Published : 16 Oct 2018 11:31 AM
Last Updated : 16 Oct 2018 11:31 AM

வேலைப் பெற்றுத்தரும் அலுவலகம்

முன்பு அரசின் பல்வேறு  துறைகளுக்கும் மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஊழியர்களும் அலுவலர்களும் வேலைவாய்ப்பு  அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டுவந்தனர்.  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வு  மூலமாகவும் பொதுப் போட்டி அடிப்படையிலும் நிரப்பப்பட்டுவருகின்றன.

பதிவுமூப்பு அடிப்படையிலான வேலைவாய்ப்பு நடைமுறை மாறிவிட்டதால் அதற்கேற்ப மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தங்கள் பணியைச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கின்றன. அரசு வேலைவாய்ப்புக்குப் பதிவுதாரர்களைப் பரிந்துரை செய்துவந்த நிலை மாறிப் பதிவுதாரர்களை அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது, பயிற்சி அளிப்பது, தனியார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது,  அதற்குத் தேவையான திறன்களை மேம்படுத்தப் பயிற்சி எனத் தங்கள் பணிகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளன.

‘தினம் ஒரு செயல்பாடு’

"அரசு வேலைக்காக  நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி., வங்கிப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது,  தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற உதவி செய்வது, வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை மேம்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறோம்.

‘தினம் ஒரு செயல்பாடு’ என்பதை முன்வைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்,  ‘திறன்மிகு திங்கள்’, ‘சேவை செவ்வாய்’, ‘போட்டித் தேர்வு புதன்’, ‘விழிப்புணர்வு வியாழன்’, ‘வேலைவாய்ப்பு வெள்ளி’  எனத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. 

திங்கள் அன்று வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களின் முக்கியத்துவம், அவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்  தொடர்பான பணிகள் நடைபெறும். செவ்வாய் அன்று எங்கள் அலுவலர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமின்றி கிராமப்புறங்களுக்குச் சென்று  கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.

புதன் அன்று போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி, தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். இதற்காக ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் என்ற  அமைப்பு இயங்குகிறது. வியாழன் அன்று பொதுமக்களுக்கு உயர்கல்வி வழங்கும் முக்கிய நிறுவனங்கள், வளர்ந்து வரும்  வேலைவாய்ப்புகள், அதற்கான கல்வித் தகுதிகள், சுயதொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குகிறோம்.

வெள்ளி அன்று வேலை தேடுவோரையும், வேலைக்கு ஆள்தேடும் தனியார் நிறுவனங்களையும் ஒரே  இடத்தில் வரவழைத்து  வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமின்றி வேலை தேடுவோர் யார்  வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முற்றிலும் இலவசம். தனியார் நிறுவனங்கள் தேர்வு நடத்தியோ, நேர்காணல் செய்தோ, தங்களுக்குத் தேவையான  பணியாளர்களைச் செலவில்லாமல் தேர்வுசெய்துகொள்கிறார்கள்.

velai-2jpgபா.ஜோதி நிர்மலா சாமி

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று பார்த்தால் அனைத்து வேலைவாய்ப்பு  அலுவலகங்களும் களைகட்டி இருக்கும். இதில் எண்ணற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பணிநியமன ஆணை பெற்றுச்செல்வதைப் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்" என்கிறார் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரான பா.ஜோதி நிர்மலா சாமி.

இத்தகைய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும்  வாரத்துக்கு 1,500 பேர் வீதம் மாதம் சுமார் 8 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

சுயதொழிலுக்கும் வழிகாட்டல்

“பொதுவாக, அரசு பணி கிடைத்துவிட்டால் பதிவுதாரரின் பெயர் பதிவுமூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆனால்,  இதுபோன்று சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவோரின் பதிவுமூப்பு நீக்கப்படாது. அது  தொடர்ந்து பதிவில் இருக்கும்" என்கிறார் ஜோதி நிர்மலா சாமி .

சுயதொழிலில் தொடங்க விரும்புவோருக்கும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்டத் தொழில் மையம், ’தாட்கோ’ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மூலமாகவும் தமிழ்நாடு  திறன் மேம்பாட்டு கழகம் மூலமாகவும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அரசு வேலைக்குப் பரிந்துரை செய்வது என்ற நிலையிலிருந்து மாறி, அரசு வேலைவாய்ப்புக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவது, தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற உதவுவது, சுயதொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு  உரிய பயிற்சி அளிப்பது என வேலைவாய்ப்பு வழிகாட்டி மையங்களாகத் திகழ்கின்றன மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்.

காத்திருப்பவர்கள்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலகங்களும் சென்னை, மதுரையில் மாநிலத் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. இவற்றில் அரசு வேலையை எதிர்பார்த்துப் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதில் சுமார் 25 லட்சம்  பதிவுதாரர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ படிப்பைத் தொடர்பவர்கள். பதிவுதாரர்களில் ஏறத்தாழ 48 லட்சம் பேர் 23 முதல் 35 வயது உடையவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x