Published : 29 Aug 2014 10:00 AM
Last Updated : 29 Aug 2014 10:00 AM

ஹேப்பி பர்த்டே: ஆன்லைன் கொண்டாட்டங்கள்

பர்த் டே கொண்டாட்டத்தின் முக்கியமான விஷயமே கிஃப்ட்தான். நமக்குப் பிடித்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத கிஃப்டைக் கொடுத்து அசத்துவது தனி சுகம். இப்போது கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே கிஃப்டை வரவழைத்துக்கொள்ள முடிவது எவ்வளவு வசதி!

இளைஞர்கள் ஃப்ரண்ட்ஸுடன்

ஜாலியாக ஊர் சுற்ற நினைத்தால் கடைகளுக்குச் செல்கிறார்கள். பொருள்களை வாங்க வேண்டும் என்றால் ஆன்லைனுக்கு வந்துவிடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் சங்கீர்த்தனி, தன் தோழி ராதா கிருஷ்ணனுக்குப் பிறந்த நாள் பரிசாக ஃபிலிப்கார்டில் ஓர் அழகான சட்டையை வாங்கிக் கொடுத்துள்ளார். “ஆன்லைனில் கிஃப்ட் வாங்கியது ஒரு த்ரில். மானிட்டரில் பார்த்த சட்டை நேரில் வரும்போது அப்படியே இருக்குமோ இருக்காதோன்னு ஒரே டென்ஷனாவே இருந்துச்சு” என்று கண்கள் விரியப் படபடப்பாகப் பேசுகிறார் அவர்.

ஃபிலிப்கார்ட், ஈபே, ஷாப்க்ளூஸ், நாப்டால், ஜாபாங், அமேசான், மைந்த்ரா, ஸ்னாப்டீல் போன்ற பல இணையதளங்களில் பரிசுப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. அது ஒரு மாய உலகம். இருக்கு ஆனா இல்லை என்னும் ஃபீலிங். ஒவ்வொரு பொருள்களை ஒவ்வொரு இணையதளத்தில் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களும் பெண்களும். பி.காம். படிக்கும் மாதங்கி முரளீதரன் ஆடைகள், அக்ஸசரீஸ் வாங்க ஃபிலிப்கார்டையும் எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க ஈபேயையும் பயன்படுத்துகிறார்.

போட்டோகிராபியில் ஆர்வம் கொண்ட ஷேன் அமெரிகா தன் நண்பனின் பர்த் டேக்கு கிஃப்டாக வாட்ச் ஒன்றைத் தர விரும்பியுள்ளார். முதலில் ஓர் ஆன்லைனில் ஷாப்பிங் சென்று வாட்சைத் தேர்ந்தெடுத்து புக் செய்து ஓகே தரப்போகும் நேரத்தில் அவருக்கு ஏனோ அந்த வாட்ச் பிடிக்காமல் போய்விட்டது. எனவே தடாலடியாக அதை கேன்சல் செய்துவிட்டு வேறொரு ஆன்லைனில் வாட்சை ஆர்டர் செய்துள்ளார். “அதை அவன் அட்ரஸுக்கு அனுப்பிட்டேன். திடீர்னு வாட்ச் கிடைச்ச சந்தோஷத்துல அவன் திக்குமுக்காடிப் போய்ட்டான்” என்று பூரிப்புடன் சொல்லிச் சந்தோஷப்படுகிறார் அவர்.

பொம்மைகள், ஆக்ஸசரீஸ், புடவை, ஃபேன்சி டிரஸ், ஜுவல்ஸ் போன்று எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். ஜுயாலஜி படிக்கும் பிரசாத் வித்தியாசமான பர்த்டே கிஃப்ட் கொடுத்துள்ளார். அது போர்ட்டபிள் மொபைல் சார்ஜர்.

“எலக்ட்ரானிக் குட்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லானது. என்னோட ஃப்ரண்டு மொபைல் சார்ஜர தொலச்ச டைம்ல அவனுக்கு பர்த் டே வந்துச்சு. அதனால சார்ஜர கிஃப்டா கொடுத்தேன். அவனும் பயங்கர ஹேப்பியாயிட்டான்” என்கிறார் அவர். சங்கீத வித்வானான சுவாமி தன் நண்பனுக்கு ஆரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதுவும் ஆன்லைனில் வாங்கியதுதான்.

கையில் மொபைல், வீட்டில் கம்யூட்டர் என்று டெக்னாலஜி யுகத்தில் வாழும் இளைஞர்கள் விரல் நுனியில் படபடவெனத் தட்டி தட்டி கிஃப்ட் வாங்கித் தந்துவிடுகிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்வதால் கிஃப்ட் பற்றிய சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுவதால் இளைஞர்களைப் பெரிதும் இவை கவர்கின்றன.

கடையில் வாங்கினாலும் சரி, ஆன்லைனில் வாங்கினாலும் சரி கிஃப்ட் கொடுப்பதாலும் வாங்குவதாலும் இளைஞர்கள் இனம்புரியாத சந்தோஷ மடைகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x