Published : 18 Oct 2018 03:03 PM
Last Updated : 18 Oct 2018 03:03 PM

டிங்குவிடம் கேளுங்கள்: தீ மிதிக்கும்போது ஏன் கொப்புளங்கள் வருவதில்லை?

கோதுமையிலிருந்து கோதுமை மாவு, அரிசியிலிருந்து அரிசி மாவு கிடைக்கின்றன. மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது, டிங்கு?

– பி. நிதின், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

மைதாவும் கோதுமையிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது, நிதின். கோதுமையை அப்படியே அரைத்தால் கோதுமை மாவு. கோதுமையைச் சுத்திகரித்து அரைத்தால் மைதா மாவு. கோதுமையின் பழுப்பு நிறத்தைப் போக்குவதற்காக Benzoyl peroxide போன்ற ரசாயானத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்யும்போது கோதுமை வெள்ளையாகிவிடுகிறது. 

இவற்றிலுள்ள நார்ச்சத்தும் பிரித்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. இதுவே நாம் வாங்கும் மைதாவாக மாறிவிடுகிறது. மைதாவாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கு இழைக்கும் என்பதால், மைதாவை விட நார்ச்சத்து அதிகம் உள்ள கோதுமை மாவைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

எறும்புக்கு கண்கள் உண்டா, டிங்கு?

 – எம். புனிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.எம். மெட்ரிக். பள்ளி, சமயபுரம்.

பூச்சிகளுக்குக் கூட்டுக்கண்கள் இருப்பதை நீங்கள் படித்ததில்லையா, புனிதா? வேகமான அசைவுகளை எளிதாக இந்தக் கூட்டுகண்கள் மூலம் எறும்பு உணர்ந்து கொள்கின்றன. ஆனாலும் நல்ல பார்வைத் திறன் எறும்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் ஒளியை அறிந்துகொள்ளும் விதத்தில் மூன்று ஒளி உணர் பகுதிகள் தலையின் முன்புறத்தில் இருக்கின்றன.

எங்கள் ஊரில் தீ மிதித் திருவிழா நடக்கும் அதில் நடந்து செல்பவர்களுக்கு மட்டும் காலில் கொப்புளங்கள் வருவதில்லையே, ஏன் டிங்கு?

– ஆர். அகல்யா தேவி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.

tinku-2jpg100 

தீ மிதித் திருவிழாவில் பற்றி எரியும் நெருப்பில் யாரும் நடப்பதில்லை. மரக்கட்டைகள் நன்கு  எரிந்து, தணிந்து, அவற்றின் மீது சாம்பல் பூத்திருக்கும். அப்போதுதான் இறங்கச் சொல்வார்கள். நம் தோலைவிட உள்ளங்கால் தோல் தடிமனாக இருக்கும். தீயில் இறங்குகிறவர்கள் மீது தண்ணீர் ஊற்றிவிடுவார்கள். கால் ஈரமாக இருக்கும். நெருப்பில் இறங்கும்போது காலில் உள்ள ஈரம் காய்ந்து, தடித்த தோலைத் தாண்டிதான் நெருப்பால் காயத்தை ஏற்படுத்த முடியும்.

அதனால் தீ மிதிப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் வேகமாக ஓடிச் சென்றுவிடுவார்கள். இதன் காரணமாகவே அவர்களுக்குத் தீக்காயம் ஏற்படுவதில்லை. எங்கள் பாட்டி விறகு அடுப்பில் சமைக்கும்போது, கங்குகளைக் கையால் எடுத்து தூக்கிப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். தடித்த தோலும் வேகமான செயல்பாடும் காயம் இன்றி தப்ப உதவுகின்றன. உலோகங்களைப்போல் மரக்கட்டைகள் சிறந்த வெப்பக்கடத்திகள் அல்ல, அகல்யா தேவி.

பரோட்டா என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் எங்கள் ஊர் பொரித்த பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். உனக்குப் பரோட்டா பிடிக்குமா, டிங்கு?

– என். ராமமூர்த்தி, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

பரோட்டாவை யாருக்குத்தான் பிடிக்காது, ராமமூர்த்தி. எண்ணெய் ஊற்றிப் பிசைந்து, எண்ணெயில் பொரிப்பதால் சுவை அதிகமாக இருக்கும். விருதுநகர் பொரித்த பரோட்டாவை நான் விருதுநகரில் சாப்பிட்டதில்லை. வேறு ஊர்களில் சுவைத்திருக்கிறேன். பரோட்டா மைதா மாவில் செய்யப்படுகிறது. மைதா எப்படி உருவாகிறது என்று நிதினுக்குச் சொல்லியிருக்கிறேன், பாருங்கள். எப்போதாவது பரோட்டா சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் அஜீரணம் உட்பட பல உடல் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x