகம். எந்த நவீன அறிவியல் வசதியும் இல்லாத 4,000 வருடத்துக்கு முந்தைய காலம் அதுன்னு நினைக்கிறோம். ஆனா, சிந்துவெளிக்கும் மெசபடோமியாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கு. மெசபடோமியாவில் சிந்துவெளி முத்திரைகள் கிடைத்திருப்பதுதான் இதற்கான முக்கியமான ஆதாரம்.

அதோட சிந்துவெளிக் கப்பல்கள் இன்றைய குஜராத்தில் உள்ள லோத்தலில் புறப்பட்டு, அரபிக் கடலைக் கடந்து இன்றைய வளைகுடா நாடுகள் இருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கணும். யூப்ரிஸ், டைகரிஸ் நதிகள் பாய்ந்த அங்கேதான் மெசபடோமிய நாகரிகம் தழைத்திருந்தது.

மெசபடோமிய நாகரிகத்துக்கு சிந்துவெளியுடன் மட்டுமில்ல, தமிழகத்துடனும் தொடர்பு இருந்திருக்கு. நம்ம நாட்டுல இருக்குற நகரங்களை ‘ஊர்' அப்படீங்கிற பெயர்ல பன்னெடுங்காலமாகக் குறிப்பிட்டு வர்றோம். அதேபோல, மெசபடோமிய நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு நகரத்துக்கு ‘ஊர்'னு பெயர் இருந்திருக்கு. ஆரம்பக் கடிதங்கள்ல நான் குறிப்பிட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்கிட்டீன்னா, இந்தத் தொடர்பை நீ தெளிவாப் புரிஞ்சுக்கலாம்.

மெசபடோமியா மட்டுமில்ல, புவியியல் ரீதியில் நெருக்கமாகவும் தங்களுக்கு மேல் பகுதியிலும் இருந்த இன்றைய ஆஃப்கானிஸ்தான் பகுதியிலிருந்து அரிய மணிக்கற்கள், உலோகங்கள், தென்னிந்தியாவில் இருந்து தந்தம், தங்கம் போன்றவற்றை சிந்துவெளி மக்கள் இறக்குமதி செய்திருக்கணும்னு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறாங்க. அதேநேரம் வேளாண்மையில் சிறந்திருந்த சிந்துவெளி மக்கள், பருத்தித் துணிகளைப் பெருமளவில் ஏற்றுமதி செஞ்சிருக்காங்க.

சிந்துவெளியின் அழிவு

இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குத் தழைத்திருந்த சிந்துவெளி நாகரிகம் பொ.ஆ.மு.

1900-க்குப் பிறகு சரியத் தொடங்கியது. தெளிவா சொல்லணும்னா இன்னைலேர்ந்து 3,900 ஆண்டுகளுக்கு முன்னாடி. அதற்குச் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. காடுகள் அழிந்து, அதனால் நதிகள் வறண்டு, நிலம் பாலையாகி இருக்கலாம்கிறது ஒரு கணிப்பு.

சிந்துவெளிக் குடியிருப்புகள் எல்லாமே செங்கற்களால் கட்டப்பட்டவை. அதற்கு அந்த நாகரிகம் தழைத்திருந்த பகுதிகளில் நிறையச் செங்கல் சூளைகள் இருந்துள்ளன. சூளை அமைக்க அவங்களுக்கு விறகு தேவைப்பட்டுச்சு. அது மட்டுமில்லாம அன்னைக்கு சமையலுக்கும் விறகு தேவைப்பட்டிருக்கும். இதனால் காடுகள் அழிஞ்சிருக்கலாம்னு சொல்லுது இன்னொரு கணிப்பு.

இன்னொரு பக்கம் வெள்ளம் வந்ததற்கான சுவடுகளும் சிந்துவெளிச் சுவர்களில் படிந்துள்ளன. சிந்துவெளி மக்களைச் செழிப்பா வாழ வைத்துவந்த சிந்து நதி, தன் பாதையை மாற்றியதால் ஊர்கள் வெள்ளக்காடாகி இருக்கலாம். வெள்ளமோ காடழிவோ - ஏதோ ஒரு சுற்றுச்சூழல் பேரழிவால்தான் சிந்துவெளி நாகரிகம் அழிஞ்சிருக்கணும்.

நகர்ந்துபோன நதி?

இன்றைய சிந்து நதி, சிந்துவெளி நாகரிகம் தழைத்திருந்த பகுதிகள்ல இருந்து பெருமளவு விலகியிருக்கு. அதனால, தண்ணீர் பற்றாக்குறையும் அந்த நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஆறுகளின் பாதை மாறுவதும் புவியியல் மாற்றங்களில் ஒண்ணுதான்.

சிந்துவெளி மக்கள் எத்தனையோ வகைகள்ல வளர்ச்சியடைஞ்சவங்களா இருந்தாலும், இன்னைக்கு உள்ளதைப் போல அணை கட்டி நதிகளைத் திருப்பும் அளவுக்கு அன்றைக்கு அவர்கள் வளரலை.

இப்படியாக உலகின் மிகச் சிறந்த வளர்ச்சிகளைக் கண்ட சிந்துவெளி நாகரிகம் மறைஞ்சு போச்சு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியுற வரைக்கும், அதைப் பத்தி யாருக்கும் தெரியாம மண்ணு மூடித்தான் கிடந்துச்சு.

அன்புடன்,

குழலி

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்


தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x