Last Updated : 04 Aug, 2018 06:31 PM

 

Published : 04 Aug 2018 06:31 PM
Last Updated : 04 Aug 2018 06:31 PM

ஆடும் களம் 15: தேசிய விளையாட்டின் சாதனை மகள்

அந்தச் சிறுமியின் அம்மாவுக்குத் தன் மகள் ஹாக்கியில் கோலோச்ச வேண்டும் என்பது தீராத ஆசை. ஆனால், எப்போதும் பரபரவென ஓடிக்கொண்டே, பந்தைத் துரத்திக்கொண்டே தனது மகள் ஓடுவதை அவர் விரும்பவில்லை. பாதுகாப்பாக ஹாக்கியை விளையாட வேண்டும் என்றும் அந்தச் சிறுமியின் அம்மா நினைத்தார். அதற்கு ஒரே வழி தன் மகளை கோல் கீப்பராக ஆக்குவதுதான் என்று முடிவெடுத்தார்.

அதன்படியே அந்தச் சிறுமியும் ஹாக்கி கோல் கீப்பராக உருவெடுத்தார். அவர், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றிக்கரமான கோல் கீப்பர்களில் ஒருவராக வலம்வந்த ஹெலன் மேரி.

கேரளத்தில் பிறந்த ஹெலன் மேரி, சிறு வயதிலேயே வீதியில் ஹாக்கி விளையாடத் தொடங்கிவிட்டார். பெரும்பாலும் சிறுவர்களுடன் சேர்ந்துதான் ஹாக்கி விளையாடினார். ஹாக்கி மீதான விருப்பமும் ஈர்ப்பும் அதைத் தொடர்ந்த கடின உழைப்பும் விரைவாகவே அவரைச் சிறந்த வீராங்கனையாக அடையாளம் காட்டியது.

கேரளத்தில் பிறந்திருந்தாலும், ஹெலனின் ஹாக்கி வாழ்க்கை பெங்களூருவில்தான் தொடங்கியது. விரைவில் அவருக்கு கர்நாடக ஹாக்கி அணியில் இடம் கிடைத்தது. அவரது உயரமும் பந்தைத் தடுக்கும் லாவகமும் தேசிய ஹாக்கி தேர்வாளர்களைக் கவர்ந்தன. 15 வயதிலேயே இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். மிக இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்த வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

முதல் தொடர்

தேசிய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படாமல் புதுமுக ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் பெஞ்சில் அமர வைக்கப்படுவார்கள். அதுவும் ஜூனியர் என்றால் ஆடும் வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். ஹெலனுக்கு இது போன்ற இடர்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை. 1992-ல் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனிக்குச் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

அந்தத் தொடரிலேயே இந்திய அணியின் கோல் கீப்பராக ஹெலன் மேரி அறிமுகமானார். எப்போதும் ஹாக்கி அணிக்கு இரண்டு கோல் கீப்பர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் எல்லாத் தொடர்களிலும் இரண்டு கீப்பர்களில் ஒருவராக ஹெலன் மேரியும் இடம்பிடித்துவந்தார்.

1992 முதல் அவர் ஹாக்கி விளையாடிவந்தாலும், 2002-ல்தான் ஹெலன் மேரிக்கு முதல் சர்வதேசப் பதக்கம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் சேலஞ்ச் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதுவே அவரது முதல் சர்வதேசப் பதக்கம்.

தடுப்பால் கிடைத்த தங்கம்

அதே ஆண்டில், மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று, மற்றுமொரு முக்கியமான சாதனையை இந்திய மகளிர் ஹாக்கி அணி படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், சவாலான கோணத்தில் இங்கிலாந்து அணி வீராங்கனையால் அடிக்கப்பட்ட ஒரு கோலை ஹெலன் மேரி தடுத்ததால்தான் இந்திய அணியின் அந்த வெற்றி உறுதியானது.

சர்வதேச அங்கீகாரம்

ஆப்ரோ - ஆசிய விளையாட்டுப் போட்டி, 2003-ல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிவரை ஹாக்கி அணி முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் பலம்மிக்க தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. தென் ஆப்பிரிக்க அணியைவிட சற்றுப் பலவீனமாக இருந்த இந்திய அணி பதக்கம் வெல்வது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஹெலன் மேரியின் உத்வேகம் அளிக்கும் ஆட்டம், மற்ற வீரர்களையும் தொற்றிக்கொண்டதால் அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் ஹெலன் மேரி என்றால் அது மிகையல்ல.

aadum kalam 2jpg

வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் அந்தத் தொடரின் இறுதியாட்டம் நீடித்தது. ஆட்டத்தின் இறுதியில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால், பெனால்டி மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பில் தென் ஆப்பிரிக்க அணி அடித்த இரண்டு கோல்களை அநாயாசமாகத் தடுத்தார் ஹெலன் மேரி. இந்திய அணியின் வெற்றிக்கு அவரது  கோல் தடுப்பே காரணம். இந்தத் தொடர் ஹெலனின் புகழைச் சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றது.

வலியை மீறிப் பெற்ற வெற்றி

2004-ல் டெல்லியில் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. ஆசியக் கோப்பை இறுதியாட்டத்தில் ஹெலன் மேரிக்குக் கைவிரலில் முறிவு ஏற்பட்டது. பொதுவாக, எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, முழு உடற்தகுதியோடு இருந்தால் மட்டுமே விளையாட முடியும். ஆனால், வலியை மீறி வலி நிவாரணி மருந்து ஐஸ் ஒத்தடத்துடன் ஹெலன் தொடர்ந்து விளையாடினார்.

அந்தப் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஜப்பான் வீராங்கனைகள் வெளிப்படுத்தினர். ஹெலன் அதை வலியுடனும் நாடு ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் சமாளித்தார். இந்திய அணியும் தங்கப் பதக்கம் வென்றது. ஆசியக் கோப்பையில் ஹெலன் மேரி பெற்ற முதல் தங்கப் பதக்கம் அதுவே. வலியைத் தாண்டி, தன்னம்பிக்கையுடன் ஹெலன் வெளிப்படுத்திய அந்த ஆட்டம் இன்றும் புகழப்படுகிறது.

ஓய்வுக்குப் பின்

கோல் கீப்பராக மட்டுமல்லாமல், சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் ஹெலன் மேரி இருந்துள்ளார். 2006-ல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருடன் ஹெலன் மேரி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 1992  முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் ஹெலன் மேரி 15 சர்வதேசத் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் தனதாக்கியுள்ளார். 2004-ல் மத்திய அரசு ஹெலன் மேரிக்கு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. 41 வயதாகும் ஹெலன் மேரி, ஹாக்கி நினைவுகளை அசை போட்டபடி ரயில்வே துறையில் தற்போது பணியாற்றிவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x