Published : 14 Oct 2018 09:20 AM
Last Updated : 14 Oct 2018 09:20 AM

கற்பிதமல்ல பெருமிதம் 27: வசைபாடுவதும் வன்முறையே

பேருந்துப் பயணம் முழுவதும் லலிதாவால் பொங்கிவரும் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. எப்படி இந்த மாதிரி வசைச் சொற்களை குமார் சரளமாகப் பயன்படுத்துகிறான்? திருமணமான இரண்டு மாதங்களில் குமாருக்கும் லலிதாவுக்கும் சண்டை வந்தபோது குமார் ஒரு கட்டத்தில் "அறிவு இருக்காடி, ******** வாயை மூடு" என்றான் .

லலிதா விக்கித்துப்போனாள். அவளை அதுவரை யாரும் இவ்வளவு மோசமாகத் திட்டியது கிடையாது. மேற்கொண்டு பேசாமல் மௌனத்தில் உறைந்துபோனாள்.

அதற்குப் பிறகு எப்போது சண்டை வந்தாலும், சண்டைக்கான காரணத்தில் யார் பக்கம் நியாயம் இருந்தாலும் குமாருக்குச் சண்டையை முடித்துவைக்கும் வழி தெரிந்துவிட்டது.

கெட்ட வார்த்தைகளைப் பேசினால் லலிதாவை மேற்கொண்டு பேசவிடாமல் செய்துவிட முடியும்.

பாலின பேதம் இல்லை

லலிதா குடும்பத்தில் அண்ணணோ அப்பாவோ இப்படிப் பேசியதில்லை. அலுவலகத் தோழிகள் சிலரிடமும் கல்லூரித் தோழிகள் சிலரிடமும் தன் கணவன் வசைச் சொற்களைப் பயன்படுத்தியதைச் சொன்னாள். பொதுவாகப் பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் வசைச் சொற்களை பயன்படுத்துகிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

கடந்த வாரம் தெருக்குழாயைக் கடக்கும் வரை ஆண்கள் மட்டும்தான் வசைச் சொற்களைப் பேசுவார்கள் என்று லலிதாவும் நினைத்திருந்தாள்.

பக்கத்து வீட்டில் வேலை செய்யும் சரோஜா, குழாயடியில் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். திடீரென்று சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளால் எதிரே இருந்தவர்களை வசைபாடினாள். அந்தப் பேச்சுக்குப் பயந்து அவள் அந்த இடத்தை விட்டுப் போய்த் தொலைந்தால் போதும் என்று மற்றவர்கள் முணுமுணுத்தபடி அவளைத் தண்ணீர் பிடிக்க விட்டார்கள்.

பெண்களை மையப்படுத்திய வசை

இரண்டு நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் சென்றபோது, கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வந்தார்கள். பேச்சில் கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பயன்படுத்தினார்கள். லலிதாவுக்கு ஏன் இப்படிப் பலரும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஆண்களும் பெண்களும் சண்டையில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த தாயை, சகோதரியைக் கேவலப்படுத்தும் வார்த்தை களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த வார்த்தைகள் எதிராளியைக் காயப்படுத்தும் என்று தெரிந்தே பயன்படுத்துகிறார்கள்.

கீழ்த்தட்டு மக்கள் மட்டும்தான் இப்படி வசைச் சொற்களை பயன்படுத்துவதாகப் பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல.

என் தோழி ஒருத்தி பகிர்ந்துகொண்டது இது. அவள் காதல் திருமணம் செய்துகொண்டவள். அவள் கணவர் விளையாட்டாகவும், சில நேரம் கோபமாகவும் வசைச் சொற்களைப் பயன்படுத்துவாராம். சண்டை இல்லாத ஒரு தருணத்தில், என் தோழி தன் கணவரிடம் ஏன் இப்படி வசைச் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருக்கிறாள்.

வேறு யாரிடம் நான் இப்படிப் பேச முடியும்? உன்னுடன் மட்டும்தானே நான் இயல்பாக, என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்றிருக்கிறார் அவள் கணவர். மேற்பார்வைக்கு இது உறவின் அன்னியோன்யம் என்று படலாம். ஆனால், இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது தவறு என நாம் ஏன் உணர்வதில்லை?

இதேபோல் படித்த, ஆங்கில அறிவுடைய பலரும் ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். தாய்மொழியில் உணர்வுபூர்வமாகத் திட்டும் போது, நமக்குச் சுரீரென்று உரைப்பதுபோல் இந்த ஆங்கில வார்த்தைகள் உரைப்பதில்லை. பல வார்த்தைகள் அர்த்தம் புரியாததால்கூட அப்படி இருக்கலாம்.

ஏன் வசைச் சொற்களைப் பேசுகிறோம்?

இது ஒருவர் மேல் மற்றவர் செலுத்தும் வன்முறை. அதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சி. இயலாமை காரணமாகவும் இது நிகழலாம். பொதுவாகப் பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களே அதிகம் வசைச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய கோபத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. பொதுவாகப் பல பெண்களும் அதிக கோபம் வரும்போது அழுவார்கள். இயலாமையால் வரும் கோபம் தன்னிரக்கத்தில் போய் முடிகிறது. அழுவதால் கோப உணர்வு வலுவிழந்துவிடுகிறது. சிறிது நேரம் அழுது புலம்பிவிட்டுப் பின் தங்களைத் தேற்றிக்கொள்கிறார்கள் பெண்கள்.

ஆனால், நம் சமூகம் ஆண்களின் அழுகையைக் கட்டுப்படுத்துகிறது. அழும் சிறுவனைப் பார்த்து பொம்பள மாதிரி அழாதே என்கிறார்கள். அடக்கப்படும் உணர்வும் மன அழுத்தமும் எங்கோ ஓரிடத்தில் வெடிக்கின்றன.

நச்சுச் சங்கிலி

கோபமாக இருக்கும்போது, உரக்கப் பேசுவதன் மூலம் எந்த விஷயத்தையும் தீர்க்க முடியாது. ஆத்திரமான வசைச் சொற்களால் வாயை அடக்கிவிட்டதாக நினைக்கலாம். ஆனால், அவர்களுக்குள் உங்கள் மீதான பிரியத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும். உங்களைப் பிடிக்காமல் போக வைக்கும். எதையும் உங்களிடம் வெளிப்படையாகப் பேசும் தளத்தில் கவனமாக இயங்கச் சொல்லும்.

இந்த வசைச் சொற்களை நீங்கள் சொல்பவராக இல்லாமல், கேட்டுக் கொள்பவராக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு முறையும் யாரையாவது திட்டுவதற்கு முன் அவர்கள் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். இதைப் பயிற்சி செய்ய சுலபமான வழி, நீங்கள் யாரிடமாவது திட்டு வாங்கிய தருணத்தைத் திரும்ப நினைவுகூர்வது. அந்தத் தருணத்தில் நீங்கள் குன்றிப் போகவில்லையா? உங்கள் தன்மானம் பாதிக்கப்படவில்லையா? அப்புறம் ஏன் அந்த மாதிரியான உணர்வை நீங்கள் வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்?

பொதுவாக எதிர்மறை உணர்வுகள் (கோபம், திட்டுதல், ஆத்திரம், எரிச்சல்) நச்சுச் சங்கிலி போன்றது. யாரிடமிருந்தாவது எதிர்மறை உணர்வைப் பெறுபவர், அதைத் தன்னைவிட அதிகாரத்தில் கீழாக உள்ள ஒருவர் மேல் பயன்படுத்துவார். அப்போதுதான் அவர் தன் தன்மானத்தைத் திரும்ப மீட்டெடுப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

கணவன், மனைவியைத் திட்டினால் மனைவி போகிற போக்கில் அமைதியாக டி.வி. பார்க்கும் குழந்தை மேல் பாய்வார். டி.வி.யை அணைத்துவிட்டுப் போகும் குழந்தை தன்னைவிடச் சிறிய குழந்தையை நாய் அல்லது பூனைபோல் சீண்டும்.

திடப்படுத்துவதும் தீர்வே

இந்த நச்சுச் சங்கிலியை நமக்குள்ளே அறுத்துவிட வேண்டும். மற்றவர்களின் வன்முறையான வசைச் சொற்களைக் கேட்கும் இடத்தில் இருப்பவரா நீங்கள்? உங்களை அந்தச் சொற்கள் பாதிக்காத மனநிலையைப் பயிற்சி செய்துகொள்ளுங்கள்.

அவர்களுடைய திட்டால், நீங்கள் பாதிக்கப் படவில்லை என்றால் அவர்கள் திட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மாட்டார்கள்.

நம் கருத்து பேதங்களைப் பேசித் தீர்க்கலாம். ஆனால், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதைச் செய்ய முடியாது. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, பிறகு சமாதானமாக இருக்கும் தருணத்தில் உங்கள் தரப்பு நியாயத்தைப் பேசுங்கள்.

அப்படிப் பேச முடியாத உறவில் அவர்களது வக்கிரம் உங்களைப் பாதிக்காதபடி மனத்தைப் பண்படுத்திக்கொள்ளுங்கள். விலக்க முடிந்த உறவென்றால் விலகிச் செல்லுங்கள்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x