Published : 22 Oct 2018 11:11 AM
Last Updated : 22 Oct 2018 11:11 AM

ஆன்லைன் ஆதிக்கத்தால் ஆட்டம் காணும் ‘மால்’ கலாச்சாரம்

ஒரு காலத்தில் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் அண்ணாச்சிக் கடைகள்தான் பிரபலம். அதன்பிறகு, பொருளாதார வளர்ச்சி காரணமாக முதலீடுகளும் வருமானமும் அதிகரிக்க, மெல்ல பொருள்கள் வாங்குவது மால் கலாச்சாரத்துக்கு மாறியது. மால்கள் வந்து நகரங்களில் இருந்த அண்ணாச்சிக் கடைகளை எல்லாம் காலி செய்தன. இப்போது அதே நெருக்கடி  மால்களுக்கும் வந்திருக்கிறது.

இ-காமர்ஸ் துறை நாளுக்கு நாள் ஆக்டோபஸ் போல தன் கரங்களை நீட்டி வர்த்தக உலகை ஆக்கிரமித்து வருகிறது.

அதிரடி ஆஃபர்கள், விளம்பரங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதனால். நினைத்துப் பார்க்க முடியாத விலையில் பொருள்கள் என ஆசையைத் தூண்டி புதுப்புது வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டே இருக்கின்றன. ஒருமுறை இ-காமர்ஸ் தளத்துக்குள் போய் பார்த்துவிட்டால் நிச்சயம் பொருளை வாங்காமல் வெளியே வரமாட்டீர்கள். அந்த அளவுக்கு ‘டேட்டா அனாலிட்டிக்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறது. இதனால் மால்களில் கூட்டம் குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொருள்கள் வாங்குவது குறைந்தது மட்டுமல்லாமல் விண்டோ ஷாப்பிங் செய்ய வரும் கூட்டமும் குறைந்துவிட்டதாம். அதேசமயம் மால்களில் மக்கள் செலவழிக்கும் நேரமும் குறைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இதற்கு ஆஃபர்களையெல்லாம் தாண்டி, ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதில் பல்வேறு பலன்கள் இருப்பதும் முக்கிய காரணம் எனலாம். முன்பே பொருள்களை வாங்கியவர்களின் கருத்துகள் இதில் உள்ளன. இதனால் சக நுகர்வோரின் பரிந்துரையின்பேரில் பொருள்களை வாங்க முடிகிறது.

நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியும், போக்குவரத்து செலவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைனில் இருந்த இடத்திலிருந்தே பொருள்களை வாங்குவது எளிதாகிவிடுகிறது. அதேபோல் ஆன்லைனில் ஒரு பொருளை விற்பனை செய்யும் பல்வேறு விற்பனையாளர்களின் விலையைப் பொருத்திப் பார்த்து நமக்கான பட்ஜெட்டில் வாங்கமுடியும்.

இதனால் கடைகளுக்கு நேரடியாகச் சென்றாலும் பிடித்த பொருளைப் பார்த்துவிட்டு, அதன் விலையை ஆன்லைனில் பார்க்கிறார்கள். பின்னர் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்துவிடுகிறார்கள். இப்படி பல வகைகளிலும் ஆன்லைன் வர்த்தகம் பலன் தரக்கூடியதாக இருக்கிறது.

மில்லினியல் தலைமுறையினர் என்றழைக்கப்படும் 22 முதல் 37 வரை வயதுள்ள இளைஞர்கள் பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தக தளங்களில்தான் பொருள்களை வாங்குகிறார்களாம். அதிலும் ஜென் இசட் எனப்படும் 21 வயதுக்குட்பட்டவர்கள் பொழுதைக் கழிப்பதே மொபைல்களில்தான் என்பதால், இவர்கள் வளரும் இ-காமர்ஸ் உலகின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.  இவர்கள் கேட்ஜெட்டுகளையும் ஆடைகளையும் இ-காமர்ஸ் தளங்களில்தான் அதிகம் வாங்குகிறார்கள்.

புத்தக விற்பனையில் ஆரம்பித்த இ-காமர்ஸ் விற்பனை, இப்போது நமக்குத் தேவையான எல்லா பொருள்களையும் விற்க ஆரம்பித்துவிட்டது. காய்கறி, மளிகை சாமன்களையும்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்ய இளம் தலைமுறையினர் பழகிக்கொண்டிருக்கின்றனர். விரைவில் ஷாப்பிங் முழுவதுமாக ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாறிவிடும் போலிருக்கிறது.

அப்படி மாறும்போது மால்களும், பெரிய பெரிய கடைகளும், நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சந்திக்கும் நெருக்கடி உருவாகும். ஏற்கெனவே நகரங்களில் உள்ள பல மால்கள் மனமகிழ்  நிலையங்களாகவும், பிசினஸ் காம்ப்ளெக்ஸாகவும் மாறிவருகின்றன. இனி என்ன ஆகுமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x