Last Updated : 20 Nov, 2018 10:11 AM

 

Published : 20 Nov 2018 10:11 AM
Last Updated : 20 Nov 2018 10:11 AM

ஆங்கில​ம் அறிவோமே 240: இளிச்சவாயன் என்ற விமர்சனம்!

கேட்டாரே ஒரு கேள்வி!

ஒரு சொல்லின் சம சொற்களை அளிக்கிறது  ‘Thesaurus’.  இந்த ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு சம சொல் வேண்டுமானால் அதையும் அந்த ​​நூலிலேயே தேடலாமா?

தேடினாலும் கிடைக்காது. ‘Thesaurus’ என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்தது.  இதன் பொருள் பொக்கிஷம் (Treasure House).  சொற்களைப் பொறுத்தவரை ‘Thesaurus’ ஒரு பொக்கிஷம்தான்.

*************

“எங்கள் ப்ராஜெக்டில் இருக்கும்  ஒரு பெண், ‘I do not want to be the ஆண்ட் ஸாலி’ என்று அடிக்கடி கூறுகிறார்.  இதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார். உதவுங்கள்”.

‘Aunt Sally’ என்பது பிரிட்டனில் விளையாடப்படும் ஒரு விளையாட்டு.  ஒரு மரப்பொம்மையின் மீது பந்துகளையோ குச்சிகளையோ ​தூக்கி எறியும் விளையாட்டு.  இந்த மரப் பொம்மையையும் ‘Aunt Sally’ என்பார்கள்.

இதைத் தொடர்ந்து யாரை எளிதாக விமர்சிக்க முடிகிறதோ அவரை ‘aunt Sally’ எனக் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

தமிழில் ‘இளிச்சவாயன்’ என்போமே, அதுபோல ஆங்கிலத்தில் ‘aunt Sally’.  ஆங்கிலத்தில் ஏன் ‘Uncle Sally’ என்று கூறுவதில்லை என்பதற்கான காரணமும் தமிழில் ஏன்  ‘இளிச்சவாயள்’ என்ற பதம் இல்லை என்பதற்கான காரணமும் தெரியவில்லை.

*************

“Science fiction என்பதற்கு ஏதாவது இலக்கணங்கள் உண்டா?”

கற்பனை வளம் கொண்டு படைக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளாக இருக்க வேண்டும். பிற கிரகங்களில் நடைபெறுவதாகவும் இருக்கலாம்.  விண்வெளி, காலப் பயணம் போன்றவை தொடர்புபடுத்தப் பட்டிருக்க வேண்டும்.

எந்த விதியையும் யாரும் வரையறுக்கவில்லை என்றாலும், ‘science fiction’ என்பது மேலே காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே படைக்கப்படுகிறது.

சமீபகாலமாக இத்தகைய கதைகளை ‘speculative fiction’  என்று  கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

english-2jpg100 

“‘Homesick’ என்ற வார்த்தையைக் குறிக்கும்படி ஓர் ஓவியப்போட்டியை நடத்த இருக்கிறார்கள். ‘Homesick’ என்பதற்கான தெளிவான அர்த்தத்தைக் கூற முடியுமா? முடிந்தால் ஓவியத்துக்கான ஐடியாவையும் கொடுக்கலாமே” என்று உரிமையுடன் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கும் ‘Homesick’ என்பதன் பொருள் உணர்வுபூர்வமாகவே தெரிந்திருக்கும்.

ஊரைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து வேறிடத்தில் வசிக்க நேருபவர்களுக்கு வீடு குறித்து ஓர் ஏக்க உணர்வு தோன்றும்.  அதுதான் ‘homesick’.

 நீங்கள் குறிப்பிடும் ஓவியப் போட்டி இந்நேரம் முடிந்திருக்கலாம்  அல்லது உங்களுக்காக நான் கொடுக்கும் ஐடியாவை உங்கள் போட்டியாளர்களும் பயன்படுத்தக்கூடும். இருந்தாலும் என் மூளையில் எரிந்த ஒரு பல்ப் இதோ.

 ஒருவன் கையில் அவனது குடும்பத்தினரின் ஒளிப்படம் (அதில் அவனும் இருக்க வேண்டும்).  அதை அவன் ஏக்கத்துடன் (கண்ணீரும் எட்டிப் பார்க்கலாம்) பார்த்துக்கொண்டிருக்கிறான்.

*************

போட்டியில் கேட்டுவிட்டால்?

Being a doctor he wants his place to be ________

(a) beautiful

(b) garrulous

(c) spick and span

(d) brim

தன்னுடைய இடம் அழகாக இருக்க வேண்டுமென்று யாரும் விரும்பலாம்.  டாக்டர்கள் மட்டும் என்பதில்லை. ‘Garrulous’  என்றால் வளவளவென்று பேசுதல். இது டாக்டர்களுக்குப் பிடிக்கும் என்பதை ஒப்புகொள்ள முடியாது.

‘Brim’ என்றால் நிரம்பி வழிதல்.  தன்னுடைய கிளினிக்கில் நோயாளிகள் நிரம்பி வழிய வேண்டுமென்று டாக்டர்கள் எண்ணக் கூடும். எனினும் அப்போது ‘brimming’ என்ற வார்த்தைதான் இங்கு இடம் பெற முடியும்.

 ‘Spick and span’ என்றால் ‘very clean’ என்று பொருள் கொள்ளலாம்.  (Spic and span என்றும் எழுதுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது) தன்னுடைய இடம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றுதான் டாக்டர்கள் எதிர்பார்ப்பார்கள். எனவே ‘Being a doctor, he wants his place to be spick and span’ என்பதுதான் சரி. (spick என்றால் மிகச் சுத்தம், span என்றால் முழுமையான).

சிப்ஸ்

# ‘Intrepid’ ஆக இருப்பது நல்லதா?

பயமின்றி இருப்பது நல்லதா, கெடுதலா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

# ‘Affluence’ என்பது பொருளாதாரம் தொடர்பான சொல் மட்டுமா?

ஆம், பெரும் பணக்காரர்களை ‘affluent people’ என்பார்கள். ‘It was a decade of affluence’ என்றால் அந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் மிகவும் செழித்திருந்தது என்று பொருள்.

# ‘You are a badger’ என்று என் மேலதிகாரி கூறிவிட்டுச் சென்று விட்டார்.  இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?

அவர் உங்களைப் பாராட்டவில்லை.  சும்மா தொண தொணப்பவரையும் விடாமல் நச்சரிப்பவரையும் ‘Badger’ என்று சொல்வதுண்டு.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x