Published : 31 Oct 2018 10:32 AM
Last Updated : 31 Oct 2018 10:32 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 07: பேய்த் தனிமம்!

பியூரெட்: பட்டாசு வெடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன் பிப்.

பிப்பெட்: ஏன் பியூ? போன வாரம் என்கிட்ட அதுக்காக பெருசா சண்டை போட்டியே?

பியூ.: சண்டை போடல, எனக்குப் பிடிச்சிருக்குங்கறதைச் சொன்னேன். பட்டாசு வெடிக்கிறதால காத்து மாசுபடுது, காசும் கரியாத்தானே போகுது.

பிப்.: பரவாயில்லையே, நான் சொன்னதோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டியே.

பியூ.: அது மட்டுமில்ல, பட்டாசு உற்பத்தி பண்றதுக்காக குறைஞ்ச கூலிக்கு, பாதுகாப்பு வசதியில்லாம வேலை பார்க்கும் மக்களில் நிறைய பேர் வருஷந்தோறும் பலியாகிக்கிட்டே வர்றாங்களே. மத்தவங்களோட உயிரைப் பறிக்குற ஒரு விஷயத்தை நாம ஆதரிக்கலாமா?

பிப்.: நிச்சயமா கூடாது. அதேநேரம் மக்கள் கூட்டமா பட்டாசு வெடிக்கிற இடத்துல போய் கொஞ்ச நேரம் பார்த்துட்டு வரலாமே. வெளிநாடுகள்ல இப்படித்தான் செய்றாங்க.

பியூ.: சரி, அப்படியே செய்றேன்.

பிப்.: நல்லது, இந்த வாரம் எதைப் பத்தி சொல்லப் போறேன்னு சொல்லவே இல்லையே?

பியூ.: பட்டாசு மட்டுமில்லாம தீக்குச்சியிலும் சேர்க்குற வேதிப்பொருள் ஒன்றைப் பற்றித்தான் சொல்லப் போறேன்.

பிப்.: நீ சொல்லப் போறது பாஸ்பரஸ்தானே?

பியூ.: பரவாயில்லையே, உனக்கும் கொஞ்சம் வேதியியல் தெரிஞ்சிருக்கே. பாஸ்பரஸ் மேல தீப்பற்ற வைக்க வேண்டிய அவசியமே இல்லை. சும்மாவே காற்றோட வினைபுரிந்து அது எரிவதன் காரணமாகத்தான் பட்டாசு, வெடிபொருள்கள்ல பாஸ்பரஸைச் சேர்க்குறாங்க. இப்படிக் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் அது வினைபுரியுறபோது, மங்கலான ஒளியை வெளியிடுது.

பிப்.: அப்ப இந்த வாரமும் பட்டாசுல, அது எப்படிப் பயன்படுத்துன்னுதான் பேசப் போறோமா?

பியூ.: இல்ல, மனுசங்க உயிர் வாழ்றதுக்கே பாஸ்பரஸ் ரொம்ப அவசியம். அதாவது, அதன் ஆக்சிஜனேற்றம் அடைந்த பாஸ்பேட் வடிவம். உயிரினங்களோட செல், நரம்புத் திசு, எலும்புகளில் இருக்கு. மனுசங்களோட பற்களின் எனாமல் எனப்படும் மேற்பூச்சிலும் எலும்பிலும் அதிகம் இருப்பது ஹைட்ராக்சிஅபடைட். இதுவும் ஒரு வகை பாஸ்பேட். எல்லாத்துக்கும் மேல மனித உடலில் உள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., பாஸ்போலிப்பிட்ஸ் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பொருட்களுக்கு பாஸ்பரஸ் ரொம்ப அவசியம்.

பிப்.: பாஸ்பரஸ் இல்லாம உலகத்துல யாருமே வாழ முடியாது போலிருக்கே.

பியூ.: ஆமா, செத்ததுக்கு அப்புறமும்கூட இந்த பாஸ்பரஸ் மனுசங்களைப் பயமுறுத்துது. இடுகாடுகளில் இரவில் பேய், பிசாசைப் பார்த்ததா சிலர் சொல்லுறதைக் கேள்விப்பட்டிருப்பியே?

பிப்.: அப்ப பேய், பிசாசு எல்லாம் உண்மை இல்லையா?

பியூ.: அதெல்லாம் சுத்தக் கதை. அவங்க பார்த்தது விநோத வெளிச்சம். அது எதனால் ஏற்பட்டுச்சு? அது ஏன் இரவில் மட்டுமே வருது அப்படீங்கறதையெல்லாம் யோசிக்கணும்.

பிப்.: நீ யோசிச்சியா பியூ?

பியூ.: இடுகாட்டில் புதைக்கப்பட்ட மனித உடல் சிதையும்போது, அதில் இருக்கும் வெள்ளை பாஸ்பரஸ் பூமியில் சேகரமாகுது. அப்புறம் இரவில் வாயுவா அது வெளியேறும்போது, வெளிச்சம் தோணுது. அதுதான் மனுசங்களைப் பயமுறுத்தியிருக்கு.

பிப்.: ஓ! இதுதானா விஷயம்.

பியூ.: பாஸ்பரஸ் எரியுறதுக்கு அல்லது வெளிச்சத்தை உருவாக்குவதற்கு, காற்றுடன் கலந்தாலே போதும்னு ஏற்கெனவே சொல்லியிருந்தேன். மண்ணுக்குள் இருக்கும் பாஸ்பரஸ் மேலிருக்கும் காற்றோடு வினைபுரியும்போதுதான் அந்த வெளிச்சம் உருவாகுது. இதனால 'பேய்த் தனிமம்'னு அதைச் சொல்லியிருக்காங்க.

பிப்.: இப்ப யாரும் அப்படிச் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

பியூ.: ஆரம்ப காலத்தில் மனித எலும்புச் சாம்பல், சிறுநீரில் இருந்துகூட பாஸ்பேட்டுகள் பெறப்பட்டன.

பிப்.: அதை வெச்சு என்ன செஞ்சாங்க?

பியூ.: பயிர் வளர்ச்சிக்கு பாஸ்பேட் அவசியம். பாஸ்பேட் உரத்தைப் பயிர்களுக்குப் போடுறோம். அது காலம்காலமா நாம பயன்படுத்திட்டு வந்த மணிச்சத்துதான். இதெல்லாமே வெள்ளை பாஸ்பரஸ் நமக்கு அளிக்கும் முக்கியப் பயன்கள்.

பிப்.: அப்ப இன்னொரு பாஸ்பரஸ் இருக்கா?

பியூ.: ஆமா, சிவப்பு பாஸ்பரஸ்.

பிப்.: தீப்பெட்டிகளில் தீக்குச்சியை உரசி தீயை உருவாக்கும் பக்கவாட்டுப் பகுதியைப் பார்த்திருப்ப. இந்தப் பகுதியை உருவாக்க சிவப்பு பாஸ்பரஸ் பயன்படுது.

பியூ.: தீக்குச்சி முனையில் பாஸ்பரஸ் தடவும் முறையை சார்லஸ் சாரியா 1830-ல் கண்டறிந்தார். தீக்குச்சி தயாரிப்பில் தொடக்கத்தில் வெள்ளை பாஸ்பரஸைத்தான் பயன்படுத்தினாங்க. உற்பத்தி செஞ்சப்ப பணியாளர்களுக்கு அது நஞ்சாக மாறியது, சேகரிச்சு வைக்கிறது சிக்கலாக இருந்தது, எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் இருந்ததால் 1906-ல் அதைத் தடை செஞ்சுட்டாங்க.

அப்புறம் எங்கே உரசினாலும் தீப்பற்றக்கூடிய தீக்குச்சிகளுக்குப் பதிலாக, பாதுகாப்பான தீக்குச்சிகள் (Safety matches) உருவாக்கப்பட்டன. வெள்ளை பாஸ்பரஸால் தயாரிக்கப்பட்ட தீக்குச்சியை எங்கே உரசினாலும் தீப்பிடிக்கும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தீக்குச்சிகளில் பாஸ்பரஸ் செஸ்குய்சல்பைடு பயன்படுத்தப்பட்டது. இந்தத் தீக்குச்சியைச் சிவப்புப் பாஸ்பரஸ் தடவப்பட்ட சிறப்புப் பட்டையில் உரசினா மட்டுமே தீப்பிடிக்கும்.

பிப்.: அப்ப வெள்ளைப் பாஸ்பரஸ் இருந்தா எல்லா இடத்திலும் தீப்பிடிக்கும். சிவப்புப் பாஸ்பரஸ் இருந்தா பாதுகாப்பா தீயைப் பற்ற வைக்கலாம், அதுதான் பாதுகாப்பு.  நல்லது பார்ப்போம்.

 

 

இந்த வாரத் தனிமம் - பாஸ்பரஸ்

Pjpg100 

அணு எண்: 15

குறியீடு: P

பிரித்தெடுக்கப்பட்ட ஆண்டு: 1669

பாஸ்பரஸ் எளிதில் வினைபுரியும் தனிமம் என்பதால், அது தனியாகக் கிடைப்பதில்லை. பல்வேறு கனிமங்களில் கலந்திருக்கிறது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் ஒரு கிலோ எடுத்தால், அதில் ஒரு கிராம் பாஸ்பரஸ் இருக்கிறது. பாஸ்பரஸ் கொண்ட கனிமங்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து பாஸ்பேட் பாறைகளாகவே கிடைக்கின்றன.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x