அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்

அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்
Updated on
1 min read

காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.

இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.

அச்சான முதல் நூல்

முதல் தமிழ்ப் புத்தகம் 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.அவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய கிறிஸ்தவப் பெயர்களைத் தவிர மற்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.

இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.

அச்சில் மூத்தது

மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷியா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாடுகளில் முதன்முதலாக அச்சிட்ட நூல்களின் காலத்தை விட முந்தையதாக இருக்கிறது.

1865-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான “தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் அச்சுப்

பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை “1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்” எனக் கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in