Last Updated : 25 Aug, 2018 11:09 AM

 

Published : 25 Aug 2018 11:09 AM
Last Updated : 25 Aug 2018 11:09 AM

இனிப்பு தேசம் 19: மாத்திரைக்குப் பதில் மூலிகையா..?

அதீத அச்சம் அல்லது அலட்சியம் என இரு துருவங்களுக்கு இடையே இன்று இனிப்பு தேசத்தில் அநேக இனிப்பர்கள் உள்ளனர். நீரிழிவு பற்றிய தெளிவான புரிதலின்மையே அதற்கு முதல் காரணம். தினம் ஊடகங்களில் பகிரப்படும் முரண்பாடான கருத்துகளும் இந்தக் குழப்பங்களுக்கு இன்னொரு காரணம்.

சில மருத்துவர்கள் பேச மறுக்கின்றனர். சிலரோ எப்போதும் எதையும் மறுத்துப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். உண்மை இதில் எங்கே ஒளிந்து நிற்கிறது?

மரபு மருத்துவம், பாரம்பரிய சித்த மருத்துவம்,  மூலிகைப் பயன் எனப் பல விஷயங்கள் குறித்த புரிதல்கள் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கும்போது, எல்லோருக்குமான முக்கிய கேள்வி… ஏற்கெனவே சாப்பிடும் மருந்துகளை நிறுத்திவிடலாமா? அல்லது அவற்றோடு இணைத்துச் சாப்பிடலாமா? இணைப்பதென்றால் எப்படி? தடாலடியாய் நிறுத்தினால், எக்குத்தப்பாய் ஏறும் ரத்தச் சர்க்கரையை, இந்த  மூலிகைகள் சரியாகக் கையாளும் திறன் படைத்தவையா என்பதுதான்.

ஒருங்கிணைந்ததே சிறந்தது

சில காலத்துக்கு, ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே சரியான தீர்வாய் இருக்க இயலும். ரத்தச் சர்க்கரையை செல்லுக்குள் செலுத்தும், நொதிகளைத் தூண்டும் நவீன மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நபர், அதைத் தடாலடியாக நிறுத்தும் பட்சத்தில், மீண்டும் அந்தச் செயலில், ஒரு திடீர் தொய்வு உண்டாகும்.

‘என்ன பிழை எனக்குள்?’ என உடலின் கோடானு கோடி அணுக்களும் புரிந்து, தன்னைத்தானே சீரமைக்க, நாம் கொடுக்கும் உணவு, மூலிகை, உளப் பயிற்சி, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உயிர் சுழற்சித் தூண்டல் என எல்லாவற்றின் மூலமாகத் திருத்தி அமைக்க சில காலம் ஆகும்.

அதுவரை, கட்டற்று நிற்கும் இனிப்புக்கு முதல்கட்டமாய் உடனடி  தீவிர நவீன  சிகிச்சையோ ஒருங்கிணைந்த சிகிச்சையோ கண்டிப்பாக அவசியம்.  அதன் பிறகு படிப்படியாய் மரபுக்கு மாறலாம். சில நேரம் கூட்டு சிகிச்சையே  நீண்ட நாளுக்கு அவசியப்படலாம்.

அதுதான் நவீனக் கூறுகள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறதே, பின்னர் எதற்கு மூலிகை எல்லாம்? இப்படிக்  கேட்போருக்கான பதில் இது: ரசாயனக் கூறுகள் கண்டிப்பாகக் குருதிச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். கூடவே மூலிகைகளும் செல்லும்போது, ரத்த நாளங்களின் அழற்சி தவிர்க்கப்படும். செல்லிடை தங்கும் ஆக்சிஜன் கூறுகள் நீக்கப்பட்டு (free radical scavenging) சர்க்கரை நோயின் நாள்பட்ட ஆபத்துகளை நீக்கும். கூடவே சோர்வும் வராதிருக்கப் பணியாற்றும்.

ஒருங்கிணைந்தால் பிழையில்லை

ரசம் சோறுகூட ஒரு மூலிகை உணவுதான். ரசம் சோற்றை ஆய்வு செய்து சொல்லும் வரை, அதில் சேரும் அத்தனை மணமூட்டிகளின் மருந்தறிவியல் புரியும்வரை காய்ச்சல் மருந்தோடு ரசம் சோறு சாப்பிடக் கூடாது என நாம் சொல்வதில்லை. காரணம் அனுபவம். ரசம், எந்தக் கேட்டையும் தராது என்ற நீண்ட கால அனுபவம்.

அதேபோல, இதுவரை உள்ள மூலிகை அனுபவத்தில், ஒருங்கிணைந்த சிகிச்சையால்  பிழை ஏதும் எங்கும் நடந்ததாய் தரவுகள் எவையும் இல்லை. அதற்காக, அப்படியே உட்கார்ந்துவிடாமல், சித்த மூலிகை மருத்துவப் பிரயோகம் அதிகமாகிவரும் வேளையில், இந்த மாதிரியான ஆய்வுகள் நிச்சயம் இங்கு முடுக்கப்பட வேண்டும். அதற்கு நவீனமும் மரபும் ஒருங்கிணைந்து யோசித்துப் பணியாற்ற வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறுவதை விட்டுவிட்டு, ஒன்றாய் நாம் எப்படி இந்த மக்களைக் காப்பாற்றலாம் என்ற சிந்தனை வலுக்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் இதுபோல் பல ஆய்வுகள் நடக்கின்றன. ‘மிளகுடன் ஆஸ்துமாவுக்கான ’தியோஃபிலின்’ சேர்த்துச் சாப்பிடும்போது தியோஃபிலின் வேகமாக உட்கிரகிக்கப்படுகிறது. ரத்தப் புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் ’மெர்காப்டபுரின்’ (mercaptopurine) கொடுக்கும்போது, நோய் பாதிக்கப்பட்டவர் பால் அருந்தக் கூடாது.  ‘வார்ஃபரின்’ (warfarin) சாப்பிடும்போது கீரை கூடவே கூடாது. வயாகராவைத் திராட்சைச் சாறுடன் சாப்பிடும்போது, மருந்து மந்தமாகவே வேலை செய்யும். மூக்கடைப்பு மாத்திரைகளை ஆப்பிள் பழத்துடன் சாப்பிட்டால் மருந்தின் உட்கிரகிப்பு குறையும் என்ற ரீதியில் பல ஆய்வுகள் வெளியாகி உள்ளன.

ஒன்று காலை… ஒன்று மாலை

தற்போதைக்கு நவீன மருந்துகளுடன், பரிந்துரைக்கப்படும் மூலிகை மருந்துகளுக்கும் ஓரிரு மணி நேர இடைவெளி அல்லது, ஒன்றைக் காலையில் சாப்பிட்டால், பிறிதொன்றை மாலையில் சாப்பிடும் வழியைக் கையாளலாம்.

நவீன மருந்துகள் எடுக்கும்போது,  காலை பானமாக ஆவாரைக் கசாயமோ நீரிழிவுத் தேநீரோ எடுப்பதும், உணவோடு பருப்புப் பொடி மாதிரி கறிவேப்பிலை, வெந்தயப் பொடியையோ போட்டுச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உணவுக்குச் சற்று முன்னதாக மதுமேக சூரணத்தை, காலையும் மாலையும் எடுப்பதில் எவ்விதத் தொல்லையும் வருவதில்லை. பெரு மருந்துகளை பயன்படுத்தும்போது மட்டும் இருதுறைசார் அனுபவமிக்க மருத்துவர்கள் ஒருங்கிணைந்து முடிவெடுக்கலாம்.

மறைந்த சித்த மருத்துவர் பேரா.செ.நெ.தெய்வநாயகம், மிக மூத்த காசநோய் சிகிச்சை மருத்துவர். இப்படியான நவீன- சித்த ஒருங்கிணைப்பில், காச நோயையும் எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. நோயையும் நலமாகக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பதை அறிவியல் உலகுக்கு நிரூபித்தவர். இப்போது இனிப்பு நோயைக் கட்டுப்படுத்துவதிலும்,  சில நிலைகளில்  இப்படியான ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே முழுமையாய் நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x