Published : 19 Nov 2018 11:50 AM
Last Updated : 19 Nov 2018 11:50 AM

அலசல்: வெளியேற்றப்பட்டாரா பின்னி பன்சால்?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார். காரணம் பாலியல் புகார்.  `மீ டு’ இயக்கத்தின் எதிரொலியாக பல பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறலை தைரியமாக இப்போதுதான் வெளியே சொல்லி வருகின்றனர்.

ஆனால் பன்சால் மீதான புகார் ஜூலை மாதமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விசாரணை குறித்த தகவல்கள் இப்போதுதான் வெளியாகின்றன.  நடந்தது பாலியல் வன்முறை அல்ல என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டதாகவும் பின்னி பன்சால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு 11 ஆண்டுகளுக்கு முன்னர் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் இருவரும் பிளிப்கார்ட்டை தொடங்கினர். இன்று இந்தியாவில் அமேசானுக்கே போட்டியாக வளர்ந்து நிற்கின்றனர். இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கு இவர்கள் மிகப் பெரிய உந்துசக்தி.

வால்மார்ட் நிறுவனம் இந்த ஆண்டின் மே மாதத்தில் பிளிப்கார்டின் 77 சதவீத பங்குகளை கைப்பற்றியது. வால்மார்ட் ஒப்பந்தத்திற்கு பின்னர் சச்சின் பன்சால் விலகினாலும், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் பின்னி பன்சால் தொடர்ந்தார்.

இந்த நிலையில்தான் தற்போதைய பாலியல் புகார் எழுந்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2012-ம் ஆண்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக  வால்மார்ட் நிறுவனத்துக்கு புகார் அளித்தாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அப்போது எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும் இப்போதைய தகவல்கள்படி, வால்மார்ட்  மற்றும் பிளிப்கார்ட் அமைத்த விசாரணைக் குழுவில் பின்னி பன்சால்  விளக்கம் அளித்துள்ளதுடன், உடனடியாக தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் பன்சால் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். அந்த பெண்ணுடனான தொடர்பு ஒப்புதலுடன் நடந்ததாக பின்னி பன்சால் தெரிவித்ததாக வால்ஸ்டீர்ட் ஜர்னல் கூறுகிறது.

பின்னி மீதான புகாரில் மேலும் சில சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பிளிப்கார்ட் உடனான ஒப்பந்தம் சமீபத்தில்தான் முடிவடைந்துள்ளது. ஜூலை மாதம் அளிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணை தகவல்கள் இப்போது வெளிவருவதற்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

குறிப்பாக சச்சின் வெளியேறியபோது, பின்னி உடனடியாக வெளியேறவில்லை. வால்மார்ட் உடனான ஒப்பந்தத்திற்கு இந்திய ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி கிடைக்க வேண்டும். இதற்காக இந்திய தலைமை தொடர வேண்டும். இதற்காகவே பின்னி தலைமைச் செயல் அதிகாரியாக தொடர வைக்கப்பட்டார். இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததால் பாலியல் புகாரில் வெளியேற்றப்படுகிறார் என்கின்றனர் விவரத்தை கவனிப்பவர்கள்.

ஒப்பந்தம் முடியும்வரை வால்மார்ட் இந்த புகார் குறித்து ஏன் விசாரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை ஜூலை மாதமே இந்த விவகாரம் வெளியே தெரிந்திருந்தால் வால்மார்ட் முதலீட்டாளர்கள் பிளிப்கார்டை வாங்க எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். இதனால்தான் வால்மார்ட் உடனடியாக விசாரிக்கவில்லை.

குற்றச்சாட்டை நிரூபிக்க புகார்தாரரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும்,  இந்த விவகாரத்தை  வால்மார்ட் தவறாக கையாண்டது என்கின்றனர்.

பின்னி பன்சால் மீதான விசாரணை அறிக்கையை வால்மார்ட்டின் சட்ட நிறுவனம் இதுவரை அவருக்கு  வழங்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பிராண்டை உருவாக்கி, அதை வால்மார்ட்க்கு விற்றவர் பின்னி. தற்போது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். விசாரணை நேர்மையானதாக நடக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x