Published : 01 Oct 2018 11:12 AM
Last Updated : 01 Oct 2018 11:12 AM

யெஸ் வங்கி சிஇஓவாக நீடிப்பாரா ராணா கபூர்?

இந்திய வங்கித் துறையில் இதுவரை இல்லாத நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது யெஸ் வங்கி சிஇஓ நியமன விவகாரத்தில். யெஸ் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராணா கபூரின் பதவி  2019-ம் ஆண்டு  ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக் காலம்  ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஏற்கெனவே வங்கி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனவரி வரை பதவி நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கி தொடங்கப்பட்ட 2004-ம் ஆண்டிலிருந்தே அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் ராணா கபூர் இருந்து வருகிறார். பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், அவரது பதவியை நீட்டிப்பதற்கான கோரிக்கையை ஜூன் மாதமே வங்கி தொடங்கிவிட்டது.

2021 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவரது பதவியை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி,  2019 ஜனவரி 31 வரை அனுமதிப்பதாக கூறியது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பின்னர், கடந்த வாரத்தில் ஒரே நாளில் பங்குவர்த்தகத்தில் இதன் பங்குகள் மளமளவென சரிவைக் கண்டன. ஒரே நாளில் 30 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. இந்த நிலையில் யெஸ் வங்கி மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்துள்ளது.

அதில் கபூரின் பதவிக் காலத்தை மேலும் எட்டு மாதங்களுக்கேனும் நீட்டிக்க கேட்டுள்ளது. 2019 ஏப்ரல் 30 வரை பதவி நீட்டிப்பு கேட்க இயக்குநர் குழு ஆலோசனை செய்திருந்ததாக தகவல் வெளியானது.  அதாவது நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இறுதி செய்யும் வரை அவர் பதவியில் இருக்க  வேண்டும் என்பது வங்கியின் விருப்பமாக இருந்தது.

பின்னர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30 வரையாவது நீட்டிக்க வேண்டும் என கேட்டுள்ளது. அதாவது ஆண்டு பொதுக்குழு கூட்ட நடைமுறைகள் முடியும் வரை அனுமதிக்க வேண்டும் என்று பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தற்போது குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அவரது பதவி நீட்டிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் புதியவர்களை தேடவில்லை. அதனால் ஜனவரி மாதத்துக்குள் அவரது பதவிக்கு பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பது சவாலானது என்று வங்கி கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூடிய வங்கியின் இயக்குநர் குழு புதிய நபரை தேடும் பணியையும் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட மூன்று நபர்கள், இயக்குநர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் வெளியிலிருந்து இரண்டு நபர்கள் என பரிந்துரை பட்டியலில் உள்ளனர். புதிய நபரை தேர்வு செய்ய சிறப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தற்போது நிறுவனத்தின் மூத்த தலைவர்களாக உள்ள ரஜத் மங்கா, பிராளே மண்டல் ஆகிய இருவரையும் செயல் இயக்குநர்களாக உயர்த்தியுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அடுத்ததாக ராணா கபூரின் இடத்துக்கு இருவரில் ஒருவர் வருவது சாத்தியமாகும்.

கபூர் பொறுப்பிலிருந்து விலகினாலும் நியமன இயக்குநராக தொடர்வார் என்றும், தொடர்ந்து வங்கிக்கான ஆலோசனை அளிப்பார் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கெனவே வங்கியின் நிறுவனர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மீண்டெழுந்த வங்கிக்கு மீண்டும் ஒரு இக்கட்டான தருணம்தான் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x