வரலாறு தந்த வார்த்தை 36: வை சி.பி.ஐ.!

வரலாறு தந்த வார்த்தை 36: வை சி.பி.ஐ.!
Updated on
2 min read

இந்த வாரம், ஒரே விஷயம் ஆனால் இரண்டு சொற்றொடர்கள். ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்காவா..?’ என்று கேட்காதீர்கள். மாறாக, ஒரே உறையில் இரண்டு கத்தி..!

‘ஊழல் புகாரில் இரண்டு சி.பி.ஐ. அதிகாரிகள்!’ – இதுதான் கடந்த வார ‘ட்ரெண்ட்’.

 நாட்டில் நடைபெறும் மிக முக்கியமான குற்றங்களை மத்திய புலனாய்வு அமைப்பு எனும் சி.பி.ஐ.தான் விசாரிக்கிறது. அது விசாரித்துவிட்டால் போதும். அதற்கு மேலே எந்த ஒரு விசாரணையும் தேவைப்படாது. அந்த அளவுக்கு முக்கியமான ஓர் அமைப்பாக சி.பி.ஐ. செயலாற்றி வந்திருக்கிறது.

பல்வேறு மாநிலக் காவல்துறையினரால் தீர்க்கப்படாத குற்றங்கள் பலவற்றைப் புலனாய்வு செய்து, வழக்கை முடித்து வைத்த பெருமை இந்த அமைப்புக்கு உண்டு.

இப்படியான பெருமைகளுக்குப் பெயர் போன ஓர் அமைப்பின் மீதே, இப்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், அதன் முதன்மையான இரண்டு அதிகாரிகள் மீது என்பது, பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ‘அவர் இவருக்கு லஞ்சம் கொடுத்தார், இவர் அவருக்கு உதவி செய்தார்’ என்று நாளொரு வண்ணம் வரும் செய்திகளைப் பார்த்தால், உண்மையாகவே சி.பி.ஐ, ‘பெயர் போன’ அமைப்பாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுகிறது.

அவரைப் பிடிக்க இவரா?

‘அட போப்பா… எந்தக் காலத்துல போலீஸ் மேல கேஸ் விழுந்து, அது ஜெயிச்சிருக்கு?’ என்கிறீர்களா. சரிதான். இவ்வாறு உயர் மட்டத்தில் இருப்பவர்கள், தவறு செய்துவிட்டு, அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளாமல் தப்பித்துவிடுவதை விளக்குவதற்கு, ஆங்கிலத்தில் ‘Beat the rap’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.

 அமெரிக்கர்கள், தங்கள் பேச்சு வழக்கில் ‘தண்டனை’ என்ற பொருளைக் குறிப்பதற்கு ‘rap’ என்ற சொல்லை வெகுகாலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சொற்றொடரே, ‘take the rap’ என்ற இன்னொரு சொற்றொடரிலிருந்து பிறந்ததுதான். அதாவது, ‘குற்றம் செய்தவருக்குப் பதிலாக, குற்றம் செய்யாத வேறொருவர் அந்தக் குற்றத்துக்கான தண்டனையை ஏற்றுக்கொள்வது’ என்று பொருள்.

 ‘இடுப்புல கட்டுற சேலைக்கு சி.பி.ஐ. வைக்கிறீங்க. கால்ல போடுற செருப்புக்கு சி.பி.ஐ. வைக்கிறீங்க. கழுத்துல மாட்டுற நெக்லஸுக்கு சி.பி.ஐ. வைக்கிறீங்க. இதுக்கெல்லாம் சி.பி.ஐ. வைக்க மாட்டீங்களா?’ என்று ‘சூரிய பார்வை’ படத்தில் கவுண்டமணி கேட்பார்.

அதுபோல, சி.பி.ஐ. அதிகாரிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கவும் சி.பி.ஐ. வைக்கப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வேறென்ன செய்ய முடியும்… ‘Set a thief to catch a thief’ தான்!

அதாவது, ஒரு திருடர் (மரியாதை, மரியாதை!) எப்படியெல்லாம் திருடுவார், எப்படியெல்லாம் தப்பிப்பார் என்பது இன்னொரு திருடருக்கு மட்டுமே தெரியும். எனவே, போலீஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, போலீஸையே முடுக்கிவிடுவதுதான் சரியாக இருக்கும். முள்ளை முள்ளால் எடுப்பது போல!

வரலாற்றில் முதன்முறையாக 1654-ல், மேற்கண்ட சொற்றொடர் இ.கேய்டன் என்ற இங்கிலாந்துக் கல்வியாளரால் பயன்படுத்தப்பட்டது. உண்மையில், இது சொற்றொடரே அல்ல… அச்சில் பதிவாவதற்கு முன்பே, மக்களிடையே பேச்சு வழக்கில் புழங்கி வந்த ஒரு பழமொழி.

பழமொழி… இன்றைக்கு போலீஸுக்கான மொழி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in