Published : 23 Oct 2018 11:40 AM
Last Updated : 23 Oct 2018 11:40 AM

அந்த நாள் 06: சிலைகள் சொல்லும் பெருங்கதைகள்

அன்புள்ள குழலி,

வணக்கம். ஒரு புதுத் திட்டத்தை ஆரம்பிச்சிருக்கோம். அதனால, இப்போ வேலை கொஞ்சம் அதிகம். கிடைச்ச இடைவெளில உன்னோட கடிதத்தைப் படிச்சேன். சிந்துவெளி உணவு, உடை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறம் கடைசியா, பெண்கள் அலங்காரம் செய்யுறதுல மட்டும்தான் ஆர்வமா இருந்திருப்பாங்கன்னு நான் நம்புவேன்னு நீ தப்பா நினைச்சிட்ட. சிந்துவெளி பத்தி நீ சொல்றதையெல்லாம் படிக்கும்போது, அந்த நாகரிகமும் பண்பாடும் ரொம்பவே முன்னேறியிருந்தது தெரியுது.

இவ்வளவு தெளிவாக நகரங்கள் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருப்பது ஆச்சரியம் தருதுன்னா, அந்த நகரங்கள் சிறப்பா இயங்குறதுக்குத் தேவையான அடிப்படைச் சட்டங்களை மதிக்கிற மக்கள் வாழ்ந்திருப்பாங்க அப்படிங்கிறதுல சந்தேகமே இல்லை. நகரத்தைக் கட்டியதிலும் திறமையாக நிர்வகித்ததிலும் அரசோ மக்கள் குழுவோ இருந்திருக்கணும்னு எனக்குத் தோணுது. இதைப் பத்தி இன்னும் விரிவாகச் சொல்ல முடியுமா?

அப்புறம் பெண்களின் வாழ்க்கை அந்த நாகரிகத்துல எப்படி இருந்துச்சு? பெண்கள் எப்படி மதிக்கப்பட்டாங்கன்னும் எனக்கு நீ சொல்லணும். அதை நீ பெருசா மதிப்பேங்கிறது எனக்குத் தெரியும். இந்த இரண்டு விஷயங்களையும் கூடுதலா தெரிஞ்சுக்க விரும்பறேன்.

அன்புடன்,

செழியன்

 

அன்புள்ள செழியா,

உன் வேலைகள் நல்லா போயிட்டு இருக்கும்னு நம்பறேன். சிந்துவெளி பத்தி ஆர்வமா இன்னும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். நானும் அதைப் பத்தி விரிவா சொல்லணும்னு நினைச்சேன்.

சிந்துவெளி நகரங்கள் மேல், கீழ்னு இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருந்திருக்கின்றன. மேல் நகரம் மேற்குப் பகுதியிலும் கீழ் நகரம் கிழக்குப் பகுதியிலும் இருந்திருக்கு. நகரத்தின் ஒரு மூலையில் உயரமான பகுதில பெரிய கட்டிடம் ஒண்ணு இருந்திருக்கு. வரலாற்று ஆய்வாளர்கள் இதைக் கோட்டைனு சொல்றாங்க. இந்தப் பெரிய கோட்டைகள் ஒண்ணு தானிய சேமிப்புக் கிடங்குகளா இருந்திருக்கலாம். சிந்துவெளி மக்கள் வேளாண்மையில் சிறந்தவர்களா இருந்ததால, தானியங்களைச் சேர்த்து வைக்கும் கிடங்குபோல இந்தக் கட்டிடங்கள் பயன்பட்டிருக்கலாம். அதேநேரம், அது ஆட்சியாளர்களின் வீடா இருந்திருக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் நம்புறாங்க.

சிந்துவெளி நாகரிகத்தில் கோயில்களோ அரண்மனைகளோ இருந்தது மாதிரித் தெரியலை. அதே காலத்தி்ல் தழைத்த மெசபடோமிய/சுமேரிய, நைல் நதிக்கரை நாகரிகங்களில் கோயில்கள், மன்னர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், சிந்துவெளியில் கிரீடம் தரித்த மன்னன் இருந்ததற்கோ வாளுடன் தோன்றிய அரசன் இருந்ததற்கோ எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கலை. அதனால, கடவுளின் பெயரால் பூசாரிகள்தாம் ஆட்சியை நடத்தியிருக்கணும்னு ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறாங்க.

தலைமைப் பூசாரி

அதற்கும் ஏதாவது ஆதாரம் இருக்காங்கிற கேள்வி தோன்றது இயல்புதான். கண்டிப்பான உணர்ச்சியுடன் முகத்தை வைத்துக்கொண்டுள்ள ஒரு ஆண் சிலை கிடைச்சிருக்கு. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேலங்கியை அந்தச் சிலை அணிஞ்சிருக்கு. அதோட, அலங்கரிக்கப்பட்ட ஒரு தலைப்பட்டையை நெற்றியில் அவர் சூடியிருக்கார். இதையெல்லாம் வைச்சுப் பார்த்தா, அவரு முக்கியமான ஆளாத்தான் இருக்கணும். இவரை ‘தலைமை பூசாரி'னு சொல்றாங்க.

இவரு பூசாரின்னா, சிந்துவெளியில் எந்தக் கடவுள் வணங்கப்பட்டுச்சுனு அடுத்த கேள்வி வரலாம். களிமண்ணால் செய்யப்பட்ட, தலை பெரிதாக அலங்கரிக்கப்பட்ட, கழுத்தணி அணிந்த தாய் தெய்வச் சிலைகள் நிறைய அங்கே கிடைச்சிருக்கு. தாய் தெய்வ வழிபாடு பெருசா இருந்திருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு.

அதோட ஒரு சிந்துவெளி முத்திரையில கால்களைக் குறுக்கே மடிச்சு உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதர், எருமைக் கொம்புகளால் உருவாக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருக்கிறார். இந்தியப் பழங்குடி இனக் குழுமக்களில் சிலர், நடனமாடும்போது இதுபோன்ற கிரீடம் அணிஞ்சிருக்கிறதை இப்போதும் பார்க்கலாம்.

அதோட அந்த மனிதர் உயிரினங்கள் சூழவே காட்சி தருகிறார். இவர் உயிரினங்களின் தெய்வமான பசுபதியா இருக்கலாம்னு நினைக்கிறாங்க. இந்தத் தெய்வங்களையே சிந்துவெளி மக்கள் வணங்கியிருக்காங்க. இந்தத் தெய்வங்கள் இருந்த கோயில்களைப் பூசாரிகள் பராமரிச்சிருப்பாங்க. தலைமைப் பூசாரிகள் நகரத்தை நிர்வகி்ச்சிருப்பாங்க.

நடன மங்கை

அப்புறம் பெண்களைப் பற்றி நீ கேட்டிருந்தாய், இல்லையா. தாய் தெய்வங்கள் வணங்கப்பட்டிருப்பதால, சிந்துவெளி மக்கள் பெண்களை உயர்வாதான் மதிச்சிருப்பாங்க. அதோட ஒரு சுவாரசியமான உலோகப் பெண் சிலை தொல்லியல் ஆராய்ச்சில கிடைச்சிருக்கு. இளம்பெண் தோற்றம் கொண்ட அந்தச் சிலை, சின்னதுதான். அதற்கு ‘நடன மங்கை'னு பேர் வைச்சிருக்காங்க.

அந்தப் பெண்ணோட சுருட்டை முடி வலது தோளில் அழகாப் புரளுது. இடது கையில நிறைய வளையல்களை அணிஞ்சிருக்கா. நிறையன்னா, நிஜமாவே நிறையா. மணிக்கட்டிலிருந்து தோள்வரை வளையல்கள் நீள்கின்றன. கழுத்தோடு ஒட்டியது மாதிரி கழுத்தணியையும் அந்தப் பெண் அணிஞ்சிருக்கா.

ஒரு காலை லேசா மடக்கி வைச்ச மாதிரியும், இடுப்பில் ஒரு கையை வைச்சுக்கிட்டும் அந்தப் பெண் ரொம்ப ஒயிலா நிக்கிறா. அநேகமாக இசையின் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடுறதுக்குத் தயாராகிறது மாதிரி அந்தச் சிற்பம் இருக்கு. மோனலிசாவைப் போல ஒரு மென்புன்னகையும் அவளுடைய உதடுகள்ல உறைஞ்சிருக்கு. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வடிக்கப்பட்ட இதுபோன்ற பல சிலைகள், இப்படி நிறையக் கதைகளை நமக்குச் சொல்கின்றன.

அன்புடன்,

குழலி

எங்கே இருக்கின்றன?

பூசாரி/அரசர்: சவர்க்காரக் கல்லில் செதுக்கப்பட்ட அரையடி உயரமுள்ள இந்தச் சிலை மொஹஞ்சதாரோவில் 1927-ல் கிடைத்தது. தற்போது கராச்சி தேசிய அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை பாதுகாக்கப்படுகிறது.

நடன மங்கை: வெண்கலத்தால் செய்யப்பட்ட 10 செ.மீ. உயரம் கொண்ட இந்தச் சிலை, மொஹஞ்சதாரோவில் 1926-ல் கிடைத்தது. தற்போது புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை பாதுகாக்கப்படுகிறது.

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x