Last Updated : 07 Oct, 2018 03:04 PM

 

Published : 07 Oct 2018 03:04 PM
Last Updated : 07 Oct 2018 03:04 PM

முகங்கள்: எங்கும் ஒலிக்கும் நாட்டுப்புறக் குரல்

செம்மொழியான தமிழ் மொழியின் புகழைச் சொல்லும் பாடலில் தனித்து ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் சின்னப்பொண்ணு. ராமநாதபுரம் மாவட்டம் சூராணம் என்ற கிராமம்தான் இவரது சொந்த ஊர். அப்பா, நாகஸ்வரக் கலைஞர். ஏழு குழந்தைகளைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக  இருந்த நிலையில் சின்னப்பொண்ணு மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.

“எட்டு வயசுலேயே குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டி எங்க அத்தைகூட வயல்வேலைக்குப் போவேன். வயக்காட்டுல வேலை செய்யுற பெண்கள் தங்களோட மனச்சுமையையும் மகிழ்ச்சியையும் பாட்டா பாடுவாங்க. இப்படித்தான் எனக்குப் பாட்டு அறிமுகமாச்சி” என்கிறார் சின்னப்பொண்ணு.

வயக்காட்டில் பாடுவதோடு ஒவ்வொரு வாரமும் தேவாலயத்திலும் பாடுவார். “நான் பாடுறதைப் பார்த்துவந்த பங்குத் தந்தை பாக்கியநாதன், எனக்கு ஊக்கமளித்தார். அப்போ எங்க ஊருக்கு வந்த இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பிரபல பின்னணிப் பாடகி சசிரேகாவுடன் இணைந்து ‘சூரியத் தோரணங்கள்’ என்ற சமூக விழிப்புணர்வு ஆல்பத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.  

அப்புறம்  ஒருநாள் தேவாலயத் திருவிழாவில் நடந்த கிராமிய இசை நிகழ்ச்சிக்காக நாட்டுப்புறக் கலைஞர்களின் ஆசானாகத் திகழ்ந்த அழகர்சாமி வாத்தியார் வந்திருந்தார். அப்ப எனக்கு 13 வயசு. அவர் மூலமாதான் கச்சேரியில பாடுற வாய்ப்பு கிடைச்சது. முதல் கச்சேரி மதுரை அரசரடியில நடந்தது” என்று சொல்லும் சின்னப்பொண்ணுவின் குரல் அதன் பிறகு   தமிழகமெங்கும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

தான் குருவாகக் கருதும் கோட்டைச்சாமி, இளையான்குடி அழகர்சாமி, பச்சேரி அழகர்சாமி, மேடையேறிப் பாட முக்கியக் காரணமாக இருந்த பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார் சின்னப்பொண்ணு. தன் அம்மா, அக்கா, அத்தை, கொல்லங்குடி கருப்பாயி ஆகியோரும் தன் இசை ஆர்வத்துக்குக் காரணமானவர்கள் என்கிறார் அவர்.

‘பூ முடிச்சு பொன்னகையும் பொட்டும் வச்சு கல்யாணம் முடிச்சு வச்ச யம்மா... நான் கண் கலங்கித் திரும்புறேனே அம்மா..." என வரதட்சணைக் கொடுமை குறித்து இவர் பாடிய பாடலைக் கேட்டுக் கண்ணீர் சிந்தாத பெண்கள் குறைவு. இவரது குரலில் இழையோடும் உணர்வுபூர்வமான ‘பாவம்’தான் அந்தப் பாடல்களில் மக்கள் தங்கள் மனத்தைப் பறிகொடுக்கக் காரணம். அதற்குத் தன் ஏழ்மை நிலையே காரணம் என்கிறார் அவர்.

சின்னப்பொண்ணு பாடிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொடர்ந்து கவனித்துவந்த கவிஞர் அறிவுமதி மூலமாக இவருக்குத் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “பொதுவா என்னுடைய நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு அறிவுமதி ஐயா பாராட்டுவாங்க. ஒருநாள் எனக்கு போன் செய்து ஒரு தாலாட்டு பாடும்மானு கேட்டாரு.

அப்புறம் ஒரு வாழ்த்துப் பாடலையும் பாடச் சொன்னாரு. நானும் அவரு கேட்ட எல்லாப் பாட்டையும் பாடினேன். இதுல என்ன ஆச்சரியம்னா நான் பாடிய பாட்டை இசையமைப்பாளர் வித்யாசாகர் ஸ்பீக்கர்ல கேட்டுக்கிட்டிருந்திருக்கிறார். ஆனா அந்த விஷயம் எனக்கு அப்போ தெரியாது. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு என்னை சென்னைக்கு வரச்சொன்னாங்க. அப்போதான் நான் அன்னைக்குப் பாடியதை வித்யாசாகர் சார் கேட்டாருன்னு தெரியும். ரெக்கார்டிங் அறையில என்னை ஒரு நலுங்குப் பாட்டு பாடச் சொன்னார். பாடினேன்.

முதல் டேக்கிலேயே ஓகே சொல்லிட்டாங்க. அப்போ அங்கே வந்த ரஜினி சார்,  இதைக் கேட்டுட்டு என்னைப் பாராட்டினார். நான் பாடிய நலுங்குப் பாட்டு ‘சந்திரமுகி’  படத்துக்குன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது” என்று சொல்லும்போது அந்த நாளின் மகிழ்ச்சிப் பூரிப்பைக் காண முடிகிறது.

அதன் பிறகு அவர் பாடிய ‘நாக்க முக்கா’ பாடலின் வெற்றியைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லாத் தரப்பு மக்களையும் வயது வித்தியாசமில்லாமல் ஆட்டம்போடவைத்த பாடல் அது. “என் வாழ்வில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத பாராட்டுன்னா அது ‘மயிலு’ படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைச்சதுதான். நான் பாடி முடிச்ச பிறகு ராஜா சார் என்னைப் பாராட்டினது ஆஸ்கர் அவார்டு வாங்கியதுபோல இருந்தது” என்று சின்னப்பொண்ணு புன்னகைக்கிறார்.

கிராமத்து மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் குரல், தற்போது கடல் கடந்து வெளிநாட்டு மேடைகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். “திரைத் துறை பக்கம் சென்ற என்னைப் போன்றவர்கள் சிலரின் வாழ்வு மேம்பட்டுள்ளது உண்மைதான். இது போன்ற வாய்ப்புத் தளத்தை அதிகரிக்க வேண்டும்.

அப்போதுதான் நிறைய திறமையான கலைஞர்கள் வெள்ளித்திரைக்கு வர முடியும். நாட்டுப்புறக் கலை வழியே வாழ்வியலைச் சொன்ன சமூகம் நாம்.  முன்பெல்லாம் நிறைய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் நடக்கும். இப்போ எல்லாம் ஆர்கெஸ்ட்ராவா மாறிடுச்சு. நம்ம பாரம்பரிய இசையை அழியவிடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதைப் பரப்புவது நம்ம கடமை.

பல தடைகள், தோல்விகளைச் சந்திச்சுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். கலைஞர்கள், வலிகளால் வளர்த்தெடுக்கப்பட்டவங்க. அந்த வலிகளே எங்களை வலிமைப்படுத்தும்” என்று உறுதியும் வைராக்கியமும் நிறைந்த குரலில் சொல்கிறார் சின்னப்பொண்ணு.படம்: சி. கதிரவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x