Published : 24 Oct 2018 11:37 AM
Last Updated : 24 Oct 2018 11:37 AM

டிங்குவிடம் கேளுங்கள்: இலைகள் மஞ்சளாவது ஏன்?

ஒரு நாள் குளிக்கவில்லை என்றாலும் உடலில் அழுக்கு வந்துவிடுகிறதே, எப்படி டிங்கு?

–மா. பாலகுரு, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நம் உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது. அந்த வியர்வையில் உப்பு போன்ற தாதுக்களும் வெளியேறுகின்றன. தோலில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கிறது. நாம் வெளியே செல்லும்போது காற்றிலுள்ள தூசி உடலில் படுகிறது. இப்படி எல்லாம் சேர்ந்து அழுக்காக மாறிவிடுகின்றன.

ஒரு நாள் குளிக்கா விட்டாலும் இந்த அழுக்கு உருவாகி விடுகிறது. துர்நாற்றமும் வருகிறது. அதனால்தான் தினமும் குளிப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம், பாலகுரு. பல நாட்கள் குளிக்காவிட்டாலோ அல்லது நன்றாக அழுக்குத் தேய்த்துக் குளிக்காவிட்டாலோ அழுக்கிலிருந்து பேன் போன்ற ஒட்டுண்ணி உருவாகிவிடும். அதனால் நன்றாகத் தேய்த்துக் குளித்துவிடுங்கள்.

சென்ற ஆண்டு ஒரு கேள்விக்குப் பட்டாசு வெடிப்பதில்லை என்று சொல்லியிருந்தாய். உண்மையைச் சொல் டிங்கு, பயத்தால்தானே நீ பட்டாசு வெடிப்பதில்லை?

–சி. கமலேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை.

ஐயோ… எப்படித்தான் கண்டுபிடித்தீர்கள் என்றே தெரியவில்லை, கமலேஷ். சின்ன வயதிலிருந்து இப்போதுவரை வெடிச் சத்தம் என்றாலே எனக்குப் பயம்தான். அதனால் பட்டாசுகள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, சுற்றுச்சூழலை நம் பங்குக்கு மாசுபடுத்த வேண்டாம் என்பதால் எங்கள் குடும்பமே பட்டாசு வெடிப்பதைக் கைவிட்டுவிட்டது. இப்போதும் தீபாவளி நேரத்தில் போர்க்களத்தில் நடந்து செல்வதுபோல் சாலைகளில் பயந்துகொண்டேதான் செல்வேன்.

நவராத்தியின்போது ஏன் கொலு வைக்கிறோம், டிங்கு?

–ரா. சிநேகபிரியா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த மூன்று அரக்கர்களைப் பார்வதி, லஷ்மி, சரஸ்வதி ஆகிய மூவரும் வதம் செய்து, மக்களைக் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொலு வைக்கப்படுகிறது. இந்தக் கொலுவின்போது அம்மன்கள் ஒவ்வோர் இல்லத்துக்கும் வருவதாக நம்பப்படுகிறது.

முதல் படியில் ஓரறிவு உயிர்களான செடி, கொடி, பூங்கா, இரண்டாம் படியில் நத்தை, சங்கு போன்ற ஈரறிவு உயிரினங்கள், கரையான், எறும்பு போன்ற மூவறிவு உயிரினங்களை மூன்றாம் படியிலும், நான்கறிவு உயிரினங்களான பறவைகளை நான்காம் படியிலும், பசு, நாய், சிங்கம் போன்ற ஐந்தறிவு உயிரினங்களை ஐந்தாம் படியிலும், ஆறறிவு உயிரினங்களான மனிதர்களை ஆறாம் படியிலும், ஏழறிவு பெற்ற ஞானிகள், மகான்களை ஏழாவது படியிலும், தெய்வ அவதாரங்களை எட்டாம் படியிலும் பூரண கும்பத்தை ஒன்பதாம் படியிலும் வைத்து அலங்கரிக்கிறார்கள், சிநேகபிரியா.

இப்போது அவரவருக்குப் பிடித்தமான பொம்மைகளை வைத்து கொலு வைக்கும் வழக்கம் வந்துவிட்டது. சிலர் ‘தீம்’ கொலு என்றுகூட வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் சில இலைகள் மட்டும் ஏன் மஞ்சளாக மாறுகின்றன, டிங்கு?

–பி. நிதின், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இலைகள் மஞ்சளாக மாறினால் செடிக்கு ஏதோ பிரச்சினை என்று அர்த்தம், நிதின். செடிக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினாலும் இலைகள் மஞ்சளாகும். குறைவாகத் தண்ணீர் ஊற்றினாலும் இலைகள் மஞ்சளாகும். செடிக்கு அருகில் உள்ள மண்ணில் விரலால் ஓர் அங்குலத்துக்குக் குத்துங்கள். மண் காய்ந்திருந்தால் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என்று அர்த்தம். ஈரமாக இருந்தால் தண்ணீர் அதிகமாக ஊற்றுகிறீர்கள் என்று அர்த்தம். இதைக் கவனித்து தண்ணீர்ப் பிரச்சினையைச் சரி செய்யுங்கள். அப்படியும் இலைகள் மஞ்சளானால் நோய்த் தொற்றாகவும் இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x