Published : 02 Oct 2018 12:47 pm

Updated : 02 Oct 2018 12:47 pm

 

Published : 02 Oct 2018 12:47 PM
Last Updated : 02 Oct 2018 12:47 PM

அந்த நாள் 03: நாட்டுக்குப் பெயர் தந்த நாகரிகம்

03

அன்புள்ள செழியா,

வணக்கம்.


லண்டனுக்குப் பத்திரமா போய்ச் சேர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன். உன் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிகளில் சீக்கிரம் முழுகிவிடுவாய். அதற்கு முன் நீ சென்னை வந்திருந்தப்ப பேசின விஷயங்களை மறந்திடாதே. தமிழ் நாகரிகத்துக்கும் சிந்துவெளிக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி நாம பேசிக்கிட்டிருந்தோம், இல்லையா?

21-ம் நூற்றாண்டின் அதிநவீன விஞ்ஞானியா நீ இருக்கலாம். சிந்துவெளி மக்கள் நமக்கு 4000-5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவங்க. ஆனா, அறிவில் சிறந்தவங்க. அவங்களைப் பத்தி ஒவ்வொரு விவரமா தெரிஞ்சுக்கும்போது, உனக்கே அது புரியும். அது மட்டுமில்ல, வரலாறும் வரலாற்று ஆராய்ச்சிகளும் ஏன் முக்கியம்கிறது உனக்கு நிச்சயமாப் புரியும்னு நம்புறேன்.

உலகின் ஆதி நதிக்கரை நாகரிகங்களில் ஒன்று சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilization). இதற்கு மொஹஞ்சதாரோ நாகரிகம், ஹரப்பா நாகரிகம்கிற வேறு பெயர்களும் உண்டு.

இந்த நாகரிகம் செழித்திருந்த காலம், பொது ஆண்டுக்கு முன் (பொ.ஆ.மு.) 3300 - 1900. இன்னைக்கு 2018-ன்னா, அதிலிருந்து குறைந்தபட்சம் 4000, அதிகபட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்னாடிக் காலம். விஞ்ஞானியான நீ, உடனே அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்பாய். அறிவியல்பூர்வமாத்தான் இந்தக் காலத்தை முடிவு செய்றாங்க. அந்த வகையில அறிவியலும் வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவியிருக்கு. ‘கதிரியக்கக் கார்பன் ஆயுள் கணிப்பு’ முறை மூலம்தான் மேற்கண்ட காலம் முடிவு செய்யப்பட்டிருக்கு.

அதற்கான தொல்லியல் பொருட்கள் கிடைச்சது, சுவாரசியமான ஒரு கதை. இன்றைய பாகிஸ்தானின் சிந்து, மேற்கு பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளில் ஆங்காங்கே செங்கற்கள், உடைந்த சுவர்கள் குவியல் குவியலா இருந்துச்சு. அ

ந்தச் செங்கற்களும் சுவர்களும் ரொம்பப் பழமையானவையாக இருந்தன. செங்கற்களைக் கொண்டு அந்த வீடுகளை யார் கட்டினாங்க, எப்போது கட்டினாங்க, அப்புறம் எப்படி அவங்க காணாமப் போனாங்க என யாருக்கும் எதுவுமே தெரியலை. மர்மமான இந்தச் செங்கல் குவியலுக்கு அருகே வாழ்ந்த கிராம மக்கள், அந்தப் பகுதியை 'மொஹஞ்சதாரோ'ன்னு சிந்தி மொழியில் அழைச்சாங்க.

இன்றைக்கு நாமும் அந்தப் பகுதியை அப்படித்தான் அழைக்கிறோம். மொஹஞ்சதாரோன்னா, 'இறந்தவர்களின் மேடு'ன்னு அர்த்தம்.

இன்றைக்குப் பல நடிகர், நடிகைகள் டி.எம்.டி. கம்பி, சிமெண்ட் பத்தி எல்லாம் வீராவேசமாக விளம்பரப்படுத்துறாங்களே, அதெல்லாம் இந்தச் செங்கற்களின் பக்கத்துலகூட நிற்க முடியாது. அந்தச் செங்கற்கள் 4000-5000 ஆண்டுகளைக் கடந்திருந்தும்கூட உறுதியாக இருந்தன.

இலவசமா கிடைச்ச அந்தச் செங்கற்களை எடுத்துட்டுப் போய் உள்ளூர் மக்கள் வீடு கட்டப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. அந்தச் செங்கல் குவியல் ஆதி நாகரிகத்தின் எச்சம் என்று யாருக்குமே தெரியலை.

சொல்லப் போனா ரயில்தான் மொஹஞ்ச தாரோவைக் கண்டறிஞ்சது. பல பழைய திரைப்படங்கள்ல ரயில் வந்த பிறகு, புதிய மாற்றங்கள் வரும். இந்திய சினிமாவில் நவீனத்தின் குறியீடு ரயில். இந்தியாவின் ஆதி நாகரிகங்களைக் கண்டறிஞ்சது, அந்த ரயிலுக்கு அம்மாவான ரயில்பாதை. அந்தப் பகுதில ரயில்பாதை அமைக்கப் போன ஆங்கிலேயப் பொறியாளர்களுக்கும் இந்தச் செங்கற்கள் கிடைச்சது. அந்தச் செங்கற்களே சிந்துவெளி நாகரிகத்தைக் காப்பாற்றின.

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி வாழ்ந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான். அதேநேரம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி போன்ற துறைகள் சார்ந்து நிறையவே அவங்க பங்களிச்சிருக்காங்க. மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பண்டைய அற்புத நகரங்களைக் கண்டறிஞ்சதில் ஆங்கிலேயர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1861-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை இதற்கெல்லாம் அடிப்படையா இருந்துச்சு.

1920-கள்ல காக்கி அரைக்கால் சட்டை, வெயிலில் இருந்து காப்பாத்தும் 'சோலா தொப்பி'களுடன் அந்தப் பகுதிக்கு எங்களைப் போன்ற தொல்லியல் - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் போனாங்க. அந்தச் செங்கற்கள் சாதாரண செங்கற்கள் அல்ல, அவை ‘வரலாற்றின் மதிப்புமிகு ஆதாரங்கள்' என்பதைக் கண்டறிஞ்சாங்க. நாங்க கல்லையும் மண்ணையும் தோண்டிக்கிட்டு இருப்பது இதற்காகத்தான்.

விடுதலைப் போராட்ட காலம் பத்தின முக்கியமான தமிழ்ப் படமான கமல் ஹாசனின் 'ஹேராம்' படத்தைப் பார்த்திருக்கியா? காந்தியை யார் கொன்றார்கள், எதற்காகக் கொன்றார்கள் என்று அந்தப் படம் கேள்வி கேட்டுச்சு. அதில் கமல்ஹாசனும் (சாகேத் ராம்) ஷாருக் கானும் (அம்ஜத் அலி கான்) தொல்லியல் ஆராய்ச்சியாளர்களாக மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தேடிச் செல்வார்கள். இருவரும் வங்கத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டப்பட்டிருப்பார்கள். இது நிஜத்தின் பிரதிபலிப்பு.

1921-ல் ஹரப்பாவில் அகழாய்வு நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் வங்கத்தைச் சேர்ந்த தயா ராம் சாஹ்னியும், ஆங்கிலத் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஜான் மார்ஷெல்லும். சாஹ்னியைப் போலவே வங்கத்தைச் சேர்ந்த ரகால் தாஸ் பானர்ஜியும் ஆங்கிலத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் மார்டைமர் வீலரும் சிந்துவெளி நாகரிக எச்சங்களைக் கண்டறிஞ்சதில் முக்கியமானவர்கள்.

சிந்து நதியின் கரையில் இந்த நாகரிகத்தின் எச்சங்கள் கிடைத்ததால், சிந்து (Indus) சமவெளி நாகரிகம் என்று அது அழைக்கப்பட்டது. ‘இந்தியா' (India) என்ற பெயர் 'சிந்து' (Indus) என்ற நதியின் பெயரில் இருந்து உருவானதே.

சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான காலத்தில் இன்றைய ஈராக் பகுதியில் மெசபடோமிய அல்லது சுமேரிய நாகரிகம், நைல் நதி நாகரிகம் போன்ற ஆதி நாகரிகங்கள் தழைத்திருந்தன. அந்த நாகரிகங்களில் நகர அமைப்பு இல்லை. ஆனா, சிந்துவெளியில் உலகின் முதல் நகரங்கள் கட்டப்பட்டிருந்தன.

உலகின் ஆதி நகரங்களும் ஆதி நாகரிகமும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவை என்பதில் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரா பெருமைப்படுறேன். நான் மட்டுமில்ல, இது நாம எல்லோருமே பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

அன்புடன்

குழலி

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in


அந்த நாள்தொல்லியல் ஆராய்ச்சிநாகரிக ஆராய்ச்சி சிந்துவெளி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x